Published : 09 Jul 2025 06:40 AM
Last Updated : 09 Jul 2025 06:40 AM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நகை திருடப்பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல் துறையால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றம், அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்கிறது” எனச் சாடியது.
அஜித் குமாரின் மரணம், நாட்டில் அரங்கேறும் காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல் துறையினரால், பட்டியில் சாதி மக்கள் கூடுதலாக இலக்காக்கப்படுவதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
காவல் மரணங்கள்: கைது செய்யப்பட்ட ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நிகழும் மரணங்கள் காவல் மரணங்கள் என அழைக்கப்படுகின்றன. கைதுசெய்யப்பட்ட நபர் மீது காவல் துறையினர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மனரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் காவல் மரணங்கள் நிகழ்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21, எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ பறிக்கக் கூடாது எனக் கூறுகிறது. இதன்படி, காவல் துறையினால் அத்துமீறி நடத்தப்படும் காவல் மரணங்கள் சட்டப்படி குற்றச் செயலாகவே கருதப்படும்.
தமிழகத்தில்: தமிழ்நாட்டில் காவல் துறையினரின் அத்துமீறல்களுக்கு நீண்டகால வரலாறு இருப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாடாளுமன்றத் தரவுகளின்படி, 2016-17 முதல் 2021-22 (மார்ச் 31, 2022) வரை, தமிழ்நாட்டில், நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் விசாரணையில் இருந்தபோது 490 பேர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
2016-17 முதல் 2021-22 (மார்ச் 30, 2022) வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மேற்கூறிய காலக்கட்டத்தில் இங்கு 2,630 காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. தென்னிந்தியாவில் காவல் மரணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
காவலர்கள் தண்டிக்கப்படுவதில்லை: காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பாக, ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டில் 2017 – 2022இல் பதிவான காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவல் துறை அதிகாரியும் இதுவரையும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும், இதே காலக்கட்டத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களுக்கு எந்தக் காவல் துறை அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை.
உதாரணத்துக்கு, இந்தியாவில், 2017-2022 காலக்கட்டத்தில், காவல் நிலையங்களில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக, 345 நீதித் துறை விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மரணங்கள் தொடர்பாக 123 போலீஸார் கைது செய்யப்பட்டனர்; இதில் 79 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு காவலர்கூட குற்றவாளி எனத் தண்டிக்கப்படவில்லை.
2017 - 2021 வரையில், காவல் நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்துத் தமிழ்நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வழக்குகள் தொடர்பாக எந்த ஒரு காவலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை / தண்டனை விதிக்கப்படவில்லை. காவல் மரணங்கள் தொடர்பான வழக்குகளில் மட்டுமல்ல, மனித உரிமை மீறல் வழக்குகளிலும் காவல் துறையினருக்குத் தண்டனை கிடைப்பது அரிது.
இந்தியாவில் 2017-2022க்கு இடையில் மனித உரிமை மீறல்களுக்காகக் காவல் துறையினருக்கு எதிராக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 41 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இதில் மூன்று பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பட்டியல் சாதியினர்: இந்தியாவில் காவல் துறை சித்திரவதைகளில் பெரும்பாலும் பட்டியல் சாதி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் இது அதிகம். மேலும், தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சட்டபூர்வமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களில், பெரும் பாலானவர்கள் பட்டியல் சாதியினராகவே உள்ளனர்.
2022 நிலவரத்தின்படி, இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக நபர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்நாட்டில் தடுப்புக் காவலில் உள்ள 2,129 பேரில் 38.5% பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்; தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் பட்டியல் சாதி மக்கள் 20% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 546 பேரில் 1.1% பேர் பட்டியல் சாதியினர். குஜராத்தில் 334 பேரில் 9.6% பேர் பட்டியல் சாதியினர். ஹரியாணாவில் 235 பேரில் 1.3% பேர் பட்டியல் சாதி மக்கள். உத்தரப் பிரதேசத்தில் தடுப்புக் காவலில் உள்ள 172 பேரில் 7.6% பேர் பட்டியல் சாதியினர் எனத் தெரியவந்திருக்கிறது.
சட்டப் பாதுகாப்பு: கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் காவல் துறை அதிகாரிகளுக்குச் சில வரம்புகளை இந்தியச் சட்டங்கள் விதிக்கின்றன. அதன்படி, கைது செய்யப்பட்ட நபருக்கு அவரது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 56, 57இன் படி, கைதுசெய்யப்பட்ட நபர் தாமதமின்றி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
அதாவது, அதற்கான கால இடைவெளி 24 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 22(1)இன்படி, கைதுசெய்யப்பட்ட எவரும் தங்கள் விருப்பப்படி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், மருத்துவரை அணுகவும் உரிமை உண்டு.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 22, சட்டவிரோதமான கைதிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. இதன்படி, காவலில் உள்ள கைதிகளின் பாதுகாப்புக்கு நீதிபதியே பொறுப்பு. ஆனால், நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நீதித் துறையிலிருந்து மக்களுக்குக் கிடைப்பதில்லை.
மேலும் காவல் மரணங்களை விசாரிப்பதில் நீதித் துறை மெத்தனமாகச் செயல்படுவதால், குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிக்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸார் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
மாற்றங்கள் தேவை: காவல் துறையில் தொடரும் வன்முறைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமை, மனநல ஆரோக்கியம் போன்றவை அடித்தளமாக இருக்க வேண்டும். நவீனப் புலனாய்வு நுட்பங்களில் காவல் துறையில் போதிய பயிற்சி இல்லாததால், வழக்குகளில் உண்மையைக் கண்டறிய காவலர்கள் பெரும்பாலும் வன்முறையையே கையில் எடுக்கின்றனர். இவற்றைத் தவிர்க்க வழக்குகளில் அறிவியல்பூர்வமான செயல்முறைகளில் இறங்கக் காவலர்களுக்குப் போதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
அரசியல் / அதிகாரம், சாதிய அழுத்தங்களுக்கு அடிபணிந்து காவல் துறையினர் செயல்படாத வகையில் கண்காணிக்கப்பட வேண்டும்; கண்காணிப்புக் கேமராக்கள் காவல் நிலையங்களில் கட்டாயமாக்கப்பட வேண்டும். காவல் துறையின் சித்திரவதையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்குவது மட்டுமல்லாமல், நியாயமான விசாரணையும், அத்துமீறியவர்களுக்கான தண்டனைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT