Published : 09 Jul 2025 08:20 AM
Last Updated : 09 Jul 2025 08:20 AM
மும்பை நகரில் ‘கபூதர் கானா’ என்று சொல்லப்படும் புறாக்களுக்கு உணவளிக்கப்படும் இடங்களை மூடும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பறவை ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனது உறவினர் ஒருவர் புறாக்களின் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை மகாராஷ்டிர மாநில அரசு எடுத்துள்ளது. மும்பையில் நீண்ட நெடுங்காலமாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. அவை அங்குள்ள மக்களின் வரலாறு மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய பறவையாக இருந்து வருகிறது.
தாதர், கடற்கரை சாலை, கிர்காம் சவுபதி,கேட்வே ஆப் இந்தியா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 51 இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 3,000 முதல் 4,000 புறாக்கள் பொதுமக்கள் அளிக்கும் தானியங்களை உண்பதற்காக இங்கு வருகின்றன. இந்த இடங்களை திடீரென மூட உத்தரவிடுவது வாயில்லா பறவைகள் மீது திடீரென போர் தொடுப்பதைப் போன்ற நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
புறாக்கள் வெளியிடும் எச்சங்கள், இறகுகள், கூடுகட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மூலம் பாக்டீரியா, வைரஸ் தொற்று ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. எச்சங்களில் உள்ள பூஞ்சைகள் மூலம் Hypersensitivity Pneumo nitis(HP) எனும் மூச்சுக்குழாய் தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், சமீபகாலமாக மும்பையில் பலருக்கு இந்த தொற்று ஏற்பட்டு வருவதாகவும் எழுந்த குற்றச்சாட்டையடுத்து புறாக்களுக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
கிர்காம் சவுபதி போன்ற இடங்களில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை புறாக்கள் உண்ணப் பழகி விட்டதும் காரணமாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பறவை ஆர்வலர்கள், இச்செயலை சட்டப்பூர்வமாக சந்திக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புறாக்களுக்கு அதிகப்படியான உணவுகளை வழங்கி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் அவை பெருக காரணமாக இருப்பது மனிதர்கள் தான்.
கடைசியில், புறாக்களின் மீது பழிபோட்டு திடீரென ஒருநாள் உணவு வழங்கும் இடங்கள் அனைத்தையும் மூடப் போவதாக அறிவிப்பது நியாயமற்றது. நாய்கள் மீதும் இதேபோன்ற மனப்போக்கு மக்களுக்கு உண்டு. நாய்களுக்கு ஆங்காங்கேஉணவளித்து அதன் எண்ணிக்கை அதிகமான பிறகு நாய்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த பூமி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதர்கள் வாழ்வதற்கு இருக்கும் உரிமையைப் போன்று, அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு. மற்ற உயிர்களை விட மனிதர்கள் தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு மற்றவற்றை அழிக்க முயல்வது இயற்கைக்கு புறம்பானதாகும்.
அசுத்தமான இடங்களை சுத்தம் செய்வதன்மூலம் நோய்க் கிருமிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரின சமநிலை மாறும்போது, குறிப்பிட்ட விலங்கு அல்லது பறவைகளை கட்டுப்படுத்த தேவையான நியாயமான நடவடிக்கைகளை எடுக்கலாமே தவிர, எந்த உயிர்களையும் அழிக்கும் முயற்சியில் இறங்குவதை இயற்கை ஒருபோதும் ஏற்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT