Last Updated : 30 Jun, 2025 09:44 AM

3  

Published : 30 Jun 2025 09:44 AM
Last Updated : 30 Jun 2025 09:44 AM

சமக்ர சிக்‌ஷா: திரிசங்கு நிலை தொடர்வது நல்லதல்ல!

கல்வி உரிமைச் சட்டப்படி, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.2,151 கோடி நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்த நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடி வருகிறது. இதைக் காரணம் காட்டி இதுவரை சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 2025-26 கல்வியாண்டில் இத்திட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை என்பதும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள 8,500-க்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் கட்டணமின்றி கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த நிலையில், இத்திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. முந்தைய ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 4 லட்சம் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் புதிதாக சேர்க்கப்படும் 75 ஆயிரம் மாணவர்களும் இந்த ஆண்டு சேர்க்கப்படவில்லை. மத்திய அரசு நிதி 60 சதவீதம், மாநில அரசு நிதி 40 சதவீதம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், மாநில அரசின் பங்கையாவது பள்ளிகளுக்கு வழங்கலாம் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் கேட்டு வருகின்றனர்.

தற்போது படித்துவரும் 4 லட்சம் மாணவர்களையும் கல்விக் கட்டணத்தை தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தும்படி தனியார் பள்ளிகள் நெருக்கடி அளித்து வருகின்றன. இதனால், தனியார் பள்ளிகளில் படிப்பை தொடருவதா அல்லது அங்கிருந்து விலகி அரசுப் பள்ளியில் சேருவதா என்று தெரியாமல் மாணவர்களும் பெற்றோரும் திரிசங்கு நிலையில் தவித்து வருகின்றனர்.

இத்தகைய நிச்சயமற்ற நிலை தொடர மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் இணைவதில்லை என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. அதைக் காரணமாக காட்டி ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் இருக்கும் மத்திய அரசின் செயலும் ஏற்புடையதல்ல.

மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி நியாயம் பெறுவது ஒருபுறம் இருந்தாலும், தற்போதைக்கு தனியார் பள்ளிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதுடன், தற்போது பயிலும் மாணவர்களுக்கும் தற்காலிக ஏற்பாட்டை தமிழக அரசு செய்வது அவசியம். அவர்களுக்கு பணம் செலுத்தும் பொறுப்பை தமிழக அரசு ஏற்பது, அந்த மாணவர்களிடம் மற்ற மாணவர்களைப் போல் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று பள்ளிகளை அனுமதிப்பது, அவர்களை அங்கிருந்து விலகச் செய்து அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது என இந்த மூன்றில் ஏதாவது ஒரு முடிவை தமிழக அரசு உடனடியாக எடுப்பதே மாணவர்கள் நலனுக்கு உகந்ததாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x