Last Updated : 27 Jun, 2025 06:16 AM

 

Published : 27 Jun 2025 06:16 AM
Last Updated : 27 Jun 2025 06:16 AM

தென் ஆப்ரிக்க வெற்றி உணர்த்தும் சமூக நீதி

‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 14 அன்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கோப்பையைத் தென் ஆப்ரிக்கா வென்றதை உலகமே கொண்டாடியது. தென் ஆப்ரிக்க வீரர்கள் குதூகலக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, மைதான பால்கனியில் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருக்காமல் அமைதியில் ஆழ்ந்திருந்தார், அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா. ‘கோட்டா கேப்டன்’ என்று பரிகாசமாக விளிக்கப்பட்ட பவுமாவின் மெளனத்தின் பின்னணியில் நூற்றாண்டு கால நிறவெறியின் வலி உண்டு.

நிறவெறிக் கொள்கை: 27 ஆண்டு​களுக்குப் பிறகு ஐசிசி தொடர் ஒன்றில் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்வது மிகப் பெரிய வரலாற்றுத் தருணம்​தான். குறிப்பாக, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ‘சோக்​கர்ஸ்’ ஆகி தோல்வியடைவதை வழக்க​மாகக் கொண்டிருந்த அணிக்கு, இதைவிடப் பொன்னான ஒரு தருணம் இருக்க முடியாது. ஆனால், பவுமா தலைமையில் அந்த அணி வென்றதுதான் உலகின் கவனத்தைக் குவித்​திருக்​கிறது. உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் எந்த அணியிலும் இல்லாத வீரர்கள் தேர்வு முறை தென் ஆப்ரிக்கக் கிரிக்​கெட்டில் உண்டு. அதுதான் கறுப்​பினத்​தவருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை.

விளையாட்டில் இடஒதுக்கீடு ஏன் என்பதற்கு தென் ஆப்ரிக்​காவின் நிறவெறி வரலாறு அவல சாட்சியமாக விளங்​கிக்​கொண்​டிருக்​கிறது. தென் ஆப்ரிக்​காவில் நிலவிய நிறவெறிக்கு நீண்ட வரலாறு உண்டு. தென் ஆப்ரிக்கா ஆங்கிலேயரிட​மிருந்து விடுதலை பெற்ற பிறகும் மனித குலத்​துக்கு எதிரான நிறவெறிப் போக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்​கப்​பட்டது இன்னொரு துயரம். அதேவேளை​யில், நிறவெறிக் கொள்கை காரணமாக, ஐக்கிய நாடுகள் அவையி​லிருந்து 1974இல் தென் ஆப்ரிக்கா நீக்கப்​பட்டது. அதனால், உலக நாடுகளி​லிருந்து தென் ஆப்ரிக்கா தனிமைப்​படுத்​தப்​பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அந்த அணி விலக்​கப்​பட்டது.

1990இல் நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த பிறகு தென் ஆப்ரிக்கா​வுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் பார்வை மாறியது. இதைத் தொடர்ந்து 1991இல் தென் ஆப்ரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்​கெட்டுக்குத் திரும்​பியது. தடைக்குப் பிறகு முதல் முதலில் இந்தியா​வில்தான் தென் ஆப்ரிக்கா ஒரு நாள் தொடர் கிரிக்கெட் விளையாடியது. தென் ஆப்ரிக்​காவில் 1800களில் இருந்தே கிரிக்கெட் விளையாடப்​பட்டு வருகிறது.

1889இல் தென் ஆப்ரிக்கா சர்வதேச கிரிக்கெட் அணியாக உருவெடுத்தது. தென் ஆப்ரிக்​காவில் கறுப்​பினத்​தவர்களே அதிகம். என்றாலும் கிரிக்​கெட்டில் வெள்ளையின வீரர்​களின் ஆதிக்கமே நீடித்தது. குறிப்பாக, 1956இல் தென் ஆப்ரிக்க அரசின் விளையாட்டுக் கொள்கைப்படி அந்நாட்டு அணி சார்பில் வெள்ளை​யினத்​தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்கிற அநீதியான அறிவிப்பு வெளியிடப்​பட்டது. இதனால், திறமையான கறுப்பின வீரர்கள் ஓரங்கட்​டப்​பட்​டனர்.

ஏன் இடஒதுக்​கீடு? - தென் ஆப்ரிக்​காவில் நிறவெறியின் அடக்கு​முறை​களுக்கும் ஒடுக்​கு​ முறை​களுக்கும் பல தசாப்​தங்களாக ஆளான கறுப்​பினத்​தவர்​களுக்கு இடஒதுக்கீடு என்பது காலத்தின் தேவையாக இருந்தது. தென் ஆப்ரிக்​காவின் மக்கள்​தொகையில் 50%க்கும் அதிகமானோர் கறுப்​பினத்​தவர்களாக இருந்​தா​லும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்​கப்​பட​வில்லை.

1990களில் சர்வதேச கிரிக்​கெட், ரக்பி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு​களுக்குத் தென் ஆப்ரிக்கா திரும்​பி​னாலும், வெள்ளையின வீரர்களே அணிகளில் ஆதிக்கம் செலுத்​தினர். 1998இல் நெல்சன் மண்டேலா ஆட்சிக் காலத்தில் நிறவெறித் தடைச் சட்டமும், விளையாட்டு​களில் கறுப்​பினத்​தவருக்கு இடஒதுக்​கீடும் கொண்டு​வரப்​பட்டன. அதன்பிறகுதான் தென் ஆப்ரிக்​காவில் மாற்றத்​துக்கான விதை துளிர்​விட்டது.

இதன் தொடர்ச்சி​யாகவே 2013இல் தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே கொள்கை வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கறுப்பின / கலப்பின வீரர்களாக இருக்க வேண்டும். அவர்களில் இருவர் ஆப்ரிக்கக் கறுப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்​கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பிறகே சமூகத்தின் அனைத்துத் தரப்பு வீரர்​களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெறத் தொடங்கினர்.

மகாயா நிட்னி, ஹாசிம் ஆம்லா, பால் ஆடம்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், பிளாண்டர் போன்ற சிறந்த வீரர்கள் தென் ஆப்ரிக்க அணிக்குக் கிடைத்​தனர். என்றாலும் இடஒதுக்​கீட்டு வீரர்கள் (Quota players) என்று இவர்கள் மீது முத்திரை குத்தப்​படுவது தொடர்ந்தது. அணியில் கறுப்பின வீரர்கள் வந்த போ​தி​லும்கூட சக வெள்ளையின வீரர்​களின் நிறவெறிப் பேச்சும் செயலும் நின்ற​பாடில்லை!

இடஒதுக்கீடு விமர்சனம்: வெள்ளையின வீரர்களால் கறுப்பின வீரர்கள் அவமானத்​துக்கு ஆளாகினர். இவற்றையெல்லாம் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்’ என்கிற இயக்கத்தின் மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் கடந்த காலங்​களில் வெளிப்​படுத்​தி​யுள்​ளனர். குறிப்பாக, அந்த அணி நீண்ட காலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாததற்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறையும் காரணம் என்கிற குற்றச்​சாட்டும் தொடர்ந்து முன்வைக்​கப்​பட்டு வந்தது. இப்படியான குற்றச்​சாட்டுகள் வெள்ளையின வீரர்கள், அவர்களுடைய ஆதரவாளர்​களால் முன்வைக்​கப்பட்ட நிலையில், பவுமா அந்த அணியின் கேப்டனாக நியமிக்​கப்​பட்டது விமர்சனக் கணைகளைக் கூர்மைப்​படுத்​தியது.

இருநூறு ஆண்டு​களுக்கு மேலான தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்​கப்பட்ட முதல் கறுப்பின கேப்டன் என்கிற பெருமையை பவுமா பெற்றார் (இதற்கு முன்பு மாற்று கேப்டனாக கறுப்​பினத்தைச் சேர்ந்த ஆஸ்வெல் பிரின்ஸ் ஒரு போட்டிக்குச் செயல்​பட்​டிருக்​கிறார்). என்றாலும் ‘கோட்டா கேப்டன்’ என்றே தொடர்ந்து விளிக்​கப்​பட்டார் பவுமா. ஆனால், இதுபோன்ற விமர்​சனங்​களுக்கு எல்லாம் தன்னுடைய திறமை, தனித்துவமான தலைமையின் மூலம் பவுமா கோப்பையை வென்று பதிலடி தந்திருக்​கிறார்.

வெற்றியைக் கொண்டாடிக் களிக்​காமல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பவுமா உட்கார்ந்​திருந்தது, கிரிக்​கெட்டில் கறுப்​பினத்​தவர்கள் எதிர்​கொண்ட அடக்கு​முறை​களுக்கு ஒரு மெளன சாட்சியம். தென் ஆப்ரிக்க ரக்பி விளையாட்​டிலும்கூட இதே பிரச்சினை இருந்தது. வெள்ளையின வீரர்​களால்தான் கோப்பை வெல்ல முடியும் என்றெல்லாம் பேசப்​பட்டது. ஆனால், 2019இல் தென் ஆப்ரிக்க ரக்பி அணி கறுப்​பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது.

இடஒதுக்​கீட்டால் தென் ஆப்ரிக்கா கோப்பைகள் வெல்வ​தில்லை என்று நீண்ட காலமாக நிலவிவந்த வாதங்களை சியா கோலிசியைத் தொடர்ந்து பவுமாவும் தகர்த்திருக்​கிறார். பவுமா 2023இல் கேப்டனான பிறகு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தி 9 போட்டிகளை வென்று, ஒரு போட்டியைச் சமன் செய்துள்ளார். இதில், கோப்பை வென்ற இறுதிப் போட்டியும் அடங்கும். கிரிக்கெட் வரலாற்றில் 10 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தும் தோல்வி அடையாத முதல் கேப்டன் பவுமா என்பது அவருடைய திறமைக்கும் தலைமைக்கும் ஒரு சான்று.

“உலகை மாற்றும் சக்தி​யும், ஊக்கமளிக்கும் சக்தியும் விளையாட்டுக்கு இருக்​கிறது” - நிறவெறி அடக்கு​முறை​களுக்கு எதிராகப் போராடிச் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா உதிர்த்த வார்த்தைகள் இவை. மண்டேலாவின் வார்த்தைகளைச் சாத்தி​யப்​படுத்​தி​யிருக்​கிறது தென் ஆப்ரிக்க அணி. கூடவே, தென் ஆப்ரிக்க விளையாட்டுத் துறையில் சமூக, சம நீதிக்கான மாற்றங்​களும் துளிர்​விடத் தொடங்​கியிருக்​கின்​றன.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x