Published : 06 Jul 2025 09:55 AM
Last Updated : 06 Jul 2025 09:55 AM

இந்திய ஒற்றுமைக்காக வி.பி.மேனன் சமர்ப்பித்த திட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 36

இந்திய அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நேரு | உள்படங்கள்: வி.பி.மேனன், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் மகாசபைக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இரு கட்சிகளும் எந்த விஷயம் குறித்தும் ஒத்துப்போகவில்லை. இதனால், இந்தியாவின் பல பகுதிகளில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

“ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க மிகவும் பொருத்தமான அரசு அல்லது அரசுகளை நாங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை எங்களுக்கு ஏற்படும். இப்போதைய மாகாண அரசுகளையோ அல்லது இந்தியாவின் ஒருசில பகுதிகளுக்கான ஒருவகைக் கூட்டு அரசுகளையோ நாங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கக் கூடும்” என்று பிரிட்டிஷ் அரசின் நிலையை சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அறிவித்தார்.

முட்டுக்கட்டையான நிலையிலிருந்து மீளும் பொருட்டு, காங்கிரஸ் மகாசபையும், முஸ்லிம் லீக்கும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்கத் தனி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழுவை மவுண்ட் பேட்டன் பிரபு நியமித்தார். இந்தியா பல சின்னஞ்சிறிய நாடுகளாக உடைந்து சிதறி விடும் அபாயம் அப்போது உண்மையிலேயே தோன்றியது.

அந்த நேரத்தில் ஆற்றல்மிக்க அதிகாரியான வி.பி.மேனன், வைஸ்ராயிடம் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். இந்தியாவுக்கு ஒன்று, பாகிஸ்தானுக்கு மற்றொன்று என்ற அளவில் இரு அரசியல் நிர்ணய சபைகளுடன் கூடிய இரண்டு அரசுகளை உருவாக்க மேனனின் திட்டம் வகை செய்தது.

இந்தத் திட்டத்தை வைசிராயிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னர், சர்தார் வல்லபாய் படேலுடன் மேனன் ஆலோசனை செய்தார். இந்தத் திட்டத்துக்குப் படேல் தமது சம்மதத்தைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டது. மேனனின் திட்டத்துடன் மவுண்ட் பேட்டன் லண்டனுக்குச் சென்று, அந்தத் திட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரத்தைப் பெற்றார். இந்தத் திட்டத்தின்படி இந்தியாவுக்கு ‘டொமினியன்’ அந்தஸ்து மட்டுமே கிடைத்திருக்கும். (குடியேற்ற அந்தஸ்து உள்ள நாடே ‘டொமினியன்’ என்று அழைக்கப்படுகிறது).

“இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்களுக்கும் மவுண்ட் பேட்டன் பொதுவான கவர்னர் ஜெனரலாக இருப்பார். இரு நாடுகளின் ராணுவப் படைகளும் ஒரே தலைமையின் கீழ் இருக்கும்” என்றும் மேனன் திட்டம் வகை செய்தது. எனினும், இந்தத் திட்டம் அமல் செய்யப்படவிருந்த முக்கியமான தருணத்தில், இரு டொமினியன்களுக்கும் பொதுவான கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டனைத் தம்மால் ஏற்க முடியாது என்று ஜின்னா அறிவித்துவிட்டார். ராணுவப் படைகள் இரு நாடுகளுக்கும் இடையே தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் ஜின்னா வற்புறுத்தினார்.

அந்த நிலையில், இந்தியப் பிரிவினை தவிர்க்க இயலாததாக ஆகியது. இந்தியா தனது ஐக்கியத்தை இழந்து சுதந்திரம் பெற்றது.
இந்தியத் தாயகம் துண்டாடப்படுவதை மகாத்மா காந்தி எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் காரியக் கமிட்டி காந்திஜியின் கருத்தை ஏற்கவில்லை. பிரிவினையின் அடிப்படையில் சுதந்திரத்தை ஏற்க அது முடிவு செய்தது. அந்த முடிவு குறித்து மகாத்மா காந்தி மிகவும் வருத்தம் அடைந்தார். இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க அவர் கடைசி கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

ஐக்கிய இந்தியாவின் பிரதம மந்திரியாக ஜின்னாவே இருக்கட்டும் என்று கூட மகாத்மாஜி குறிப்பிட்டார். ஆனால் அதைக் காங்கிரஸ் கட்சியும், ஜின்னாவும் ஏற்கவில்லை. இவ்வாறு, இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றது; அதே சமயம் அது இரண்டாகத் துண்டாடப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையில் நேருஜி உரை

சுதந்திர இந்தியாவின் உதயத்தைக் குறிக்கும் மிகச் சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவுக்கு முன்னர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற மத்திய ஹாலில் திரளுமாறு கூறப்பட்டார்கள். இரவு 11 மணி அளவில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டம் தொடங்கியது. சுசேதா கிருபளானி ’வந்தே மாதரம்’ கீதத்தைப் பாடினார். பாபு ராஜேந்திரப் பிரசாத் தலைமை உரை நிகழ்த்தினார். பின்னர், கீழ்க்கண்ட தீர்மானத்தை நேருஜி முன்மொழிந்தார்:

“நள்ளிரவு 12 மணி அடித்ததும், இங்கே கூடியுள்ள அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவரும் கீழ்க்கண்ட பிரதிக்ஞையை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு வராத உறுப்பினர்கள், அடுத்த படியாக அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் இந்தப் பிரதிக்ஞையை ஏற்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று நேருஜி தீர்மான வாசகங்களைப் படித்தார்.

“இந்திய மக்கள், துன்ப துயரங்கள், தியாகங்கள் மூலம் சுதந்திரத்தை அடையும் இந்தப் புனிதமான நேரத்தில், இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினனான... என்ற பெயர் கொண்ட நான், தொன்மைசால் பாரத தேசம் உலக நாடுகளுக்கிடையே தனக்குரிய இடத்தைப் பெற்று, மனித குலத்தின் நலம், உலக அமைதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக, முழுமையாகவும் விருப்பத்துடனும் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தை அடைந்திட, இந்தியாவின் - இந்திய மக்களின் - சேவைக்காக என்னைப் பணிவுடன் நான் அர்ப்பணித்துக் கொள்கின்றேன்.”

- இதுதான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதிக்ஞை என்று நேருஜி எடுத்துரைத்தார்.
நேருஜி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அரியதோர் உரை நிகழ்த்தினார். என்றென்றும் நினைவுகூரத்தக்க அந்த உரை கீழே தரப்படுகிறது:

“நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வரலாற்றுச் சிறப்புடைய சபதம் ஏற்றோம். அதை முழுமையாக இல்லாவிடினும், ஒரு கணிசமான அளவுக்கு நாம் நிறைவேற்றிடும் தருணம் இதோ வந்துவிட்டது. நள்ளிரவில் இப்போதும்கூட நிழலாடுகின்றன. எனினும், கடந்த காலம் முடிந்துவிட்டது; இப்போது வருங்காலமே நம்மை அழைக்கிறது.

எனவே, நமது கனவுகள் நிறைவேறிட நாம் கடுமையாக - மேலும் கடுமையாக - உழைக்க வேண்டும். இந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவை; அவை உலகுக்கும் உரியவை. ஏனென்றால், இன்றைய தினம் உலகில் எந்த நாடும் தனித்து வாழ முடியும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்கு, உலக நாடுகளும், உலக மக்களும் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளார்கள். அமைதி பிரிக்க முடியாத ஒன்று என்று கூறப்படுவது உண்டு. அதேபோலத்தான் இந்த ‘ஓர் உலகம்’ என்ற விரிவான பரப்பில் சுதந்திரம், மனிதகுல வளம், துயரம் முதலிய எவற்றையும் பிரிக்க முடியாது. இனிமேல் இந்த உலகத்தைத் தனித்தனியாகவோ அல்லது துண்டு துண்டாகவோ பிரிக்க முடியாது.

இந்தச் சிறந்த, துணிகரமான வீரப்பணியில் இந்திய மக்கள் நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நம்முடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்று, நாட்டு மக்களின் பிரதிநிதிகளாகிய நாம் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். குறுகிய, நாசகரமான குறைகூறல்களுக்கோ அல்லது துவேஷத்திற்கோ அல்லது பிறர் மீது குற்றஞ்சாட்டுவதற்கோ இது நேரம் அன்று. இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் வாழக் கூடிய, உன்னதமான சுதந்திர இந்திய மாளிகையை நாம் உருவாக்க வேண்டும்.” இவ்வாறு நேருஜி உரை நிகழ்த்தினார்.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் ‘தீர்க்கதரிசன’ உரை

நேருஜி முன்மொழிந்த தீர்மானத்தை செளதரி கலிகுஸ்மான் வழிமொழிந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். வேறு சிலரும் தீர்மானத்தின் மீது பேசினார்கள். கடைசியாக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார். அவரது உரை வருமாறு:

“நமக்குச் சிறந்த வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், அதிகாரத்திற்கு ஏற்ற வகையில் நமக்குத் திறமை இல்லையென்றால், நம்மைக் கேடு சூழ்ந்துவிடும். நாம் தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியும், திறமையும் நமக்கு உதவும். நாளைகாலையிலிருந்து - இன்று நள்ளிரவு முதல் - ஒவ்வொரு விஷயத்திற்கும் இனிமேல் பிரிட்டிஷார் மீது நாம் பழி போட முடியாது.

நம்முடைய செயலுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும். உணவு, உடை, உறைவிடம், மற்றும் சமூக நடவடிக்கைகள் சம்பந்தமாக எளிய மக்களின் நலன்கள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதையொட்டியே சுதந்திர இந்தியா குறித்துத் தீர்ப்பு வழங்கப்படும்.

உயர் இடங்களில் லஞ்ச ஊழல், உறவினர்களுக்குத் தனிச் சலுகை காட்டுதல், அதிகார மோகம், கொள்ளை லாபம் அடித்தல், கள்ள மார்க்கெட் வணிகம் முதலியவை சமீப ஆண்டுகளில் இந்தச் சிறந்த நாட்டின் நற்பெயரைக் கெடுத்திருக்கின்றன. இவற்றை ஒழித்தாலொழிய, நிர்வாகத்தில் திறமையை நம்மால் உயர்ந்த இயலாது; வாழ்க்கைக்கு அவசியமான பண்டங்களின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் திறமையை நம்மால் வளர்க்க முடியாது.

உலக அமைதி, மனித குலத்தின் நலம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு இந்தியா ஆற்றவிருக்கும் சிறந்த பங்கு குறித்து பண்டித ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். நமது தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ஒரு சிறந்த கருத்துக்கு வடிவம் தருகிறது. இந்தியப் பேரரசர்களில் மிகச் சிறந்தவர் அசோகர். ‘மதிப்பிற்கும், மேன்மைக்கும், மாட்சிமைக்கும், அமைதிக்கும், பெருந்தன்மைக்கும், பெருமைக்கும் உரிய மன்னர்கள் அனைவரிலும் அசோகர் தனிச்சிறப்புடைய ஒரு நட்சத்திரம்போல் ஒளிவீசித் திகழ்கிறார்’ என்று எச்.ஜி.வெல்ஸ் குறிப்பிட்டார்.

வேற்றுமைகளைக் களைவதற்கான தமது செய்திகளை மாமன்னர் அசோகர் பாறைகளில் செதுக்கி வைத்தார். இணக்கத்தை வளர்ப்பதன் மூலமே வேற்றுமைகளை அகற்ற முடியும். வேற்றுமைகளை நீக்க இணக்கம் ஒன்றுதான் வழி. நமக்கு வேறு எந்த வழியும் இல்லை.

உலகப் பிரஜையாக உள்ள ஒருவர் - மனித நேயம் மிகுந்த ஒருவர் - மனித விவகாரங்களில் பகைமையும், வக்கரிப்பும் நிலவி வந்தபோதிலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி, எழுச்சிமிக்க நன்னம்பிக்கையும், உறுதியான நல்லெண்ணமும் கொண்ட ஒருவர் - நமக்குத் தலைவராக இருக்கிறார். நாம் அதிர்ஷ்டசாலிகள்.” இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

பிற்காலத்தில், மேல்மட்டங்களில் ஊழல் எவ்வாறு நிலவும் என்பதை அவர் தீர்க்கதரிசனத்தோடு அன்றே குறிப்பிட்டுவிட்டார். அந்த வகையில் அவரது உரை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு 12 மணி முடிந்ததும் அனைவரும் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார்கள். அ. இந்தியாவில் ஆட்சி நடத்துவதற்கான அதிகாரத்தை இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், ஆ. 1947 ஆகஸ்டு 15-ம் தேதியிலிருந்த இந்திய கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டன் பிரபு இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்கிறது என்றும், குறிப்பிட்ட ஒரு தீர்மானத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்மொழிந்தார். அதை அரசியல் நிர்ணய சபை ஏற்றது. இந்தத் தீர்மானத்தை மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குத் தெரிவிக்க டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேருஜி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடி

பின்னர், இந்திய மகளிர் சார்பில் ஸ்ரீமதி ஹம்சா மேத்தா தேசியக் கொடியைச் சமர்ப்பித்தார். அப்போது முதல், பிரிட்டிஷ் கொடிக்குப் பதிலாக இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கு கொண்டது கிடைத்தற்கரிய பெரும் பேறு ஆகும். இந்தியா விடுதலை பெறுவதற்காக லட்சோப லட்சக்கணக்கான மக்கள் தியாகங்களைப் புரிந்தார்கள்.

எனினும், இந்திய சுதந்திரப் பிரகடன நிகழ்ச்சியின் போதும், பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான மவுண்ட் பேட்டன் பிரபு, இந்திய மக்களின் பிரதிநிதியான சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வசம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்த போதும் அவ்விழாவில் நேரில் கலந்து கொள்ளும் பேறு வெகு சிலருக்கு மட்டுமே கிடைத்தது.

உணர்ச்சிப் பரவசமூட்டும் அந்த அனுபவம் இன்னமும் பசுமையாக உள்ளது. பண்டிட்ஜி பிரகடனம் செய்ததைப் போல, ‘ஏற்ற சபதத்தை நிறைவேற்றி முடித்தோம்’ என்ற விழுமிய உணர்வு நெஞ்சமெல்லாம் விரவி மகிழ்ச்சியூட்டிய தருணம் அது.

இந்தியாவுடன் யூனியன் பிரதேசங்கள் இணைப்பு

இந்தியா 1947-ல் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றாலும், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம், கேரளம் கோழிக்கோடு அருகே உள்ள மாஹி, தமிழகத்தில் உள்ள காரைக்கால் ஆகியவை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தன. 1954-ல்தான் இந்தியாவுடன் இணைந்தன. அதேபோல், மேற்கு வங்கம் மாநிலத்தில் சந்திரநாகூர் நகரமும் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. 1963-ல் இந்தியாவுடன் இணைந்தது.

புதுச்சேரி மாநிலம் 4 மாவட்டங்களைக் கொண்ட ஒரு யூனியன் பிரதேசமாகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் இங்கு நீதி பரிபாலனம் நடக்கிறது. அந்தமான் தீவுக்கான உயர் நீதிமன்ற அதிகாரம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின்கீழ் வருகிறது.

இதேபோல் கோவாபுரி என்று அழைக்கப்படும் கோவா போர்த்துக்கீசியத்தின் ஆளுமையில் இருந்து 1961-ல் இந்தியாவுடன் இணைந்தது. தக்காண பீடபூமியில் இருந்து கோவாவை மேற்கு தொடர்ச்சி மலை பிரிக்கிறது. இந்தியாவுடன் கோவா இணைய வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அதேபோல், எதிர்க்கட்சிகளான சோஷலிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் முன்னெடுப்பு பணிகள் அதிகம். இதற்காக ராம் மனோகர் லோகியா நடை பயணமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவா தற்போது மாநிலமாகி விட்டது.

கோவாவை தனி யூனியன் பிரதேசமாகவே வைத்திருக்க வேண்டுமா அல்லது மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பம் நீடித்தது. எனவே, மக்களின் கருத்தை அறிய பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்த முடிவு செய்யப்பட்டது. வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் கோவாவை தனி யூனியன் பிரதேசமாகவே வைத்திருக்க விரும்பினர். எனவே, கோவா தனி யூனியன் பிரதேசமாக நீடித்தது. 1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி, கோவா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இருந்தபோதும், புதுச்சேரியை தனி மாநிலமாக முடியவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமராகவும், எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தபோது, புதுச்சேரியை தமிழ்நாட்டோடு இணைத்து விடலாம் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் புதுச்சேரியில் மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்று மொரார்ஜி தேசாய் சொன்னபோதும், எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தியாவின் முதல் கவர்னராக 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சரோஜினி நாயுடு நியமிக்கப்பட்டார். முதல் பெண் கவர்னரும் இவர்தான். அதேபோல் முதல் பெண் முதல்வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963-ம் ஆண்டு அம் மாநிலத்தின் முதல்வராக சுசேதா கிருபளானி பொறுப்பேற்றார். முதல் வெளிநாட்டுத் தூதராக விஜயலட்சுமி பண்டிட் சோவியத் யூனியனுக்கு நியமிக்கப்பட்டார். அதேபோல், ஐ.நா. சபையில் பெண் பிரதிநிதியாகவும் விஜயலட்சுமி பண்டிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அதேபோல் கோயில்களில் ‘பொட்டுக் கட்டுதல்’ என்ற முறையும் இருந்தது. ஒரு தேவதாசியின் மகள், தேவதாசியாக மாற்றப்படுகிறாள் என்பதன் அடையாளம்தான் 'பொட்டுக் கட்டுதல்' ஆகும். பெண்களை அடிமைப்படுத்தும் இந்த முறைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் எதிராகப் போராடினார்கள். இதைத்தொடர்ந்து, தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் 1947-ல் நிறைவேற்றப்பட்டது.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிர்ணய சபை கூட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 35

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x