Last Updated : 11 Jul, 2025 09:33 AM

 

Published : 11 Jul 2025 09:33 AM
Last Updated : 11 Jul 2025 09:33 AM

இதயக் கோளாறுகளும் திறன்பேசிகளும்..!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஜெயதேவா இதயநோய் சிகிச்சைக்கான உயர்மருத்துவமனையில் திடீரென நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ஹசன் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அவர்கள் தங்களுக்கு இதயநோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும்படி மருத்துவர்களை வற்புறுத்தியதால், மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் நடுத்தர வயதைச் சேர்ந்த 22 பேர்இதயக் கோளாறால் மரணமடைந்து விட்டதாக வெளியான ஒரு அறிவிப்பின் அடிப்படையில், மக்கள் தங்களுக்கும் இதய நோய் இருக்குமோ என்ற பீதியில் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயதேயானபள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இதயக் கோளாறு ஏற்பட்டு சரிந்துவிழுந்து உயிரிழந்தது இன்னும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் இப்படி குவிந்ததால், அவர்களுக்கு இதய பரிசோதனை நடத்தமுடியாமல் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி மருத்துவர்கள் அவர்களை அனுப்பியுள்ளனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், இதயக் கோளாறு பாதிப்புகள் அதிகமாகி விட்டன என்ற வதந்தியும், இச்செய்திகளுடன் இணைத்தே பரப்பப்படுவதால் காட்டுத்தீயாக பரவி விடுகிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) கரோனா தடுப்பூசிக்கும், சமீபத்தில் பதிவாகும் இதயக்கோளாறுகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்று பலமுறை ஆய்வு நடத்தி, அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தாலும் அடிக்கடி குறைந்த வயதுடையோர் உயிரிழக்கும்போது இந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இளம் வயதினருக்கு ஏற்படும் இதயக் கோளாறு தொடர்பாக அரசு சார்பில் கூடுதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் பகலில் உறங்கி, இரவுநேரங்களில் கண்விழித்து ஊர் சுற்றுதல், நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரியாணி கடைகளை தேடிச் சென்று சாப்பிடுதல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்பதை இதுபோன்ற தருணங்களிலாவது உணர வேண்டும்.

கவனக்கூர்மையை சிதறடித்து எந்நேரமும் ஒரு படபடப்பிலேயே வைத்திருக்கும் வகையில் திறன்பேசிகளிலேயே இளைய தலைமுறையினர் மூழ்கிக் கிடப்பதும் இதுபோன்றபிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அமைதியற்ற ஒரு மனநிலையை உருவாக்கி தூக்கமின்மைக்கும் காரணமாவது திறன்பேசிகள் தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

கிட்டத்தட்ட ஒரு தியானத்திற்கு ஒப்பான, சிறப்பான மன அமைதிக்கு வழிவகுக்கும் வாசிப்பு பழக்கம் மெல்ல மெல்ல குறைந்துபோய், வேண்டாத படபடப்பிற்கும் பரபரப்பிற்கும் ஆளாக்கும் திறன்பேசிகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதை இளைய சமுதாயம் குறைத்துக் கொள்வதே இதயக் கோளாறுகளில் இருந்து அவர்களை மீட்பதற்கான ஒரு நல்ல வழிமுறையாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x