Last Updated : 28 Jun, 2025 09:50 AM

 

Published : 28 Jun 2025 09:50 AM
Last Updated : 28 Jun 2025 09:50 AM

கடற்கரை பாதை பராமரிப்பு அவசியம்

மாற்றுத் திறனாளிகள் கடற்கரை அழகை அருகில் சென்று கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் வருத்தமளிக்கும் விஷயமாகும். கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இது மக்கள்தொகையில் 2.21 சதவீதமாகும். தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் உள்ள மாற்றுத் திறனாளிகளையும் மனதில் கொண்டே வளர்ச்சிப் பணிகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்வுப்பாதை அமைத்தல், புதிய பேருந்துகள் வாங்கும்போது தாழ்தளப் பேருந்துகளாக இருப்பதை உறுதி செய்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் மணலில் நடந்து செல்வதற்கு சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, பிரத்யேக நடைபாதை கடந்த 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ரூ.1.15 கோடி செலவில் 263 மீட்டர் நீளம், 3.4 மீட்டர் அகலத்தில் மரப்பலகைகளைக் கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை கடல் அலைக்கு 10 மீட்டர் தொலைவு வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வசதி, மேண்டஸ் புயலில் சேதமடைந்தது. உடைந்த மரப்பலகைகள் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலையில் 2023-ம் ஆண்டு வீசிய மிக்ஜாம் புயலில் மீண்டும் சேதமடைந்தது. அதுவும் பின்னர் சீரமைக்கப்பட்டது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தி வந்த நிலையில், மீண்டும் மரப் பலகைகள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்திருப்பது மாற்றுத் திறனாளிகளை கவலையடையச் செய்துள்ளது. எலியட்ஸ் கடற்கரையில் 190 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையும் பராமரிப்பின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக கடற்கரையை ஒட்டி இருப்பதால், உப்புக் காற்று வீசுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதிக காற்று வீசுவதன் மூலம் மணல் தேங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயற்கை. இந்தப் பாதையை தனியாக ஆட்களை நியமித்து தினமும் சுத்தம் செய்து பராமரித்தால் மட்டுமே அன்றாடம் பயன்படுத்தும் நிலையில் இருக்கும்.

இந்தப் பாதையில் செல்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்றும், கடல் அலைக்கு நெருக்கமாக செல்லும் வகையில் பாதையை நீட்டிக்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகள் கோரி வருகின்றனர். கடற்கரைக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ ஆர்வலர்களை நியமிக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய சமூகமாக திகழ வேண்டுமென்றால் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பது மிக அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x