Last Updated : 08 Jul, 2025 06:52 AM

7  

Published : 08 Jul 2025 06:52 AM
Last Updated : 08 Jul 2025 06:52 AM

தொகுதி மறுவரையறை அரசியல்: பாஜக வழியில் செல்கிறதா திமுக?

மக்களாட்சியில், அனைவருக்கும் ஒரே மதிப்புடைய வாக்கு இருப்பதை உறுதிசெய்கிறது இந்திய அரசமைப்பு. அந்த வகையில், நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடையே உள்ள மக்கள்தொகை வேறுபாட்டின் காரணமாக வாக்குகளின் மதிப்பு மாறுபடக் கூடாது என்பதற்காகத் தொகுதி மறுவரையறை என்பது அவசியமாகிறது. இந்தத் தொகுதி மறுவரையறையை 2026க்குப் பிறகான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி செய்ய வேண்டும் என்கிறது அரசமைப்பின் 84ஆவது சட்டத்திருத்தம்.

இந்​நிலை​யில்​தான், மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, “மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு தாமதம் என்பது ஒரு விபத்​தல்ல. தொகுதி மறுவரையறைத் திட்டம் தற்செய​லானதும் அல்ல. பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பையும் அதைத் தொடர்ந்து வரும் தொகுதி மறுவரையறையையும் செயல்​படுத்துவதில் ஒரு மோசமான வடிவமைப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்​டா​லின்.

அதேநேரத்​தில், தமிழ்​நாட்​டிலும் திமுக தலைமையிலான மாநில அரசு இதையேதான் உள்ளாட்​சிகளுக்குச் செய்து​வரு​கிறது. இதை ஸ்டாலின் வார்த்தை​யிலேயே சொல்ல வேண்டும் என்​றால், “28 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தாமதம் என்பது ஒரு விபத்​தல்ல. தொகுதி மறுவரையறை என்பதை அதற்குக் காரணமாக உயர் நீதிமன்​றத்தில் கூறித் தீர்ப்புப் பெற்றதும் தற்செய​லானது அல்ல” என்றுதான் கூற வேண்டும்.

ஆளுங்​கட்​சிகளின் திட்டங்கள்: தொகுதி மறுவரையறையைப் பொறுத்​த வரை​யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதுபோல் விகிதாச்சார அடிப்​படையில் (pro-rata) நாடாளு​மன்றத் தொகுதி​களின் எண்ணிக்கையில் (543) மாற்றம் இல்​லாமல் மறுவரையறை செய்யப்​பட்​டால், பிஹாருக்கு 10, உத்தரப் பிரதேசத்​துக்கு 11 தொகுதிகள் அதிகரிக்​கலாம்; தமிழ்​நாடு, கேரளத்​துக்கு 8 தொகுதிகள் குறைய​லாம்.

அதுவே தொகுதிகள் 848 என்று அதிகரிக்​கப்​பட்டால் பிஹாருக்கு 39, உத்தரப் பிரதேசத்​துக்கு 63 தொகுதிகள் அதிகரிக்​கலாம்; கேரளத்​துக்கு மாற்றம் இருக்​காது; தமிழ்​நாட்டுக்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இது உள்ளபடி மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்திய மாநிலங்​களுக்குப் பிரதி​நி​தித்துவம் குறைவதையே காட்டு​கிறது என்பதே தென்னிந்திய மாநிலங்​களின் கவலையாகும்.

அதேவேளை​யில், அடுத்து​வரும் மாநிலத் தேர்தலைக் கணக்கில் கொண்டு 28 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்​ப​தற்கு உள்ளாட்​சிகளின் தொகுதி மறுவரையறையைக் காரணமாக திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. 28 மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்ளாட்சி அரசுகளின் பதவிக்​காலம் ஜனவரி 5 உடன் முடிவடைந்தது.

அரசமைப்புச் சட்டப்​படி​யும், உச்ச நீதிமன்றத் தீர்ப்​பின்​படியும் ஜனவரி மாதமே தேர்தல் நடத்தி முடிக்​கப்​பட்டு, புதிய உள்ளாட்சி அரசுகள் பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அரசு இதுவரை வெளிப்​படையாக அறிவிக்க​வில்லை. ஏற்கெனவே 2016இல் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்​ததற்குப் புதிதாகப் பிரிக்​கப்பட்ட மாவட்​டங்​களில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டி​யுள்ளது என்பதையே காரணமாகக் காட்டியது.

பிறகு, 2019இல் புதிதாகப் பிரிக்​கப்பட்ட 9 மாவட்​டங்கள் தவிர, பிற மாவட்​டங்​களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்தியது. பிறகு, ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மீதமுள்ள 9 மாவட்​டங்​களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை​யும், அனைத்து மாவட்​டங்​களுக்கான நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கான தேர்தலையும் நடத்தியது.

அப்போது, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்​கப்பட்ட இடங்களில் திமுக​வினரே நின்று வென்றது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்​தியது. முதல்வர் ஸ்டாலின், தன் கட்சிக்​காரர்​களின் இச்செய்​கை​யால், தான் குற்றவுணர்வில் குறுகி நிற்ப​தாக​வும், உடனே அவர்கள் பதவி விலகித் தன்னைச் சந்திக்​கு​மாறும் அறிக்கை வெளியிட்​டார்.

இதே நிலைமை இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வந்து​விடக் கூடாது என்றும், இது வருகின்ற மாநிலத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்​கிணைந்த செயல்​பாட்டைப் பாதிக்கும் என்றும் கருதியே, 28 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் முடிந்​தவுடன் நடத்திக்​கொள்வது என்று திமுக தலைமை முடிவெடுத்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இது அரசமைப்புச் சட்டத்​துக்கு எதிரானது. மேலும், மீதமுள்ள 9 மாவட்ட உள்ளாட்​சிகளின் பதவிக்​காலம் முடிந்து ஒரே தேர்தலாக நடத்துவோம் என்று திமுக அரசு இதுவரை கூறவில்லை.

நிர்வாகப் பின்னணி: 2016-2019 அதிமுக ஆட்சியைப் போன்றே, திமுகவும் உள்ளாட்சித் தேர்தலைச் சட்ட பூர்​வ​மாகத் தள்ளிப்​போடு​வதற்குத் தொகுதி மறுவரையறையையே காரணமாகப் பயன்படுத்​தி​யிருக்​கிறது. அதாவது, டிசம்பர் 18, 2024இல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு அமல்படுத்​தப்பட வேண்டும் என்று முனியன் என்பவர் டிசம்பர் 20இல் உயர் நீதிமன்​றத்தில் வழக்குத் தொடர்ந்​தார்.

இந்த வழக்கு அடுத்த நாளே விசாரணைக்கு வந்து, ‘முறை​யாகத் தொகுதி மறுவரையறை செய்யப்​பட்டு இடஒதுக்​கீடுகள் தரப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற தீர்ப்பும் வழங்கப்​பட்டு​விட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்​சிகளின் பதவிக்​காலம் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 31), ஏறக்குறைய 376 கிராம ஊராட்​சிகளை நகர்ப்புற உள்ளாட்​சி
களாக மாற்ற​விருப்பதாக அரசு அறிவித்தது.

எப்படி நாடாளு​மன்​றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் குறைக்​கப்பட வாய்ப்புள்ளதோ அதுபோல 376 ஊராட்​சிகளின் பிரதி​நி​தித்து​வமும் சுருக்​கப்பட உள்ளது. அதாவது, 376 ஊராட்சி அரசுகள் கலைக்​கப்​பட்டு அவை நகர்ப்புற உள்ளாட்​சியின் தொகுதிகளாக (Ward) மாற்றப்பட உள்ளன. இந்த நகரமய​மாக்கல் முடிந்து முறையாகத் தொகுதி மறுவரையறை செய்யப்​பட்டுத் தேர்தல் நடத்தப்​படும் என்கிறது அரசு.

அதாவது, இரண்டு வாரங்​களில் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்​றப்​படு​கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் (W. P (CIVIL) NO. 278 OF 2022), தொகுதி மறுவரையறையைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது எனவும், மாநிலத் தேர்தல் ஆணையமோ, மாநில அரசோ, ஏன் உச்ச நீதிமன்​றமோகூட இதை மீற முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி​ உள்ளது குறிப்​பிடத்​தக்கது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்களின்படி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையில் தொகுதி மறுவரையறைக் குழு உருவாக்​கப்​பட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்து​வதற்கானகால அட்டவணை​யுடன் கூடிய ஒரு கடிதம் ஜூன் 21, 2024 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்​பப்​பட்​டுள்ளது.

இதில் நகர மய​மாக்கல், தொகுதி மறுவரையறை பற்றிய விவரங்களை அரசு அளித்​தவுடன் ஆகஸ்ட் 1க்குள் மறுவரையறையை முடித்து​விடுவோம் என்றும், அதைச் சரிபார்த்து இறுதி செய்வதற்கு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 1 வரை ஆகும் என்றும், இடஒதுக்​கீட்டுச் செயல்பாடு நவம்பர் 1 முதல் நவம்பர் 15க்குள் முடிந்து​விடும் என்றும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

மாநில அரசின் கடமை: உள்ளாட்சித் தேர்தல் நடத்து​வதற்கான அனைத்துச் செயல்​பாடு​களை​யும், 95 நாள்களுக்குள் அதாவது நவம்பர் 15க்குள் முடித்து​விடுவோம் என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் கூறப்​பட்​டுள்ளது. ஆனால், இந்தக் கடிதத்தின் மீது அரசு எந்தவொரு முடிவையும் எடுக்க​வில்லை என்பது வெளிப்​படை​யாகத் தெரிகிறது.

இதுபோன்று உள்ளாட்சித் தேர்தலை நடத்து​வதில் மாநிலத் தேர்தல் ஆணையம் சுதந்​திர​மாகச் செயல்பட வேண்டும் என்றும் அதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை​யெனில் தேர்தல் ஆணையம் உயர்/ உச்ச நீதிமன்​றங்களை அணுகலாம் என்றும் (Civil Appeal No. 5756 of 2005) ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்​பிடத்​தக்கது.

இதன் அடிப்​படையில் மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்ல​வில்லை. இதிலிருந்து தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்தே உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்​போட்​டுள்ளன எனக் கூறப்​படும் காரணத்தைப் புறந்தள்ள முடியாது.

உள்ளாட்சி அரசுகள் கடைக்கோடி மக்களுடன் தொடர்​புடைய அவர்களுக்கு நெருக்கமான அரசாங்கம் ஆகும். ஒன்றிய/ மாநில அரசுகளின் சட்டங்​களையும் திட்டங்​களையும் திறம்படச் செயல்​படுத்தி, அதை மக்களுக்குக் கொண்டுசேர்ப்​பதில் உள்ளாட்சி அரசுகளே முக்கியப் பங்கு வகிக்​கின்றன. எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, கட்சி நலன் சார்ந்து முடிவெடுக்​காமல், மக்கள் நலன் சார்ந்து முடிவெடுத்து மக்களின் அவலத்தைத் தீர்ப்​பதற்கு திமுக அரசு முன்வர வேண்டும்​.

- தொடர்புக்கு: vinoth.sar@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x