Last Updated : 02 Jul, 2025 10:53 AM

4  

Published : 02 Jul 2025 10:53 AM
Last Updated : 02 Jul 2025 10:53 AM

நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் முன்னேறும் இந்தியா! | சொல்... பொருள்... தெளிவு

ஐ.நா. அவையின் நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் 10ஆவது அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 99ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்ற 167 நாடுகளில் முதல் முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலைத்த வளர்ச்சித் தீர்வுகள் வலையமைப்பு (Sustainable Development Solutions Network - SDSN), ஐ.நா. அவையின் முயற்​சி​யின்கீழ் 2012இல் தொடங்​கப்​பட்டது. இந்த வலையமைப்பு நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDGs) உலக நாடுகள் அடைவதற்காக உருவாக்​கப்​பட்டது.

ஐ.நா.வின் சுயாதீன அமைப்​பாகச் செயல்​படும் இந்த அமைப்பு, கொள்கை வகுப்​பாளர்​களாலும் அரசாங்​கங்​களாலும் கண்காணிக்​கப்​படு​கிறது. உலக நாடுகளில் முக்கியச் சவால்களாக உள்ள வறுமை, சுற்றுச்​சூழல் பாதுகாப்பு, பொருளாதார ஏற்றத்​தாழ்வு, காலநிலை மாற்றம் போன்ற​வற்றுக்கு நிலைத்த தீர்வுகளை வழங்க​வும், திட்டங்​களைச் செயல்​படுத்து​வதற்கும் இது உதவுகிறது.

என்னென்ன இலக்குகள்? - நிலைத்த வளர்ச்சித் தீர்வுகள் வலையமைப்​பானது, உலக நாடுகளுக்கு 17 இலக்குகளை முன்வைக்​கிறது. வறுமை​யின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்​கியம் - நல்வாழ்வு, தரமான கல்வி, பாலினச் சமத்துவம் உள்ளிட்டவை இதில் அடக்கம். உலக நாடுகள், 2030க்குள் இந்த இலக்குகளை அடைய வேண்டும் என இவ்வலை​யமைப்பு வலியுறுத்து​கிறது. 2025இல் வெளியிடப்பட்ட அறிக்கை​யில், முதல் இடத்தில் பின்லாந்தும், அதைத் தொடர்ந்து ஸ்வீடனும் டென்மார்க்கும் உள்ளன.

கடந்த 10 வருடங்​களில், நேபாளம், கம்போடியா, பிலிப்​பைன்ஸ், வங்கதேசம், மங்கோலியா, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்​தான், கோஸ்டரிகா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிவேக வளர்ச்சியைப் பெற்றுள்ளன. தெற்கு சூடான் (167) இப்பட்​டியலில் கடைசி இடத்தைப் பிடித்​துள்ளது; பெரும்​பாலான ஆப்ரிக்க நாடுகள் பெருமளவில் மாற்றம் தேவைப்​படும் நாடுகளாகவே நீடிக்​கின்றன.

இதுவரை இந்தியா: இந்தியாவைப் பொறுத்​தவரை, நிலைத்த வளர்ச்சி இலக்கு​களில் தொடர்ந்து முன்னேறிவரு​கிறது. 2017இல் இடம்பெற்ற 156 நாடுகளில் இந்தியா, 110ஆவது இடத்தைப் பிடித்​திருந்த நிலையில், 2023இல் 112ஆவது இடத்தை​யும், 2024இல் 110ஆவது இடத்தையும் பிடித்​திருந்தது. இந்நிலையில் சீரான வளர்ச்சி​யுடன் 2025இல் 99ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறி​யுள்ளது; இதில், 66.95 மதிப்​பெண்​களுடன் வறுமை ஒழிப்பு, சமத்து​வ​மின்​மையைக் குறைப்​பதில் ஏறுமுகமாக இந்தியா பயணித்து வருகிறது.

பிற இலக்கு​களில் மிதமான முன்னேற்​றத்தைக் கொண்டுள்ள இந்தியா, காலநிலைச் செயல்​பாடு​களில் பின்தங்கி​யிருக்​கிறது. இப்பட்​டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா (49), மாலத்​தீவுகள் (53), பூடான் (74), நேபாளம் (85), இலங்கை (93), வங்கதேசம் (114) இடங்களைப் பிடித்​திருக்​கின்றன. பாகிஸ்தான் 140ஆவது இடத்தில் இருக்​கிறது.

மாநிலங்​களின் வளர்ச்சி: இந்திய மாநிலங்​களில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்த பட்டியல் 2018 முதல் ‘நிதி ஆயோக்​’கால் வெளியிடப்​படு​கிறது. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் (2023 - 2024) கேரளம் (79 மதிப்​பெண்), உத்தராகண்ட் (79 மதிப்​பெண்), தமிழ்நாடு (78 மதிப்​பெண்), ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாகாலாந்து, ஜார்க்​கண்ட், பிஹார் போன்ற மாநிலங்கள் இப்பட்​டியலில் பின்தங்​கி​யுள்ளன.

நாட்டின் ஒட்டுமொத்த நிலைத்த வளர்ச்சி இலக்கு​களுக்கான (SDG) மதிப்​பெண்​களின் விவரம் 2023-24இல் 71 ஆகவும், 2020-21இல் 66 ஆகவும் 2018இல் 57 ஆகவும் இருந்தன. கழிப்​பறைகள், மின்சாரம், சமையல் எரிபொருள், குடிநீர் வசதி கொண்ட வீடுகளின் விகிதம் போன்றவை இந்திய மாநிலங்​களில் கணிசமாக அதிகரித்​தாலும் சவால்​களும் நீடிக்​கின்றன.

அந்நிய நேரடி முதலீடு (FDI), மொத்த தேசிய வருமானத்தில் 2015-16இல் 2.16% ஆகவும், 2023-24இல் 0.75% ஆகவும் இருந்த நிலையில், 2024-25இல் 0.5% என்கிற அளவில் வீழ்ச்சி​யடைந்தது. அதேபோல், மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் (GDP) வெளிநாட்டுப் பணப் பரிமாற்​றங்​களின் அளவு 2024-25இல் 2.4% ஆகக் குறைந்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்​தி​யில், உற்பத்தி மதிப்புக் கூட்டல் (Manufacturing Value Added) 2015-16இல் 16.8%ஆக இருந்த நிலையில், 2024-25இல் 15.7% ஆகச் சரிந்துள்ளது. குறிப்பாக, அமைப்புசாரா வேலைகளில் பணிபுரியும் ஊழியர்​களில் 50%க்கும் மேற்பட்​ட​வர்கள் எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர்.

நீடிக்கும் மந்தநிலை: ஐ.நா. அவையின் உலகளாவிய நிலைத்த வளர்ச்சி இலக்கு​களின் தற்போதைய வளர்ச்சி நிலையை எடுத்​துக்​கொண்​டால், 2030க்குள் 17% இலக்குகள் மட்டுமே அடைய இயலும் என மதிப்​பீடுகள் காட்டு​கின்றன. இது உலகளாவிய முன்னேற்​றத்தில் நிலவும் மந்தநிலையைக் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்​கின்​றனர்; கரோனா பெருந்​தொற்று, சமகாலப் போர்கள், கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், காலநிலை மாற்றம் போன்றவை வளர்ச்சி இலக்குகளை எட்டு​வதில் தாமதத்தை ஏற்படுத்​தி​யுள்ள​தாகவும் மதிப்​பீடுகள் சுட்டிக்​காட்டு​கின்றன.

மேலும், உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு, பணவீக்கம், விநியோகச் சங்கி​லிகளில் உள்ள சிக்கல்​களும் வளர்ச்சி நிலையில் பாதிப்பை ஏற்படுத்​தி​யுள்ளன. 2030க்குள் இலக்குகளை அடைய, வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதி வழங்குவதை அதிகரிப்​பதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்​கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்​படுத்​தவும் வேண்டும். டிஜிட்டல் கல்வி - தொழில்​நுட்​பங்கள் போன்றவை அனைவரும் அணுகக்​கூடியதாக மாற்றப்பட வேண்டும்.

பெண்களுக்கும் பின்தங்கிய சமூகங்​களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். பதற்றமான பகுதி​களில் அமைதிப் பேச்சு​வார்த்தைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உலக நாடுகள் தீர்வுகளை வகுப்பதன் மூலம், ஏற்றத்​தாழ்வுகள் குறைந்து வளர்ச்சி இலக்குகள் சாத்தி​யப்​படலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x