Published : 01 Jul 2025 08:56 AM
Last Updated : 01 Jul 2025 08:56 AM
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடைமுறையை வெற்றிகரமாக நடத்திவரும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைத்து, ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை அமர்த்தி, 64 கோடி வாக்காளர்களை வாக்களிக்கச் செய்யும் இமாலய பணியை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்து முடிக்கிறது. முன்பு வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க, கடந்த 1982-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இவ்வளவு பெரிய தேர்தல் நடைமுறையை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமைப்படுத்தின. தேர்தல் ஆணையத்தின் அளப்பரிய இப்பணிக்கு எதிராக அரசியல்ரீதியாக சில புகார்கள் அவ்வப்போது எழுந்தாலும், அவை எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வாக்குப்பதிவில் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக வாக்கு பதிவானவுடன் திரையில் நாம் வாக்களித்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒளிரவும், அதற்கான ரசீதுபதிவு செய்யப்பட்டு சேகரமாகும் வகையில் 18 லட்சம் ‘VVPAT’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவின் தேர்தல் நடைமுறையை உலக நாடுகளே வியந்து பாராட்டி வருகின்றன.
தேர்தல் ஆணையம் தனது பணியை மேலும் மெருகேற்றும் வகையில், அலைபேசி செயலி மூலம் வாக்களிக்கும் நடைமுறையை சில தினங்களுக்கு முன் பிஹார் உள்ளாட்சி தேர்தலில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தி மகத்தான சாதனையை படைத்துள்ளது. பாட்னாவில் 3 இடங்கள், ரோத்தஸ் மற்றும் கிழக்கு சம்பரான் பகுதிகளில் தலா 2 இடங்களுக்கு அலைபேசி மூலம் வாக்களிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
10 ஆயிரம் வாக்காளர்கள் அலைபேசி வழியாக வாக்களிக்க பதிவு செய்து, அதற்குரிய தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து வாக்களித்துள்ளனர். இந்த வசதி மூலம் செயலி வழியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் வழியாகவும் வாக்களிக்க முடியும். தற்போதுமூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத நிலையில் உடல்நலன் குன்றியோருக்கு முதல்கட்டமாக இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன யுகத்தில் இனி அனைத்தும் அலைபேசி வழியாகவே நடைபெறும் சூழல் இருந்துவரும் நிலையில், வாக்குப்பதிவையும் இனி அலைபேசி மற்றும் இணையதளம் வழியாகவே நடத்துவதற்கான வெள்ளோட்டமாக தேர்தல் ஆணையம் பிஹாரில் நடத்திக் காட்டியிருப்பது மாபெரும் சாதனையாகும். பிளாக்செயின் தொழில்நுட்பம், முக அடையாள சரிபார்ப்பு, மாற்றங்கள் செய்ய முடியாத ரசீது பதிவு மற்றும் சேகரிப்பு என பல பாதுகாப்பு அம்சங்களையும் இதில்உள்ளடக்கியிருப்பது போற்றத்தக்கது.
இனி வரும் காலத்தில்அலைபேசி செயல்பாடுகள் பிரதானமாக இருக்கும் நிலையில், அனைத்து வாக்குப் பதிவுகளும் அலைபேசி செயலி மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும்போது, இந்திய தேர்தல் நடைமுறை அதிநவீன தொழில்நுட்பத்திலும் உலக சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT