Published : 29 Jun 2025 11:23 AM
Last Updated : 29 Jun 2025 11:23 AM

இந்திய விடுதலைக்கு வித்திட்ட மூன்று நிகழ்வுகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 34

க்ளமென்ட் அட்லீ, வி.கே.கிருஷ்ண மேனன், ஜோசப் குமரப்பா

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அந்த காலகட்டத்தில் பிரிட்டனில் நடந்த தேர்தலில் க்ளமென்ட் அட்லீ வெற்றி பெற்று பிரதமரானார். ‘தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கு விடுதலை கொடுப்பேன்’ என்று பிரகடனம் செய்திருந்தார் அட்லீ. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் சர்ச்சில் தோல்வி அடைந்தார். அட்லீ வெற்றி பெற்றவுடன், தான் அறிவித்தபடியே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கு படிப்படியாக விடுதலை வழங்கினார் என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும்.

அட்லீ வெற்றி, மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டம், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கு - இவை மூன்றும் சேர்ந்துதான் இந்தியா விடுதலை பெற வழிவகுத்தது. எனவே, காந்தியின் போராட்டத்தால் மட்டுமே நமக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த எத்தனையோ தியாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தியாகவேங்கை பகத்சிங் போன்றோரின் தியாகங்களுக்கு இன்றுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

இலங்கைக்கு 1948-ம் ஆண்டு விடுதலை கிடைத்தது. இலங்கையின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு ஏராளமான உதவிகளை நேரு தலைமையிலான இந்திய அரசு செய்தது. இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு ஆகியோர் அதிகாரிகள் பலருடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

பண்டார நாயக்கா மற்றும் அவரது மனைவி சிறிமாவோ பண்டார நாயக்கா ஆகியோர் நேரு காலத்திலும், அவருக்குப் பிறகு சாஸ்திரி, இந்திராகாந்தி ஆட்சியின் போதும் தங்கள் நாட்டுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை இந்தியாவிடம் இருந்து எளிதாகப் பெற்றனர். அதேநேரம் நன்றி விசுவாசத்தை பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் காட்டினர். அவ்விரு நாடுகளுமே இலங்கையின் நட்பு நாடுகளாக விளங்கின.

சிறிமாவோ பண்டார நாயக்கா - சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக இலங்கை மலையகத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பிரஜா உரிமையை இழந்தனர். நிர்க்கதியாக நின்ற அம்மக்களை ஈவு இரக்கமின்றி இந்தியாவுக்கு கப்பலில் விரட்டியடித்தார் சிறிமாவோ பண்டார நாயக்கா என்பது வேதனையான விஷயம்.

இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்து போராட்டத்தில் பங்கு பெற்ற பலர் பின்னாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சேர்ந்தனர். அதேபோல், ஆச்சாரியா நரேந்திர தேவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அச்சுத பட்டவர்த்தன், போன்றவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக சோசலிஸ்ட் என்ற பெயரில் தனித்தனி கட்சிகளைத் தொடங்கினர்.

இந்திரா காந்தி தனது கணவர் பெரோஸ் காந்தியை விட்டுப் பிரிந்து, மகன்களோடு நேருவின் பிரதானமான இல்லமான தீன்மூர்த்தி பவனில் குடியேறினார். தனது மருமகனான பெரோஸ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஊழல், முறைகேடுகளை விமர்சித்தது பிரதமர் நேருவை மிகவும் வேதனைப்படுத்தியது என்பார்கள். இப்படியான செய்திகள் அந்த காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டன.

1953-ம் ஆண்டுவாக்கில், ஜம்மு காஷ்மீரில் முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள். இந்நிலையில் அந்த பொறுப்பில் இருந்த ஷேக் அப்துல்லா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நேருவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஷேக் அப்துல்லா.
அவருக்குப் பதில் காங்கிரஸைச் சேர்ந்த பக்சி குலாம் முகமது, காஷ்மீரின் முதல்வராக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் ஜன சங்கம் கட்சியின் நிறுவனரும், நேருவின் முதல் அமைச்சரவையில் பங்கேற்றவருமான சியாமா பிரசாத் முகர்ஜி, காஷ்மீர் பிரச்சினைப் போராட்டத்தில் லட்சுமிபூரில் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் காலமானார்.

இவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று இந்து மகா சபா மற்றும் ஜன சங்கம் கட்சியைச் சேர்ந்தவர்களால் நேரு அமைச்சரவையில் இருந்த ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் ராணுவ அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த என்.கோபால் சுவாமி அய்யங்கார் சென்னையில் காலமானார்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக உருவானது. அதன் முதலமைச்சராக டி.பிரகாசம் தேர்வு செய்யப்பட்டார். முதலில் ஆந்திராவின் தலைநகராக கர்நூல் இருந்தது. பிறகு 1956, நவம்பர் 1-ம் தேதி ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக ஹைதராபாத் ஆனது.

மாநில எல்லைகளை ஒழுங்குபடுத்தி வரைமுறைப்படுத்த, ஒரிசா கவர்னராக இருந்தவரான பசல் அலி தலைமையில் ஒரு குழு முதலில் அமைக்கப்பட்டு, அதில் குஷ்ரு, கே.எம்.பணிக்கர் போன்றவர்கள் இருந்தனர்.

இந்த பணிக்கர் யாரென்றால், இந்தியாவில் எகிப்தினுடைய தூதராக இருந்தவர். எப்பொழுதும் தமிழகத்துக்கு விரோதமாகவே செயல்படுபவர். நேருவின் அருகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மாநிலத்துக்காக மட்டுமே பேசிக் கொண்டு இருப்பவர். இவரோடு சேர்ந்து, நேரு அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனும் தமிழகத்துக்கு, அன்றைய சென்னை மாகாணத்துக்கு எதிராகவே இருந்தது உண்டு.

அண்ணாவிடம் வாய்ப்பு கேட்ட வி.கே.கிருஷ்ணமேனன்

வி.கே.கிருஷ்ண மேனனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். இவர், முதல்முறையாக பம்பாயில் இருந்து வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பிற்காலத்தில் இந்திரா காந்திக்கு இவரைப் பிடிக்காமல் போய்விட்டது. 1967 தேர்தலின்போது, திமுக தலைவர் அண்ணாவைச் சந்தித்து, தனக்கு தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பு தருங்கள் என்று கேட்டபோது, ‘நாங்கள் எப்படி உங்களுக்கு வாய்ப்பு தர முடியும்?’ என்று அண்ணா மறுத்துவிட்டார்.

நேருவின் நெருங்கிய நண்பரான இவர், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக லண்டனில் மாணவர்களைத் தயார்படுத்தியவர். காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. மன்றத்தில் பல மணி நேரம் பேசிய ஒரு ஆளுமை, ஆங்கிலத்திலும் இந்தியிலும், மலையாளத்திலும் நன்கு பேசக் கூடியவர்.

இவருக்கு கோயமுத்தூரோடும் தொடர்பு உண்டு. கோயமுத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ‘வி.கே.மேனன் தெரு’ என்று உள்ளது. அந்தத் தெருவில்தான் பாஜகவின் அலுவலகம் இருந்தது.

நான் கோவை மேயரிடம் ஒருமுறை கேட்டேன். ‘என்னய்யா இந்தத் தெருவுக்கு வி.கே.மேனன் பெயரை வைத்துள்ளீர்களே... அவர் யார் என்று தெரியுமா?” என்றேன். அவரிடம் மட்டுமல்ல... அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பலரிடமும் கேட்டேன். அவர்களும் தெரியவில்லை என்றார்கள்.

‘வி.கிருஷ்ண மேனன்’ என்று போட வேண்டியதுதானே. ‘வி.கே.மேனன்’ என்று சுருக்கி போட்டுள்ளீர்களே? என்று கேட்டதும் உண்டு. கிருஷ்ண மேனன் வெளிநாட்டுத் தலைவர்களோடும் தொடர்பில் இருந்தவர். வின்ஸ்டன் சர்ச்சிலுடன் கூட அவருக்குத் தொடர்பு உண்டு.
ஒருமுறை பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், ‘‘தேசப் பிதா காந்தி போராடியதால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னார்கள்.

உண்மைதான்.. ஆனால் அதுமட்டும் காரணமல்ல... பிரதமர் தேர்தலில் சர்ச்சிலை வென்று அட்லீ, பிரிட்டிஷ் பிரதமர் ஆனதால், நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘நான் பிரதமரானால் காலனி நாடுகளுக்கு விடுதலை தருவேன்’ என்று உறுதி கொடுத்தார். அதன்படி, நமக்கு விடுதலை கிடைத்தது’’ என்று எழுதியிருந்தார்.

பின்னாளில் ராணுவ அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன், ஜீப் வாங்கிய ஊழல் புகாரால், தன் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

‘பஞ்சசீலக் கொள்கை’ என்ற பெயரில் 5 கொள்கைகளை நேரு வெளியிட்டார். “ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது, அந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும், ஒரு நாட்டினுடைய பாதுகாப்பில் குந்தகம் விளைவிக்கக் கூடாது, ஒரு நாட்டின் நிலத்தை மீட்கப் போர் தொடுக்கக் கூடாது, அமைதி, சமாதானம் என்ற தாரக மந்திரம் உலக அமைதிக்கு முக்கியம் என்ற கொள்கைகள் அடங்கிய செய்தியை பஞ்ச சீலம்” என்று வெளியிட்டார்.

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் படேல், இந்தியாவை ஒருங்கிணைத்து வந்தார். ஆனால் ஹைதராபாத் நிஜாம் முரண்டு பிடித்தார். அவர் பாகிஸ்தானோடு இணைய விரும்பினார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் முதல் பிரீமியர் பிரதமராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை ராஜதானியின் ரெஜிமென்ட் பாதுகாப்புப் படையை அனுப்பினார். அப்படித்தான் ஹைதராபாத் நிஜாம் வழிக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த நேரத்தில் உலக அளவில் பிரெஞ்சு அரசியல் சாசனம் மாற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால். பிரெஞ்சு அரசியல் சாசனத்தை 18 - 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றுவார்கள். இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 6 ஆண்டுகளிலேயே 7-வது திருத்தம் வந்தது.

1954-ம் ஆண்டில், அவினாசி லிங்கம் செட்டியார், பெரியசாமி தூரன் தயாரித்த ‘தமிழ் கலைக்களஞ்சியம்’ முதல் தொகுப்பு வெளியானது. இதை அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ‘இது தன்னுடைய கனவு’ என்று சிலாகித்தார்.

இந்த காலத்தில், கல்கி கிருஷ்ணமூர்த்தி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தார்கள்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா. அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவருடைய குருவான ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரிதம்’ நூலை வெளியிடாமல் தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்று விடாமுயற்சியுடன், அவர் விரும்பியபடி அந்த நூலின் முதல் தொகுப்பும், தொடர்ந்து 2-ம் தொகுப்பும் அந்த காலகட்டத்தில் வெளிவந்தன.

1956-ம் ஆண்டுவாக்கில், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் கலவரங்களைத் தூண்டினர். தமிழர்கள் தாக்கப்பட்டனர். தொடர்ந்து பெரும் கலவரம் ஜூன் 1956-ல் தமிழர் பகுதியில் நடந்தது.

சென்னை ராஜ்ஜியத்தின் ஆட்சி மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்று சென்னை கவர்னர் பிரகாசா மேலவை மற்றும் கீழவை கூட்டத்தில் ஆளுநர் உரையில் அறிவித்தார். கல்வி நிலையங்களில் தமிழையே பயிற்சி மொழியாக அறிவிக்கப்படும் என்று அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1956 ஆளுநர் உரையில் கூறப்பட்டது.

1958-ல் அண்ணா, ‘என்னுடைய சட்டசபை அனுபவங்கள்’ என்று ஆனந்த விகடனுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர், ‘‘நான் சட்டமன்றத்தில் பங்கேற்றபோது, என் மீது காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஏனோ ஐயப்பாடு இருந்து. மேலும், ‘நான் என்ன பேசுவேன்? என்ன சொல்வேன்? ஒருவேளை நான் அலட்சியப்படுத்தப்படுவேனோ?’ என்ற கருத்தும் அன்றைக்கு இருந்தது.

அன்றைக்கு சட்டப்பேரவைத் தலைவராக டாக்டர் யு.கிருஷ்ணராவ் இருந்தார். அவர் கர்நாடகத்தைச் சார்ந்தவர். நான் அந்த அவையின் உறுப்பினராக நுழைந்தால், அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற சந்தேகம் எழுந்தது, என்னுடைய கன்னிப் பேச்சு சட்டமன்றத்தில் எப்படி அமையும் என்ற யூகங்கள் எல்லாம் அன்றைக்குப் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தன” என்று குறிப்பிட்டிருந்தார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, என்.டி.சுந்தரவடிவேலுவின் ஆலோசனைப்படி, இலவச மதிய உணவு திட்டத்தை அறிவித்தார். ‘தனி மனிதனுக்கு உணவில்லை எனில், ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று முழங்கிய முண்டாசுக் கவி பாரதி பிறந்த எட்டையபுரத்தில் இத்திட்டத்தை காமராஜர் தொடங்கி வைத்தார். அந்த விழாவில், என்.டி.சுந்தர வடிவேலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு. சோமையாஜுலு, ராஜாஜி குஞ்சிதபாதம் போன்றோர் பங்கேற்றனர். இந்த திட்டத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்றைக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார். இது அன்றைக்கு பெருந்தொகை.

இதற்கிடையே, காங்கிரஸில் இருந்து பிரிந்து சுதந்திரா கட்சியை ராஜாஜி ஆரம்பித்தார். “ஆவடி மாநாட்டில் நேரு அறிவித்த சோசலிசத்தின் மீது எங்களுக்கு விருப்பம் இல்லை. நேரு கம்யூனிசத்தை நோக்கி செல்கிறார் தாராளமயமான சூழ்நிலை இருக்க வேண்டும்” என்று ராஜாஜி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் 1960-ல் வெள்ளச் சேதம் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். அப்போது, நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றவர்கள் வெள்ள நிவாரணமாக பெரும் தொகையை முதல்வர் காமராஜரிடம் அளித்தனர்.
இந்த வெள்ள பாதிப்பு காலத்தில், தமிழில் புதிய பாதையில் படைப்புகளை வழங்கிய முதல் பெண்மணியான வை.மு.கோதைநாயகி அம்மாள் மறைவு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இன்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அன்றைக்கு... எல்லா கிராமங்களிலும் கல்வி, சாலை, மின் வசதி பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. கல்வி மேம்பட கிராமங்கள்தோறும் பள்ளிக் கூடங்கள் நிறுவப்பட்டன. கிராமங்கள் என்றால் 1 முதல் 5 வகுப்பு, பெரிய ஊர்கள் என்றால் 1 முதல் 8 வகுப்பு என்ற திட்டத்தின் கீழ், திருத்தணி பள்ளிப்பட்டில் இருந்து கன்னியாகுமரி பத்மனாபபுரம் வரை ஒரே மாதிரியான அமைப்புடன் ஓட்டுப் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

கிராமந்தோறும் பள்ளி என்ற இத்திட்டத்தை வெங்கடாசலபதி சிறப்பு அதிகாரியாக இருந்து செயல்படுத்தினார். இந்த வெங்கடாசலபதி யார் தெரியுமா? காந்தியின் செயலாளராக இருந்த ஜோசப் குமரப்பாவோடு இணைந்து நாட்டின் ஆதாரப் பணிகளை விரிவுப்படுத்த வேண்டும் என்று கடமையாற்றியவர்.

ஜோசப் குமரப்பாவும், வெங்கடாசலபதியும் இணைந்து, தேனி மாவட்டம் கல்லுப்பட்டியில் காந்தி நிகேதன் ஆசிரமத்தை நிறுவி, கிராமப்புற பணிகளைச் செய்தனர். ஜோசப் குமரப்பா, தஞ்சையில் பிறந்தவர். காந்தியிடம் அவரது செயலாளராக இருந்தபோது, காந்தி வசூலிக்கும் நன்கொடை, மற்றும் நிதி விவகாரங்களை இவர்தான் மேலாண்மை செய்தார்.

அண்ணல் காந்தி பணம் கேட்டால் ஆயிரம் கேள்விகள் கேட்டு, கையெழுத்து... அது இதுவென்று மிகவும் கறாராக நடந்து கொள்வாராம். ஜோசப் குமரப்பாவிடம் பணம் வாங்குவதற்கு, தான் பெரும்பாடு பட்டதாக காந்தி வேடிக்கையாகச் சொல்வதுண்டு.
தமிழகத்தில் ஆரம்பகால அமைச்சர்களாக இருந்த கோபால் சுவாமி அய்யங்கார், சந்தானம், டி.டி.கே.கிருஷ்ணாமாச்சாரி போன்றவர்களோடு ஜோசப் குமரப்பாவும் அமைச்சராக வீற்றிருந்திருக்க வேண்டும். ஆனால், ஜோசப் குமரப்பாவுக்கு பதவிகள், பொறுப்புகள் மீது ஆர்வம் இருந்ததில்லை.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுத பட்டவர்த்தன் போன்றவர்களை எல்லாம், தமது அமைச்சரவையில் சேரும்படி நேரு அழைத்தபோதும், அவர்கள் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட தியாக சீலர்கள் அன்றைக்கு நம்முடைய அரசியல் களத்தில் இருந்தார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், தலைவர்களை விரும்பி, மக்களே வாக்களித்தார்கள்.

அப்படியானதொரு அருமையான, ஆரோக்கியமான அரசியல் இருந்த காலம் அது...

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x