Published : 05 Jul 2025 01:55 PM
Last Updated : 05 Jul 2025 01:55 PM
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு 1946 என்று அப்போதைய இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஃபிரடெரிக் பெத்திக் லாரன்ஸ் பிரபு கூறினார். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இவர். கேபினட் தூதுக்குழுவில் ஒருவராக இருந்தார். இது இந்திய சுதந்திரத்துக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
டில்லியில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் இப்போது ‘மத்திய ஹால்’ என்று அழைக்கப்படும் இடத்தில் அரசியல் நிர்ணய சபை 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி முதன் முறையாகக் கூடியது. சத்தியாக்கிரகப் போராட்டங்களில் கலந்து கொண்ட பலர் அரசியல் நிர்ணய சபையில் இருந்தார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமான தலைவர்களும் அதில் இருந்தார்கள். அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து என்.கோபால சுவாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், காமராஜர், எஸ்.ராதாகிருஷ்ணன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி முதலியோர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆசாரிய கிருபளானி கூட்டம் நடந்த இடத்துக்கு வந்ததும், உறுப்பினர்கள் எல்லோரும் கைதட்டி அவரை வரவேற்றார்கள். பிறகு சர்தார் வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு ஆகியோர் வந்தார்கள். கடைசியாக நேரு வந்தார். அளவு கடந்த உற்சாகத்துடன் அவர் வரவேற்கப்பட்டார். விளையாட்டுச் சுபாவம் கொண்ட நேருஜி, தமது தோல் பையை மேலே வீசியெறிந்து, பிறகு அதைக் ‘கேட்ச்’ பிடித்தார்.
எல்லோரும் அமர்ந்த பிறகு, அன்றைய காங்கிரஸ் தலைவர் ஆசாரிய கிருபளானி எழுந்து, அவையின் தற்காலிகத் தலைவராகச் சச்சிதானந்த சின்ஹாவின் பெயரை முன்மொழிந்தார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் மூத்தவர் சச்சிதானந்த சின்ஹா.
தற்காலிகத் தலைவராகச் சச்சிதானந்த சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் உரையாற்றினார். உறுப்பினர்கள் விசாலமான தொலைநோக்குடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தொலைநோக்கு இல்லாத மக்கள் அழிந்து விடுவார்கள் என்று அவர் எச்சரித்தார். அவரது உரைக்குப் பலத்த கைதட்டல் எழுந்தது.
பின்னர், உறுப்பினர்களின் பதவிப் பிரமாண ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. புகழ் பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரியான எச்.வி.ஆர்.ஐயங்கார் அரசியல் நிர்ணய சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஒவ்வொரு உறுப்பினர் பெயரையும் கூறிப் பதவிப் பிரமாணம் ஏற்க அழைத்தார்.
பிறகு அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, அனைவரும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை விரும்பினார்கள். அவர் ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் அரசியல் நிர்ணய சபை செயல்படத் தொடங்கியது.
அரசியல் நிர்ணய சபையின் நடைமுறை விதிகள் தயாரிப்பு
முதலாவது பணியாக, அரசியல் நிர்ணய சபையின் நடைமுறை விதிகளைத் தயாரிக்க 15 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்மானத்தின் மூலமாகத் தான் அரசியல் நிர்ணய சபையைக் கலைக்க முடியும் என்பது நடைமுறை விதிகளில் சேர்க்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபையின் இறையாண்மை குறித்து ஒரு கருத்து வேறுபாடு இருந்ததால்தான் இந்த விதியை இணைக்க வேண்டியதாயிற்று. மே மாதம் 16-ம் தேதி தேசிய திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் அரசு அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தியது என்றும், எனவே பிரிட்டிஷ் அரசு அதைக் கலைத்துவிட முடியும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
ஆனால் அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அரசியல் நிர்ணய சபை இறையாண்மை கொண்ட ஓர் அமைப்பு என்றும், அதற்கு வெளியேயிருக்கும் எந்த அதிகார அமைப்பும் அதைக் கலைக்க முடியாது என்றும் அவர் அறிவித்தார்.
நடைமுறை விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, டிசம்பர் 23-ஆம் தேதியன்று அரசியல் நிர்ணய சபை ஒத்திவைக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று அது மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் பிரதமர் அட்லீயின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு
“1948-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து வெளியேறி விடும்” என்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறிவிப்பை பிரிட்டிஷ் பிரதமர் அட்லி வெளியிட்டார்.
வேவல் பிரபுவுக்கு அடுத்தபடியாக இந்திய வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார். இந்தியாவில் பிரிட்டன் வசமிருந்த ஆட்சி அதிகாரத்தை இந்தியர்களுக்கு ஒழுங்கான வகையில் மாற்றும் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பு மவுண்ட் பேட்டன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1947-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதியன்று இந்திய வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டன் பதவிப் பிரமாணம் ஏற்றார். அதைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியர் வசம் மாற்றும் பணி வேகம் பெற்றது.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதியன்று ஆட்சி அதிகாரம் இந்தியர் வசம் ஒப்படைக்கப்படும் என்று மவுண்ட் பேட்டன் பிரகடனம் செய்தார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு விருந்து அளித்தார். விருந்தின் போது எந்த ஆடைகளை உறுப்பினர்கள் அணிவது என்பது குறித்து சுவையான விவாதம் நடந்தது. ஒழுங்கு முறைக்குரிய விசேஷ ஆடைகளை அணிந்துதான் உறுப்பினர்கள் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கருதினார்கள். ஆனால் இதுபற்றி அழைப்பிதழில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமிழர்கள் வழக்கமாக அணியும் வேட்டி, சட்டையுடன் செல்வது என்று சி.சுப்பிரமணியம், அளகேசன் உள்ளிட்டோர் முடிவு செய்தனர். இந்த ஆடைகள் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எரிச்சலூட்டும் என்று சிலர் கூறியதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் வேட்டி சட்டையுடன் விருந்தில் பங்கேற்றார்கள். அதேநேரம், வேட்டி சட்டை கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது என்று குறிப்பிட்டார் மவுண்ட் பேட்டன். முன்பு வைஸ்ராயாக இருந்தவர்கள் ஏகாதிபத்திய ஆணவத்துடன் செயல்பட்டார்கள். ஆனால் மவுண்ட் பேட்டன் இந்தியர்களின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் வெறுக்காமல் ஏற்றுக் கொண்டார். டில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் சில முக்கியமான அரசியல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
அன்றைய பிரதமர் (அதாவது முதலமைச்சர்) டி.பிரகாசம் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கும் ஓர் தீர்மானத்தைச் சட்டப்பேரவைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தாங்கள் கொண்டுவர உத்தேசித்திருப்பதாகவும், இதற்காகச் சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூறும் கட்டளைக் கோரிக்கை ஒன்றை 25 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரகாசத்திற்கு 1947 பிப்ரவரி 14-ஆம் தேதி அனுப்பினார்கள். பிரகாசத்தின் தலைமை ஓரளவு சர்ச்சைக்கு இடமளித்ததாகவே இருந்தது.
சென்னை மாகாணத்தில் எல்லா நூற்பு ஆலைகளையும் மூடிவிடத் தாம் விரும்புவதாக பிரதமர் பிரகாசம் ஒருமுறை திடீரென்று அறிவித்தார். சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டுப் பகுதியில்தான் மிகப் பெரும்பாலான நூற்பு ஆலைகள் இருந்தன. எனவே தமிழ்நாட்டுக்கு எதிராகவும் தமிழகத் தொழில் வளர்ச்சியைக் குலைக்கவுமே பிரகாசம் முயன்றார் என்று கருதப்பட்டது.
பிரதமர் பிரகாசத்தின் மகன் தனது சுயநலனுக்காகத் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வந்தார் என்ற புகார்களும் கூறப்பட்டன. அரசியல் சாசனப்படி எந்தவிதமான அதிகாரத்திலும் இல்லாத ஒருவர், அதிகாரத்தில் இருக்கின்ற ஒருவரது மகனாகவோ அல்லது மகளாகவோ அல்லது மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பராகவோ இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரங்களை மறைமுகமாக அல்லது பின்னணியில் இருந்துகொண்டு செயல்படுத்துவது என்பதை இந்திய அரசியலில் வழக்கமாகக் கண்டு வருகிறோம். நமது அரசியலில் பல முக்கிய தலைவர்களின் மகன்கள் செயல்படுகின்ற விதம், சர்ச்சைக்கு இடமளிப்பதாகவே இருந்து வந்திருக்கிறது.
1947 மார்ச் 14-ம் தேதியன்று பிரகாசம் ராஜினாமா செய்தார். அதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு சட்டப்பேரவைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாகாணப் பிரதம மந்திரி ஆனார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும், பிரகாசத்திற்கும் இடையே போட்டி இருந்தது. ரெட்டியாருக்கு 166 வாக்குகளும், பிரகாசத்திற்கு 73 வாக்குகளும் கிடைத்தன. ரெட்டியாருக்கு ஆங்கில மொழியறிவு குறைவு. எவரேனும் ஆங்கிலத்தில் பேசினால், அவர் புரிந்து கொள்வார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விஷயங்களையும் அவர் படித்துத் தெரிந்து கொள்வார். ஆனால் அவருக்கு ஆங்கில மொழியில் திறம்படப் பேச இயலாது. எனவே, சி.சுப்பிரமணியத்தின் பரிந்துரையின்படி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் தனிச் செயலராக டிஸ்ட்ரிக்ட் முன்சீப் பதவியில் இருந்த அழகிரிசாமி நியமிக்கப்பட்டார். நீதித்துறையில் துணைநிலை அதிகாரியாகவும் இருந்தவர் அழகிரிசாமி.
சென்னை மாகாண ஆளுநராக அப்போது சர் ஆர்ச்சிபால்டு நை இருந்தார். எல்லாப் பிரதமர்களும் (அதாவது முதலமைச்சர்களும்) அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக இருந்தார்கள். ஓமந்தூராரும் அவ்வாறே தொடர்ந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் துறையில் ‘ஹானர்ஸ்’ வகுப்பில் அழகிரிசாமி படித்து, பல்கலைக்கழகத்தில் முதலாமவராக, முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். அழகிரிசாமி சிறிதுகாலம் மதுரையில் வழக்குரைஞர் தொழில் நடத்தினார். நெல்லை - கட்டபொம்மன் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், கம்ம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அவர் வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியை மணந்து கொண்டார். அதனால் சிறிது காலம் அவரது குடும்பத்தில் அவரை ஒதுக்கி வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையும் நேர்மையும் வாய்ந்தவர் அழகிரிசாமி.
ஒருமுறை ராஜாஜி அழகிரிசாமியைச் சந்தித்து, அவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவரா? என்று கேட்டார். ஓமந்தூரார் சாதி அடிப்படையில் அவரைத் தமது தனிச் செயலராக நியமித்திருப்பார் என்று ராஜாஜி கருதினார் போலும். தாம் ரெட்டியார் இல்லை என்றும், கம்ம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அழகிரிசாமி ராஜாஜிக்கு பதிலளித்தார்.
ராஜாஜி அத்துடன் விடவில்லை. அவர் தொடர்ந்து சில கேள்விகளை எழுப்பினார். “நீங்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவரா?’’ என்று கேட்டார். (ஓமந்தூரார் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்). தாம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அழகிரிசாமி சொன்னார்.
“ஓமந்தூராரை உங்களுக்குப் பல ஆண்டுகளாகத் தெரியுமா?” இது ராஜாஜியின் அடுத்த கேள்வி. ‘இல்லை’ என்றார் அழகிரிசாமி. பிறகு “ஓமந்தூரார் உங்களை ஏன் தமது தனிச் செயலராகத் தேர்ந்தெடுத்தார்?” என்று, ராஜாஜி கடைசியாகக் கேட்டார். “இந்தக் கேள்வியை சி.சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்க வேண்டும்’’ என்று அழகிரிசாமி அதற்குப் பதில் கூறினார்.
“அழகிரிசாமியை சி.சுப்பிரமணியம் பரிந்துரை செய்திருக்கிறார். எனவே அவரது நியமனம் சரியாகத்தான் இருக்கும்” என்று ராஜாஜி பின்னர் தமது சில நண்பர்களிடம் கூறியதாகச் சொல்லப்பட்டது.
முதலமைச்சரின் தனிச் செயலர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. பல ரகசியமான விஷயங்களைத் தனிச் செயலர் கவனிக்க வேண்டியிருக்கும். முதலமைச்சரின் தனிச் செயலராக நன்கு பணியாற்றிய அழகிரிசாமி, தொழிலில் விரைவாக முன்னேறினார். பின்னாளில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் உயர்வான ஒரு நிலையை அடைந்தார். உச்ச நீதிமன்றத்தின் மிகச் சிறந்த நீதிபதிகளில் ஒருவர் என்றும் அவர் புகழ் பெற்றார்.
‘கிங் மேக்கராக’ உயர்ந்த கர்மவீரர் காமராஜர்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஓர் உண்மையான காந்தியவாதி. சென்னை மாகாணப் பிரதமர் பதவியை (அதாவது முதலமைச்சர் பதவியை) ஏற்பதற்கு முன்னர், அவருக்கு நிர்வாகத் துறையில், எந்தவிதமான அனுபவமும் கிடையாது. எனினும் அவர் நல்ல முதலமைச்சராக விளங்கினார். ஊழலை ஒழிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அந்தக் காலத்திலும் அரசியல் துறையில் ஓரளவு ஊழல் நிலவியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது சுயநலனையொட்டிய காரியங்களைச் செய்து கொள்வதற்காக அதிகாரிகளை அடிக்கடி பயன்படுத்த முயன்றார்கள். ஓமந்தூரார் ஊழலை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஓமந்தூரார் பிரதமராக (முதலமைச்சராக) பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து அவருக்கு எதிராக ஒரு சிறிய கோஷ்டி வேலை செய்து வந்தது. அந்தக் கோஷ்டியில் சிலருக்குக் காமராஜரிடம் ஓரளவு செல்வாக்கு இருந்தது.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைப் பிரதமராக (முதல்வராக) தேர்ந்தெடுத்ததில் காமராஜருக்கு முக்கிய பங்கு இருந்தது. சென்னை மாகாணத்தில் காமராஜர் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு முதன்மையான அரசியல் தலைவராக மேன்மேலும் வளர்ந்து வந்தார். ஓமந்தூரார் தேர்தலுக்கு முன்பாக, சென்னை மாகாணப் பிரதமராக ராஜாஜிக்குப் பதிலாகப் பிரகாசம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காமராஜரே பெருமளவில் பொறுப்பு ஆவார்.
முதலமைச்சர் தேர்வுகளில் முக்கிய பங்கு வகித்து வந்ததால் ‘கிங் மேக்கர்’ (உயர் பதவிப் பொறுப்புக்களுக்கு ஆட்களைப் படைக்கும் ஆற்றலுடையவர் என்றும் கூறலாம்) என்று காமராஜர் அழைக்கப்பட்டார்.
சென்னை மாகாணத்திலும், பின்னர் தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகள் அவர் ‘கிங் மேக்கராக’ விளங்கினார். நேருஜி மறைவுக்குப் பிறகு அகில இந்திய அளவிலும் அவர் ‘கிங் மேக்கராக’ச் செயல்பட்டார் கர்மவீரர் காமராஜர்.
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: இந்திய விடுதலைக்கு வித்திட்ட மூன்று நிகழ்வுகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 34
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT