Published : 25 Jun 2025 10:17 AM
Last Updated : 25 Jun 2025 10:17 AM
உலகப் பொருளாதார மன்றம் (The World Economic Forum) 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பாலின இடைவெளி அறிக்கையை (Global Gender Gap Report) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 148 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டில் ஆண்-பெண் இடையே பாரபட்சமற்ற நிலை நிலவுவதை முக்கியமான பரிமாணங்களின் அடிப்படையில் நிர்ணயிப்பதை ‘பாலின இடைவெளிக் குறியீடு’ குறிக்கிறது. ஒரு நாடு இந்தப் பட்டியலில் பின்தங்குவது அந்த நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பாரபட்சம் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.
2022இல் பாலின இடைவெளியில் 135ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023இல் 8 இடங்கள் முன்னேறி 127ஆவது இடத்தைப் பிடித்தது; 2024இல் இப்பட்டியலில் இந்தியா பிடித்த இடம் 129. இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. தரவரிசையில் தெற்காசியாவின் மிகவும் பின்தங்கிய நாடு
களில் ஒன்றாக இந்தியா இருப்பதும் கவனத்துக்குரியது.
பாலின இடைவெளி: அரசியல், சமூகம், கல்வி, அதிகாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்காத நிலையில், சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஆண் - பெண் இடையே மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இந்த ஏற்றத்தாழ்வே பாலின இடைவெளிக்கு வழிவகுக்கிறது.
இதில், உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு என்பது, நான்கு முக்கியப் பரிமாணங்களின் அடிப்படையில் பாலினச் சமத்துவத்தை அளவிடுகிறது. அவை - பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்பு (Economic Participation and Opportunity), கல்வி, சுகாதாரம் - வாழ்க்கை நடத்துதல் (Health and Survival), அரசியலில் அதிகாரம் பெறுதல்.
2025 பாலின இடைவெளி அறிக்கையில், உலகளாவிய பாலின இடைவெளியானது 68.8% ஆகக் குறைந்துள்ளதாகவும், இது கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் எனவும் கூறப்பட்டுள்ளது. பாலின இடைவெளியில், தற்போதைய வளர்ச்சி அளவீட்டின்படி எடுத்துக்கொண்டால் பாலினச் சமநிலையை அடைய இன்னும் 123 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஐஸ்லாந்து 16 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முதல் இடத்தில் உள்ளது. அடிப்படைத் துறைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இடைவெளியை 90 சதவீதத்துக்கும் மேல் நிரப்பி உள்ள ஒரே நாடு என்கிற பெருமையை இந்நாடு அடைந்துள்ளது.
தெற்காசியாவைப் பொறுத்தவரை, அரசியல் அதிகார மளித்தல் - பொருளாதாரப் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன், தெற்காசியாவில் சிறப்பாகச் செயல்படும் நாடாக வங்கதேசம் மாறியுள்ளது.
பாலின இடைவெளியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 25ஆவது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது. தெற்காசியாவின் பிற நாடுகளான நேபாளம் 125ஆவது இடத்திலும், இலங்கை 130ஆவது இடத்திலும், பூட்டான் 119ஆவது இடத்திலும், மாலத்தீவுகள் 138ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 148ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் நிலை: பாலின இடைவெளி அறிக்கையில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சரிவைச் சந்தித்து உள்ளது. அவ்வறிக்கையின்படி, இந்தியப் பொருளாதாரத்தின் மொத்தச் செயல்திறன் 0.3 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன்படி இந்தியாவின் பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்பு 0.9 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 40.7% ஆக உள்ளது.
தொழிலாளர் பங்களிப்பு விகிதமானது எந்தவித மாற்றமும் இல்லாமல் 45.9% ஆகத் தொடர்கிறது. கல்வியைப் பொறுத்தவரை இந்தியா 97.1%ஐக் கொண்டுள்ளது; இதன் மூலம் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையானது நேர்மறையாகப் பிரதிபலித்திருப்பது தெரியவருகிறது.
மறுபுறம், அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளித்தலில் 0.6 புள்ளிகள் அளவுக்கு இந்தியா சரிந்துள்ளது. 2024இல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 14.7% ஆக இருந்த நிலையில், 2025இல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 13.8% ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல், அமைச்சர் பதவியில் பெண்கள் அங்கம் வகிப்பது 6.5% இலிருந்து 5.6% ஆகக் குறைந்துள்ளது. அரசியல் பங்களிப்பில் இந்தியாவில் பெண்களின் நிலை தொடர்ந்து கவலைக்குரிய நிலையிலேயே நீடிக்கிறது.
பின்தங்கும் பெண்கள்: இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க பாலின ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதைப் பாலின இடைவெளி அறிக்கை உணர்த்துகிறது. ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 76.4% ஆகவும், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 35.1% ஆகவும் உள்ளது. இவ்வாறு தொழிலாளர் பங்கேற்பில் ஆண் - பெண் இடையே 41.3% பாலின இடைவெளி நிலவுகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு - வேலையின்மையை அளவிடும் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் நடத்திய காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் படைக் கணக்கெடுப்புகள் (PLFS), 2016 - 2017 காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023-24இல் பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டதைக் காட்டுகின்றன.
அந்த வகையில் பெண்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2017-18இல் 22%இல் இருந்து 2023-24இல் 40.3%ஆக இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், இந்த அதிகரிப்புகள் நகரங்களைவிடக் கிராமங்களில் (சுயதொழில்கள் மூலம்) அதிகம் நிகழ்ந்துள்ளன. தவிர, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்தாலும், குறைந்த சம்பளமே பெண்களுக்கு வழங்கப்படுவதும், தரம் குறைந்த வேலைகளிலேயே அவர்கள் அமர்த்தப்படுவதும் தொடர்கின்றன.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களிலும், விவசாயம் போன்ற வேலைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரே மாதிரியான வேலைக்கு ஆண்களுக்கு ரூ.600 ஊதியம் கிடைக்கிறது என்றால், பெண்களுக்கு ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது.
அரசியல் பங்களிப்பு: இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, 1996இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதா அரசியல் சூழல் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டது. அதன் காரணமாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023இல் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய சட்டத்தின்படி, நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், இச்சட்டம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு - எல்லை நிர்ணயப் பணிகள் 2029ஆம் ஆண்டு முடிந்த பிறகே நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அரசியல் கட்சிகள் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, வரும் ஆண்டுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
வலுவான திட்டங்கள் அவசியம்: பெண்கள் வேலைக்குச் செல்வதில் இருக்கும் தடைகளைக் குறைக்கத் தொடர்ச்சியாகப் பல்வேறு கொள்கை முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. எனினும் அவற்றில் கலவையான முடிவுகளே கிடைத்துள்ளன. உதாரணத்துக்கு, 2017இல் திருத்தப்பட்ட மகப்பேறு சட்டம், மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தியது.
50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களையும் கட்டாயமாக்கியது. ஆனால், இதன் செலவு - நிர்வாகப் பொறுப்பு முதலாளிகள் மீது விழுந்ததால், சிறிய நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டத் தொடங்கியதாகச் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பாலின இடைவெளி குறைவதற்குக் கல்வி, அரசியல், பொருளாதாரப் பங்களிப்புகளில் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், சமூக - குடும்பச் சூழல் காரணமாக வீட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதிலேயே பெண்கள் கவனம் செலுத்துகின்றனர்.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள் பெண்களின் சமூகப் பங்களிப்பைக் குறைத்துவிடுகின்றன. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, சமூகத்தில் பெண்கள் சம வாய்ப்பு பெறும் சூழலை உருவாக்க ஆட்சியாளர்கள் வலுவான திட்டங்களை வகுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT