Published : 10 Jul 2025 06:53 PM
Last Updated : 10 Jul 2025 06:53 PM
இந்திய துணைக்கண்டம் பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சாதிகளின் அடிப்படையில் அமைந்தது. மக்களிடையே எப்போதுமே ஒற்றுமை மனப்பான்மை மேலோங்கி இருக்கும். இந்திய நாட்டின் ஒற்றுமை என்றுமே ஒருமுகத்தன்மையின் அடிப்படையில் அமைந்ததில்லை. மாறாக, இந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவதத்தின் அடிப்படையில், பன்முகத்தன்மையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட நாடாகும்.
நம்முடைய முன்னோர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தபோது, மத்திய - மாநிலங்களுக்கு இடையே ஆட்சி அமைப்பிலும், நிர்வாக முறைகளிலும் கருத்து வேறுபாடுகளை எதிர்பார்த்தனர். ஆகவே, தொலைநோக்கு பார்வையுடன், பரஸ்பர உரையாடல், நம்பிக்கை, கூட்டாட்சி நிர்வாகம் அடிப்படையிலான நிர்வாக முறையை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற ஜனநாயக உத்தரவாதம் அமைத்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியியல், கலாச்சார மற்றும் பிராந்திய தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் நமது கூட்டாட்சி அமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகள் தற்போது, பல்வேறு நிலைகளில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு கடந்த சில கால நிகழ்வுகளை உதாரணமாக்கலாம். ஆளுநர்களின் செயல்பாடு, நிதி ஒதுக்கீடு, மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய கொள்கை உருவாக்கம் போன்றவற்றின் மூலம், கூட்டாட்சிக்கான இடம் குறுகி வருகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்வி, நல வாழ்வு, வேளாண்மை ஆகியவற்றை பற்றிய கொள்கை முடிவுகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் முக்கிய பொறுப்பு ஆகும். எனினும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இவை தொடர்பான பல கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக வகுத்து திணிக்கிறது. திட்டங்களை நேரடியாக அமலாக்கப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. இது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மட்டும் அல்லாமல், மக்களாட்சி பண்பாடுகளுக்கும் சவாலாக உள்ளது.
மத்திய அரசு ஓர் ஒத்துழைப்பாளராகக் செயல்படுவது குறைந்து, ஒரு கட்டுப்பாட்டாளராக மாறி வருகிறது. இந்தக் கருத்து மக்கள் இடையேயும், மாநில அரசியல் கட்சிகளுக்கும் மேலோங்கி இருக்கிறது. உதாரணமாக, தேசிய கல்விக் கொள்கை முழுமையாக மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. இதனை மத்திய அரசு வகுத்தபோது மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற பல மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள், நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசின் மொழித் திணிப்பு என்பது மற்றொரு தவறான பாதையாகும். தமிழ்நாடு எப்போதும் மாநில உரிமைகளுக்காக போராடும் மாநிலம். இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழிப் போர், கல்வி கொள்கைகள் எனப் பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறது. பாடத்திட்டம் மற்றும் நிர்வாகத்தில் இந்தியைத் திணிப் பதற்கான வரைவுத் திட்டங்களை மத்திய அரசு அமலாக்குகிறது.
குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் மத்திய ஆட் சேர்ப்புத் தேர்வுகள் போன்ற நடவடிக்கைகள், கலாச்சார மையப்படுத்தலாகக் கருதப்படுகின்றன. இதனால், தங்கள் மொழியியல் அடையாளத்தில் பெருமை கொள்ளும் பகுதிகளில் அந்நியப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் கலாச்சாரங்களை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
‘ஒரு நாடு, ஒரு வரி’ என்பதை உறுதியளித்து, 2017-ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி. இது, மாநில வருமானத்தின் மீது பெரும் கட்டுப்பாடுகளை விதைத்து, இன்று மாநிலங்களின் சுயாட்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையாக மாறியுள்ளது. தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு தாங்கள் வழங்கும் வரிக் கொடைகளுக்கேற்ப நியாயமான பகிர்வு கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றன.
கரோனா காலத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கு நிதி வழங்குவது காலதாமதம் ஆகின்றன. தற்போது மத்திய அரசின் விருப்பத்தில் மட்டுமே நிதி பகிர்வு நடைபெறுகிறது. மத்திய வரிகளைப் பகிர்ந்தளிப் பதற்கான நிதி ஆணையத்தின் வழிமுறை, மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகின்றன.
தற்போது இந்த நிலை, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது, சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடுகளில் வெற்றி பெற்ற மாநிலங்களின் நல்லாட்சியை ஊக்கப்படுத்தாத தடைக்கல்லாக மாறியிருக்கிறது. இது பெரும்பாலும் வளர்ச்சி செயல் திறனை வருங்காலத்தில் பாதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் ஒப்புதலுக்கு அதன் ஆளுநர்கள் தாமதம் செய்கின்றனர். அது கூட்டாட்சி அமைப்பு குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. ஆளுநர்கள் அரசியல் காவலர்கள் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், எந்தவொரு முறையான பொறுப்புக்கூறல் வழிமுறையும் இல்லாமல் பிரச்சினை நீடிக்கிறது.
சமீபத்தில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 10-ஆவது கூட்டம் நடைபெற்றது. இது, மத்திய - மாநில உறவுகளின் முக்கிய கொள்கைகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. ‘டீம் இந்தியா’ அணுகுமுறைக்கான பிரதமரின் அழைப்பு, கூட்டாட்சியின் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஊக்கமளிக்கும் தொனியில் இருந்தது.
எனினும், நடைமுறையில் இந்த அறிக்கையை உண்மையில் செயல்படுத்துவது குறித்து சில மாநிலங்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றன. மத்திய வரி வருவாயில் 50 சதவிகிதப் பங்கைத் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோருகிறார். இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேற வேண்டுமெனில் மாநிலங்களை சமநோக்கோடு பார்க்கும் எண்ணம், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு தேவை.
மாநிலங்களின் விருப்பங்களையும், தேவைகளையும் யதார்த்தங்களையும் கணக்கில்கொண்டு முடிவெடுப்பது பரவலாக்கப்பட வேண்டும். மாநில - மத்திய அரசுகள் பங்குதாரர்களாகக் செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் போன்ற நிறுவனங்களை மீட்டெடுத்தல் வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் ஓர் உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்கும் அமைப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கியமான படிகளாகும். நிதி சீர்திருத்தங்கள் தேவைகள் அடிப்படையிலான ஒதுக்கீட்டைத் தாண்டி, நிர்வாகத் திறன், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆளுநர்களின் பங்கிற்கு அரசியலமைப்பு தெளிவு மற்றும் அதிகார வரையரம்பு நிர்ணயிக்கப்பட மறுபரிசீலனை அவசியம். மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையில் இப்போது தளர்ந்து வருகின்ற நம்பிக்கை கவனிக்கப்பட வேண்டும். இதை செய்யாவிட்டால், அது நிர்வாகச் செயலிழப்புக்கு மட்டுமல்ல, ஆழமான ஜனநாயகப் பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும்.
இந்த சமிக்ஞைகளை அச்சுறுத்தல்களாக அல்ல, மாறாக எச்சரிக்கைகளாக மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவிலே இருந்தாலும், திராவிட நாடு அல்லது வடகிழக்கு மாநிலங்களில் பிராந்திய சுயாட்சி போன்ற குரல்கள் மறுபடியும் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலை இது ஏற்படுத்துகிறது.
மொழி பற்றிய விவாதங்கள் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி வருகிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு அரசியல் முதிர்ச்சி தேவை. மத்திய மாநிலங்களிக்கிடையே ஓர் ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டாண்மையாக உருவாக வேண்டும். மத்திய அரசு தீர்மானிக்கும் கொள்கை களை செயல்படுத்துபவர்களாக மட்டும் இல்லாமல், ஆலோசகர்களாகவும், உருவாக்குபவர்களாகவும் மாநிலங்கள் இருக்க வேண்டும்.
மத்திய - மாநில குரல்கள் இரண்டும் சேர்ந்து ஒலித்தால்தான் நாம் உண்மையிலேயே கூட்டுறவு மற்றும் உள்ளடக்கிய கூட்டாட்சியை உருவாக்க முடியும். இந்தியா போன்ற சிக்கலான ஒரு நாட்டுக்கு கூட்டாட்சி அமைப்பு என்பது விளம்பரத் தேவை கிடையாது. அரசியலமைப்பு ரீதியான ஓர் அடிப்படை தேவை. நம்முடைய முன்னோர்களிடையே இந்திய கூட்டாட்சி பற்றிய ஸ்தாபகக் கண்ணோட்டம் தெளிவாக இருந்தது. அதனை ஒரு நிர்வாக வழிமுறை என்று எடுத்துக்கொள்ளவில்லை, குடியரசின் அடித்தளமாகவே எடுத்துக்கொண்டார்கள்.
ஒரு வலிமையான மத்திய அரசும், சிறந்த சுயாட்சியை கொடுக்கக் கூடிய மாநில அரசுகளும் ஒரே நேரத்தில் இயங்க முடியும். இது நல்ல நிர்வாகத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வெற்றியுமாகும். இந்த லட்சியத்தை மீட்டெடுப்பது வெறும் சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல, அது ஓர் அரசியல் தேவை. பன்முகத் தன்மையை மதித்து, மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல. இந்தியா ஒன்றுபட்டு இருக்க கட்டாயத் தேவை. இதை மத்திய அரசு புரிந்துகொண்டு நடப்பது நாட்டுக்கு அவசியம்.
- ஏஸ்.வி.ரமணி, கட்டுரையாளர் - காங்கிரஸ் ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT