Published : 28 Jun 2025 12:24 PM
Last Updated : 28 Jun 2025 12:24 PM

விமர்சனத்துக்கு உள்ளான நேருவின் நடவடிக்கைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 33

ஜவஹர்லால் நேரு, ஆர்.கே.சண்முகம் செட்டியார், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, சேலம் வரதராஜுலு நாயுடு

1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர், ஜவஹர்லால்நேரு தலைமையிலான முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார். இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இவர் நீதிக்கட்சியைச் சார்ந்தவர். கோவையில் பிறந்தாலும் கொச்சி சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். அதேபோல டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நல்ல கல்வியாளர், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். நேரு அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பன்முகத் தன்மை உடையவர்.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் மற்றும் சட்டத் துறை அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வைக்கு வராமலேயே, தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபால் சுவாமி ஐயங்கார் அந்த சட்டத்துக்கான முழு வடிவத்தைக் கொடுத்தார். பிரதமர் நேருவினுடைய அறிவுரையின்படி சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு வழங்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய முக்கியமான விவகாரத்தை அவர்களுக்குத் தெரியாமல் கமுக்கமாக நேரு மேற்கொண்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுகுறித்து நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘காஷ்மீருக்கு 370-வது பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கலாம்’ என்று மழுப்பலாக பட்டும் படாமல் பதில் சொல்லிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார்.

காஷ்மீர் பிரச்சினையில் நேரு நடந்து கொண்ட விதத்தில் அதிருப்தியடைந்து, அமைச்சரவையில் இருந்து சியாமா பிரசாத் முகர்ஜி விலகினார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி 1951-ம் ஆண்டு ‘ஜன சங்கம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதுதான் பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. சியாமா பிரசாத் முகர்ஜியைத் தொடர்ந்து, பி.ஆர்.அம்பேத்கரும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

பின்னாளில், ‘அல்லும் பகலும் அயராது உழைத்தும் நன்றி இல்லையே’ என்று மனவருத்தத்துடன் ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் பதவி விலகினார். இந்த மூன்று பேரும் பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் நேர்மையைக் கடைபிடித்த போற்றுதலுக்குரியவர்கள். மேலே குறிப்பிட்ட கோபால் சுவாமி ஐயங்கார் யாரென்றால்...டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜி.பார்த்தசாரதியின் தந்தையாவார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நான் சில காலம் பயின்றேன். எனக்குப் பிறகு இன்றைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியவர் ஜி.பார்த்தசாரதி. சுருக்கமாக இவரை ‘ஜி.பி.’ என்பார்கள்.

தூதரக அதிகாரியாக ஜி.பார்த்தசாரதி இருந்தபோதுதான், பேரறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது அண்ணாவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து கொடுத்தவர் ஜி.பார்த்தசாரதிதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திரா காந்தியின் தூதராகவும் இவர் செயல்பட்டார். இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களைத் தயாரித்தது. அப்போது, நம்மை தற்காத்துக் கொள்ள அணு ஆயுத நடவடிக்கையில் நேரு முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் பஞ்ச சீலம், அணிசேரா கொள்கை போன்றவற்றில் கவனம் செலுத்தினார் நேரு.

அன்றைக்கு உலக அரசியல் சோவியத்து ரஷ்யா, அமெரிக்கா என இரண்டு பிரிவுகளாக இருந்தது. இந்தியப் பிரதமர் நேரு, யூகோஸ்லோவேகியா அதிபர் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசியா அதிபர் சுகர்னோ போன்றவர்கள் நடுநிலையாக அணிசேரா நாடுகளாக, உலக அரசியலில் மூன்றாவது அணியாக, அமெரிக்கா - ரஷ்யாவைச் சாராமல் தனி அணியாக இருந்தார்கள். அதேபோல போர்ச்சுக்கல், சூயஸ் கால்வாய் பிரச்சினைகளிலும் இந்தியாவினுடைய பங்கு முக்கியமாகக் கருதப்பட்டது.

இரண்டாவது உலகப் போரின்போது, பல்வேறு நாடுகளின் அணுகுமுறையில் இருந்து இந்தியாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வாய்ப்பு கிடைத்தும் நேரு அதை மறுதலித்துவிட்டார். காஷ்மீர் சிக்கலை ஐ.நா.வின் மத்தியஸ்தத்துக்கு அனுப்பியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்ததை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து நேரு மீது இன்றைக்கும் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் 1951-ம் ஆண்டு, முதல்முதலாக இந்திய அரசியலமைப்பு பிரிவு 356-ஐப் பயன்படுத்தி பஞ்சாபில் மாநில காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டவை.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் தேர்வு: அன்றைக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் ராஜாஜி ஒரு முனையிலும், காமராஜர் வேறு முனையிலும் என இரு துருவங்களாக இருந்தார்கள். காமராஜருக்கு குரு சத்தியமூர்த்தி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சத்தியமூர்த்தி வந்தபோது, காமராஜர் துணைத் தலைவராகவோ, செயலாளராக இருந்ததாக நினைவு... இப்படியான நிலையில், ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியவுடன், முதலமைச்சருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காமராஜரும், சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டனர். தேர்தல் பார்வையாளராக இந்திரா காந்தியை நேரு அனுப்பி வைத்தார். இந்தத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜர் முதலமைச்சர் ஆனதும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவருக்கு ஆதரவாக இருந்த பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

முதலமைச்சர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சேலம் வரதராஜுலு நாயுடு இருந்தார். இவர் ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் ஆசிரியர். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில ஏட்டையும் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் சதானந்தத்துக்கு விற்று விட்டார். அவரிடம் இருந்து ராம்நாத் கோயங்கா வாங்கிக் கொண்டார். இந்த சேலம் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது பெரியார் ஈ.வெ.ரா., காங்கிரசின் செயலாளராக இருந்தார்.

சேலம் வரதராஜுலு நாயுடுவைப் பற்றி இங்கு சற்று விரிவாக குறிப்பிட்டாக வேண்டும். இலங்கைக்கு 1948-ல் சுதந்திரம் கிடைத்தது. இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்பு, மகாத்மா காந்தியை இலங்கைக்கு வருமாறு அழைத்தனர் இலங்கைத் தமிழர்கள். உடனே சேலம் வரதராஜுலு நாயுடுவை காந்தி அழைத்து, இலங்கைக்குச் சென்று, ஈழத்தில் உள்ள தமிழர்கள், மலையகத் தமிழர்களின் சமூக நிலைப்பாடு குறித்து அறிந்து வருமாறு கூறினார்.

கப்பலில் இலங்கை சென்ற சேலம் வரதராஜுலு நாயுடு, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றி அறிந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பூர்வீகத் தமிழர்களான, அந்த மண்ணின் மைந்தர்களான வடக்கு, கிழக்கு ஈழத்துத் தமிழர்கள் நல்ல படிப்பாளிகளாக, சிந்தனையாளர்களாக விளங்கினர். அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கமும், தெற்கே இருக்கின்ற சிங்கள பவுத்தர்களும் எதிரிகளாகப் பாவித்து, புறக்கணிக்கிறார்கள் என்றும், மலையகத்தில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் மிகவும் அவலமான நிலையில் தங்குவதற்கே இடமில்லாமல், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் நிறைந்துள்ள காடுகளிலும், மாட்டுத் தொழுவங்களிலும் வசிக்கின்றதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை என்று இந்தியா வந்ததும் காந்தியிடம் நெகிழ்ந்து கூறினார் வரதராஜுலு நாயுடு.

இலங்கை தமிழர்களுக்கு மகாத்மா காந்தி நன்கொடை: மகாத்மா காந்தியைப் பொருத்தவரை இந்தியாவில் பெருவாரியான இடங்களுக்குச் செல்லும்போது நன்கொடைகள் வாங்குவார். அதேநேரம் பெரிய அளவில் செலவுகள் அவர் செய்ததில்லை. வரதராஜுலு நாயுடு சொன்ன சேய்தியைக் கேட்டு இலங்கைக்குச் சென்ற காந்தி, மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் குறிப்பாக பெண்களுடைய முன்னேற்றத்துக்கும், கல்விக்கும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வந்தார்.

அங்குள்ள ராமநாதன் பெண்கள் கல்லூரியின் விரிவாக்கத்துக்கும் காந்தி நன்கொடைகள் கொடுத்தது உண்டு. காந்திக்குப் பின் நேருவும் இலங்கைக்குச் சென்றார். இந்தியாவில் பாண்டிச்சேரி, ஏனாம், மேற்கு வங்கத்தில் சந்திரநாகூர், கேரளத்தில் உள்ள மாகி ஆகியவை எவ்வாறு பிரெஞ்சுக்காரர்களின் காலனியாக இருந்ததோ, அதேபோல் கோவா, டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது.

அதேபோல் இலங்கையும் வெவ்வேறு கட்டங்களில் ஐரோப்பியர்களிடம் மாட்டிக் கொண்டது. அங்குள்ள தேயிலையை வியாபாரம் செய்து, ஐரோப்பியர்கள் பணம் கொழித்தார்கள். குறிப்பாக, மீன், ரப்பர், மிளகு போன்றவற்றை மிகப் பெரிய அளவில் வியாபாரம் செய்தனர். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கல்கத்தாவில் நிறுவி, பிறகு சென்னையை ஆற்காடு நவாபிடம் வழங்கி, வரி வசூலித்தார்கள். பின்னர், பம்பாய் என 3 இடங்களில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டதைப் போல, இலங்கையிலும் கொழும்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை, கண்டி, காளி போன்ற இடங்களில் முகாம்களை அமைத்துக் கொண்டு வியாபார ரீதியாக பணத்தை வசூலித்தார்கள்.

நெப்போலியன் சொல்வார், ‘திரிகோணமலை துறைமுகம் யார் கையில் இருக்கின்றதோ அவர் தான் தென்கிழக்கு ஆசியாவை ஆள வல்லமை பெற்றவர்’ என்று. அப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற துறைமுகமாக, முக்கிய கேந்திர நகரமாக அது விளங்கியது. தலைசிறந்த துறைமுகங்கள் என்ற வரிசையில் சிட்னி துறைமுகம் முதல் துறைமுகம் என்றால், அடுத்து திரிகோணமலை. பாறைகளும் மலைக்குன்றுகளுமாக திரிகோணமலை துறைமுகம் இருக்கும். மலைக்குன்றுகளுக்குள் இருக்கும் ஒரு கப்பல் மற்ற கப்பலுக்குத் தெரியாது.

திரிகோணமலையில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திரிகோணேசுவரர் ஆலயம், இந்துமகா சமுத்திரத்தை ஒட்டி மலையில் உள்ளது. அதேபோல், மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் புகழ்பெற்ற ஈஸ்வர ஆலயங்கள் உள்ளன. நல்லூர் கந்தசாமி கோயில் சிறப்பான பாடல் பெற்ற முருகன் கோயிலாகும். எங்கள் பகுதி ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சம்ராஜ்யத்தின் ஜமீன்தார்கள் அடங்கிய பகுதியாக இருந்தது. குருவிகுளம் ஜமீன் வகையினர், எங்களுடைய உறவினர்கள். அதேபோல், அருகில் உள்ள இளைய அரசனேந்தல், பேப்பர் சாமி என்ற அப்பாசாமி வகையைச் சேர்ந்தவர்களான இளையரசன்கள் ஜமீன்தாராக இருந்தார்கள். அவர்கள் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மராட்டியர் வருவதற்கு முன் அங்கிருந்து நகர்ந்து இங்கு வந்தவர்கள்.

கிராஃபைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: எங்கள் குருவிகுளம் ஜமீன்தார்கள் ‘கொண்டல்ராயன்’ என பெயர் கொண்டவர்கள். அப்போது, எங்கள் ஊரில் கிராஃபைட் இருக்கின்றது என்று ஆங்கில அரசாங்கம் திருநெல்வேலி கலெக்டர் மூலமாக மைசூர் பல்கலைக்கழக ஜியாலஜி (புவியியல்) பேராசிரியர் ஆய்வு செய்தது. அதில் கிராஃபைட் இருப்பது உறுதியானவுடன் எங்கள் ஊரில் கிராஃபைட் தொழிற்சாலை கொண்டுவர பிரிட்டிஷார் முயற்சி செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என்னுடைய பாட்டனார் ஆர்.வெங்கடாஜல நாயுடுவும், என்னுடைய உறவினர் குருவிகுளம் ஜமீன்தார் கொண்டல்ராயனும், வில் வண்டியில் கோவில்பட்டி சென்று, அங்கிருந்து ரயிலில் திருநெல்வேலி போய் கலெக்டரிடம் முறையிட்டனர். ஜமீன்தார் கொண்டல்ராயனுக்கு கலெக்டருடன் நெருங்கிய நட்பு இருந்தது. பிரிட்டிஷார் மாதிரி ஆங்கிலம் சரளமாகப் பேசுவார். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர்.

அதைத்தொடர்ந்து, விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிராஃபைட் ஆலை வராமல் நிறுத்தப்பட்டது. திரும்பவும் அந்த ஆலையை 1964ல் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. என் தந்தையார் காமராஜருக்கு நெருக்கமானவர். அவர் மூலம் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் சொல்லி ஆலை வருவதை தடுத்து நிறுத்தினோம். மீண்டும் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் கிராஃபைட் ஆலை அமைக்க திட்டமிட்டது மத்திய அரசு.

பெரும் போராட்டத்துக்கு இடையே நான், அமித் ஷாவைச் சந்தித்து 3-வது முறையாக ஆலை வருவதை தடுத்து நிறுத்தினேன். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையும் உதவி செய்தார். இதுகுறித்து அவரது சமூக வலைதளத்தில் கூட பதிவு செய்தார்.

மதுரையில் அரிட்டாபட்டி டங்க்ஸ்டனை திட்டத்தை விட அதிகமான கிராமங்கள், ஏறத்தாழ 15 கிராமங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட வேண்டிய ஆலையாக அது இருந்தது. எங்கள் கிராமம் உட்பட அந்த 15 கிராம மக்கள், தாங்கள் பிறந்த ஊரை விட்டு அகதிகளாக செல்ல வேண்டிய நிலை இருந்தது. என்னுடைய பாட்டனார், எனது தந்தையார், தற்போது (2024) அடியேன் இந்த ஆலை வருவதை தடுத்து நிறுத்தினோம். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும் வந்தன.

ஆவடியில் காங்கிரஸ் மாநாடு: 1955-ஆம் ஆண்டு ஆவடியில் இந்தியாவே திரும்பப் பார்க்கக் கூடிய அளவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில், ‘சோசலிசம் எங்களுடைய அடிப்படை திட்டம்’ என்பது நேருவின் கோஷமாக முன்னெடுக்கப்பட்டது. இம்மாநாட்டை பெருந்தலைவர் காமராஜர் முன்னின்று நடத்தினார். இதற்கான உதவிகளை டிவிஎஸ் நிறுவனம் செய்தது உண்டு. மாநாட்டில், தமிழகத்தின் உணவான இட்லி அவிக்க பெரிய பெரிய பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. சாம்பார், சட்னி, எண்ணெய் பொடியை நேருவிலிருந்து வடபுலத்து தலைவர்கள் அனைவரும் ருசித்துச் சாப்பிட்டார்கள்.

அனைவருக்கும் இட்லி மட்டுமல்ல; தோசையும் பரிமாறப்பட்டது என்றெல்லாம் துணுக்குச் செய்திகளாக அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்த காலகட்டத்தில், வல்லபாய் பட்டேல் துணைப் பிரதமராக பதவி வகித்தார். முரண்டு பிடித்த பல சமஸ்தானங்களை விடாப்பிடியாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்து இரும்பு மனிதராக அவர் விளங்கினார்.

அந்த வகையில், தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மாநில படையும், மத்திய படையும் சேர்ந்து ஹைதராபாத் நிஜாமை பணிய வைத்து, இந்தியாவுடன் சேர வழிவகை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் கே.எஸ். திம்மையா பாதுகாப்பு படையின் தலைவரானார். அதேபோல், இந்திய விமானப் படை ஜெட் ‘பாம்’பர் விமானங்களைக் கட்டமைத்தது.

இரண்டாவது உலகப் போர் முடிந்து, சூயஸ் கால்வாய் பிரச்சினை உலகளவில் பேசப்பட்டபோது, இந்தியாவின் கருத்து முக்கியமாக எகிப்து அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில்தான், ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் குறித்தான ஆரம்பகட்ட விளக்கங்கள் வெளியிடப்பட்டன.

உலகில் நடுநிலை என்ற பெயரில், சுவிட்சர்லாந்து போன்ற 10, 12 நாடுகள் ‘நாங்கள் பாதுகாப்புப் படைகளை வைத்துக் கொள்ளப் போவதில்லை; எனவே எங்கள் மீது யாரும் போர் தொடுக்கக் கூடாது’ என முடிவெடுத்தன. அதைத்தொடர்ந்து அந்த நாடுகளின் மீது படையெடுப்பதில்லை என்று உலக அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் முக்கியமானவை.

காஞ்சிபுரத்தில் அண்ணா போட்டி: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா, 1957 தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அண்ணாவால் முன்னர் பாராட்டப்பட்ட டாக்டர் சீனிவாசன் என்பவரே இவரை எதிர்த்து களத்தில் நின்றார். தேர்தல் களம் அனல் பறந்தது. காஞ்சிபுரம் வீதிகளில் பெரியார் வீடு வீடாகச் சென்று, ‘கண்ணீர் துளிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று அண்ணாவுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதையும் மீறி, தேர்தலில் அண்ணா வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில், ‘வேட்பாளர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசக்கூடாது, சாதி, மதம் கூறி ஆதரவு தேடக் கூடாது, மக்களிடம் உண்மையைப் பேச வேண்டும், ஓட்டுக்கு காசு கொடுக்கக் கூடாது, மக்களுக்கு அறிவு புகட்டக் கூடிய அளவில் தேர்தல் பணி இருக்க வேண்டும்’’ என்றெல்லாம் கட்சிகளை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 8.9.1957-ல் காலமானார். அவரது உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர். இதே காலத்தில்தான் படைப்பாளி தேவனும் மறைந்தார்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > தமிழ் வளர்த்த ‘மூவர்’, கலைஞர் குறிப்பிட்ட ‘சிங்கப்பார்வை’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 32

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x