Published : 22 Jun 2025 11:57 AM
Last Updated : 22 Jun 2025 11:57 AM

தமிழ் வளர்த்த ‘மூவர்’, கலைஞர் குறிப்பிட்ட ‘சிங்கப்பார்வை’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 32

இடது: பாபநாசத்தில் உள்ள அகத்தியர் சிலை | வலது - மேலிருந்து கீழாக: கா.சு.பிள்ளை, வையாபுரி பிள்ளை, சேது பிள்ளை.

“நெல்லையில் பிறந்த கா.சு.பிள்ளை, சேதுப்பிள்ளை, பூர்ணலிங்கம் பிள்ளை - இந்த மூன்று பிள்ளைகள் இல்லை என்றால் நமக்குத் தமிழே இல்லை.” - அறிஞர் அண்ணா உரை

கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை இருவரையும் விட மிகவும் வறுமையில் வாடியது பூர்ணலிங்கம் பிள்ளைதான். கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை இருவரையும் பற்றி ஏராளமான நூல்கள் வந்து விட்டன. ஆனால், பூர்ணலிங்கம் பிள்ளையைப் பற்றிதான் ஒருவரும் சரியாக எடுத்துரைக்கவில்லை.

மற்றொரு ஆளுமையான வையாபுரிப் பிள்ளையைப் பற்றி அண்ணா குறிப்பிடாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியினுடைய முன்னெடுப்பில் வையாபுரிப் பிள்ளையின் உழைப்பு மிகவும் முக்கியமானது. தமிழகம் கண்ட அற்புதமான தமிழ்ப் பேராசிரியர் வையாபுரி பிள்ளை.

தாமிரபரணி நதி ஓரம் பாலத்துக்கு பக்கத்தில் அரசியல் பொதுக்கூட்டம் கேட்டதுண்டு. ஒரு முறை சிலம்புச் செல்வர் உரையாற்றினார்: “அந்த நதி மணலில் மேடையிட்டு பாரதியும் வ.உ.சி.யும் வீர முழக்கமிட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. இன்னும் ஒரு சம்பவம் எத்தனை பேருக்கு தெரியுமோ? பாரதியின் இறுதி காலங்களில் ‘சுதேசமித்திரன்’ அலுவலகத்துக்கு வேலைக்கு போவதற்கு முன்னால் நெல்லை வந்திருந்தார். கடையத்துக்குச் செல்கிறார். துணைவியார் செல்லம்மாவைப் பார்த்துவிட்டு எட்டயபுரம் திரும்புகிறார். வழியிலே நெல்லை ரயிலடியில் அவரை வரவழைத்து ஆற்று மணலுக்கு அழைத்து வருகிறார்கள்.

உடன்படித்த மாணவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர் கிருஷ்ணசாமி பாரதி, இவர்களுடன் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் சுப்பையா பிள்ளை, இன்னும் பாரதியின் நண்பர்கள் சிலர் சூழ்ந்து இருக்க, கணீர் குரல் எடுத்து பாரதியார் தான் இயற்றிய பாடல்களை ராகம் இட்டு பாடுகிறார். பரணி நதி மணல் மீது அமர்ந்து கண்டு, கேட்டு ரசித்த இந்த பசுமையான நினைவுகளை பற்றி, சுப்பையா பிள்ளை, கிருஷ்ணசாமி பாரதிக்கு நினைவூட்டி எழுதுகிறார். 60 வருடங்களுக்குப் பிறகு நல்ல நினைவில் வைத்து எழுதி நினைவூட்டுகிறீர்களே என்று கிருஷ்ணசாமி பாரதி பாராட்டினார்.” இவ்வாறு தனது உரையில் குறிப்பிடுகிறார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

மனிதனுக்கு ‘சிங்கப்பார்வை’ அவசியம்

1968-ல் தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் திமுக ஊழியர் கூட்டம் நடைபெறுகிறது. கலைஞர் வருகை தந்திருக்கிறார். அவர் உரையாற்றும்போது குறிப்பிட்டார்:

“இந்த முறை தென்காசியை நாம் விட்டுவிடக்கூடாது. எப்படியும் நமது வேட்பாளர் கதிரவனை எம்எல்ஏ ஆக்கியே தீர வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற மெத்தனம் கூடாது. மனிதனுக்கு எப்போதுமே ஒரு சிங்கப் பார்வை வேண்டும். சிங்கம் முன்னால் ஒரு அடி எடுத்து வைக்கின்ற பொழுது இரண்டு முறை திரும்பி பார்க்கும் வந்த வழியை. அதுபோல் நமக்கும் கடந்த கால பார்வை வர வேண்டும். சிங்கார சென்னையிலே ராபின்சன் பார்க்கிலே வெட்ட வெளியில் கொட்டும் மழையிலே கண்ணீரோடு தொடங்கப்பட்டது நம் கழகம். கண்ணீரும் செந்நீரும் கொட்டி கட்டிக்காத்த கழகம் நம்முடைய கழகம்.

ஆரம்ப காலத்து தொண்டர்களைப் பற்றி ஒருமுறை பக்தவத்சலம் சொன்னது போல ‘அரும்பு மீசை வைத்திருக்கும் திமுக இளைஞர்கள், தொண்டர்கள், சிங்கிள் டீயை குடித்துக் கொண்டே பகல் பூரா ஓடியாடி உழைக்கிறவர்கள்’ என்ற பாராட்டுக்கு உரித்தானவர்களாகப் பாடுபட்ட நம்முடைய கழக கண்மணிகள் அந்த உழைப்பையும்,தியாகத்தையும் மறந்து விடலாகாது. அதே வீரியத்துடன் செயல்படுவோம். வெற்றி பெறுவோம்.

அந்த சிங்கப்பார்வையில் தான், நான் நெல்லை மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த கோவில்பட்டி வள்ளிமுத்து, வீரபாகு, கேவிகே சாமி, எம்.எஸ்.சிவசாமி, ஏர்வாடி அலிசேக் மன்சூர், நெல்லையிலே பேட்டை மஸ்தான், பாளையங்கோட்டையிலே எம்.எஸ். உசேன், தென்காசியில் கதிரவன், திருச்செந்தூரில் கண்ணபிரான், கட்சிக்காக உழைப்பது மட்டும் அல்ல; கழகப் பிரச்சார மேடைகளிலே கர்ஜனை செய்து கொள்கை விளக்கம் அளிக்கும் அன்புக்குரிய ஆலடி அருணா, கழகத்தின் போர்வாளாக திகழ்ந்த வைகோ ஆகியோரையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதேபோல், கோவில்பட்டி கலைமணி காசி, நெல்லை வழக்கறிஞர்கள் ஜி.ஆர். எட்மண்ட் கிளமென்ட், ஏ.எல்.எஸ்., ஆ.கருப்பையா ஆகியோரின் ஆற்றலையும் நினைத்துப் பார்க்கிறேன்.

இன்னும் ஏராளமான பேர் பக்கீரப்பா, சூரியநாராயணன், பத்மநாபன், நீதியரசர் ரத்தினவேல்பாண்டியன், எம்.பி.அழகியநம்பி, மருது சகோதரர்கள் மஸ்தான் - தம்பிதுரை, தூத்துக்குடி இரா.கிருஷ்ணன், கே.ஆர்.ராமலிங்கம் என்று நினைவுபடுத்த நீண்டு செல்கிறது பட்டியல்.

மேலும், கொள்கை முழக்கம் செய்த பேச்சாளர்கள் நெல்லை புகாரி, கடையநல்லூர் திராவிடமணி, புளியங்குடி பழனிச்சாமி, திருவை அண்ணாமலை, கே.ஆர்.பி.மணிமொழியன், நெல்லை நெடுமாறன், இவர்களை 50களிலேயே பார்த்தேன்; கேட்டேன்; பரவசப்பட்டேன்.

எனது சிங்கப்பார்வையில் விடுபட்ட சிங்கங்கள் இன்னும் ஏராளம் பேர் உண்டு. ஆயினும் அந்த தங்கங்கள் என் சிந்தையிலே தங்கி நிற்பது எப்போதும் உண்டு” என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார் கலைஞர்.

தேர்தல் கூட்டணி - தொகுதி உடன்பாடு தொடக்கம்

1957-ல் தூத்துக்குடி தொகுதி சட்டமன்றத்துக்கு வேட்பாளராக எம்.எஸ்.சிவசாமி நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் (பெயர் நினைவில் இல்லை), கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ஏ.முருகானந்தம் போட்டியில் நின்றனர். மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இடைத்தேர்தல் வந்தது. எதிர்க்கட்சி சார்பில் அதே வேட்பாளர்கள் நின்றனர். அப்போதும் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது.

மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வந்தது. அப்பொழுது ஒரு தொகுதி உடன்பாடு செய்யப்பட்டது. இங்கே திமுக வேட்பாளரை கம்யூனிஸ்ட் ஆதரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக திருச்சியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டதாக எனக்கு ஒரு நினைவு.

அப்போதும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால் கூட்டணி என்ற பெயர் அப்பொழுது தொகுதி உடன்பாடு என்று இருந்தது. அவரவர் கொள்கை அவரவர்க்கு. நமது ஓட்டுக்கள் பிரியாத வகையில் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துக் கொள்வோம் என்று பேச்சுவார்த்தை தொடங்கியது. பின்னாளில், 1967 தேர்தல் கூட்டணி இறுக்கமாக அமைந்ததற்கு காரணம் ஆரம்ப காலத்திலேயே அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என்பதுதான் உண்மை.

ஆரம்ப கால ஐம்பதுகளில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துக்கு திமுக செயலாளராக செயலாற்றிய கே.வி.கே.சாமியைத் தெரியும். எம்.எஸ்.சிவசாமி பற்றி தெரியும். ஆனால், எத்தனை பேருக்கு டபுள்யு.டி. துரைசாமி மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றியது தெரியும்? ஆம்... எம்.எஸ்.சிவசாமிக்கு முன், கே.வி.கே.சாமிக்குப் பின் பணியாற்றினார். கோவில்பட்டியைச் சார்ந்த டபிள்யு.டி.துரைசாமி. சிவஞானம் பிள்ளை என்ற ஒரு முக்கிய ஆளுமையைப் பற்றி முன்பே சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

இவர் சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சியின் முதல் அமைச்சராகத் திகழ்ந்தார். ஆங்கில வைசிராயால் ‘நைட்’ பட்டம் பெற்றவர். அரசு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற பின் நீதிக்கட்சியில் சேர்ந்தார். சிறந்த விளையாட்டு வீரர். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்தார். திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

எத்தனையோ நினைவுகள்... நான் பிறந்து வளர்ந்த கிராமம், ஆரம்ப கட்டத்தில் படித்த திருநெல்வேலி, பாளையங்கோட்டை பற்றிய நினைவுகளை ஓரளவு இங்கே பதிவு செய்துள்ளேன். இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளன. அவற்றையெல்லாம் பதிவு செய்வதானால் அது நீண்டு கொண்டே போகும். அந்த வகையில், பாளையங்கோட்டை ஜவஹர் மைதானமும், நெல்லை டவுன் மேல ரதவீதி மைதானத்தில் நடக்கும் கூட்டங்களும், அதில் உரையாற்றியவர்களின் பெயர்களும் மறக்க முடியாதவை.

அதேபோல தாமிரபரணி ஆற்றின் நினைவுகள், குறுக்குத்துறை அருகே, சாலைத் தெரு பேச்சியம்மன் படிக்கட்டு என தாமிரபரணியின் அழகை கண்டு ரசித்த நினைவுகள் இன்றும் கண்ணுக்குள்ளே நிற்கின்றன. அன்றைய காலத்தில் நெல்லை வீதிகளில் நடந்தும், சைக்கிளில் சுற்றி வந்தபோதும் கிடைத்த சுகானுபவம், மன திருப்தி, இன்றைக்கு அதே பகுதிகளில் சொகுசு காரில் வலம்வரும்போது கிடைக்கவில்லை.

வடக்கு பஜார், தெற்கு பஜார், நெல்லை ஜங்ஷன், நெல்லை டவுன் என்பதெல்லாம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளாக இன்றைக்கும் இருந்து வருகின்றன. அதேபோல் வீரராகவபுரம் என்ற வீராபுரம் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டு இன்றைக்கு இடிக்கப்பட்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

அந்த மாணவப் பருவத்தில் துள்ளியாடிய மகிழ்ச்சி, செய்த சில்மிஷங்கள், டீக்கடையில் நின்று டீ அருந்தியதும், கோடை காலங்களில் நுங்கு சர்பத், நன்னாரி பால், நன்னாரி சர்பத், கருப்பட்டி மிட்டாய் என ருசித்து மகிழ்ந்த காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.

அரசியல், கலாச்சாரம், கலை, இசை, கல்வி, பண்பாடு, வணிகம் என்ற பல்வேறு நிலைகளிலும் நெல்லை நகர் முக்கியமாகத் திகழ்ந்தது. நாட்டார் வழக்கின் ஒரு கேந்திரமாகவே நெல்லை, பாளையங்கோட்டை என்ற இரட்டை நகரங்கள் விளங்கின என்றால் மிகையாகாது.

சித்தர்கள் வலம் வந்த ஆன்மிகப் பூமி

நெல்லை மாவட்டத்தில் பல சித்தர்கள் தோன்றினர். அவ்வகையில் அகத்தியர் தொடங்கி இந்நாளில் வாழும் சிந்தலக் கரை சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் வரை பலரைக் குறிப்பிடலாம். சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் ஆடுமாடு மேய்ப்பவராக இருந்து சித்தர் நிலையை அடைந்தார். இவருடைய சித்தர் பீடத்தில் கரிசல் வட்டார மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பல்வேறு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். எதிர்காலத்தில் பெரிய கல்வி நிலையங்கள், ஆதரவற்றோர்களுக்கு காப்பகங்கள் திறக்கவும் திட்டம் தீட்டி வருகிறார்.

அப்பரானந்த சுவாமிகள், அரிகேசவநல்லூர் திருமுத்தையா பாகவதர், ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள், உமறுப்புலவர், கருவைப் பேரொளி, ஸ்ரீகுமரகுருபரர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், சங்கு சுவாமிகள், ஸ்ரீசிவானந்த சரஸ்வதி சுவாமிகள், ஏரல் நகர் சேர்மன் அருணாச்சல சித்தர், ஞானியாரடிகள், திம்மராஜபுரம் ஸ்ரீபிச்சு சுவாமிகள் என்ற ஸ்ரீசுந்தரராஜ சுவாமிகள், ஸ்ரீதட்சணா மூர்த்தி சுவாமிகள், பொன்னையா சுவாமிகள், பொதி சுவாமிகள், வல்லநாட்டு சுவாமிகள், ஐந்தருவி சித்தர், ஹஸ்ரத் உமரொலி நாயகம், ஹஸ்ரத் தைக்கா ஸாஹிபு ஒலி நாயகம், ஹஸ்ரத் செய்கு முஹம்மது வாலிஹ் ஒலி நாயகம்,கேமல் சுவாமிகள் போன்றோர் இங்கு இருந்துள்ளனர்.

விளாத்திகுளம், நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டியப்பட்டியில், மறைந்த ரெட்டியப்பட்டி சுவாமிகள் ஆன்மிகப் பாடல்களை உரத்த குரலில் பாடிக் கொண்டே இருப்பார். கவிஞர் கண்ணதாசன் இவரைப் பாராட்டியதுண்டு.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பெண் ஞானிகளில் ஒருவர் ஆவுடை அக்காள். 350 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டையில் பிறந்து மிக இளம் வயதிலேயே உயர்ந்த ஞானயோக அனுபவங்களைப் பெற்றார். ஆவுடை அக்காள் இளமையில் விதவையாகி விட்டதால், அவருக்கு ஏற்பட்ட வைராக்கியத்தின் காரணத்தால் ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தினார். தமிழகத்தில் அவ்வையார், காரைக்கால் அம்மையார் போன்று ஆவுடை அக்காளும் பாக்கள் புனைவதில் ஒப்பற்றவராவார். இவருடைய பாக்கள் ஏடுகளாகச் சிதறிக் கிடக்கின்றன. அதை ஸ்ரீஞானானந்த தபோவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இவருடைய பாடல்களைப் பாரதியார் விரும்பப் படிப்பதுண்டு.

குற்றாலம் மலையேறிச் சென்றவர் திரும்பவில்லை. இவருடைய பாடல்களைச் சிறுசிறு குழுக்களாக செங்கோட்டை, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, நாகர்கோவில், கல்லிடைக்குறிச்சி, முன்னீர் பள்ளம் போன்ற பகுதிகளில் மதிய உணவுக்குப் பின்பு பாடுவார்கள்.

ஆவுடை அக்காளைக் குறித்து, திருவைகுண்டம் கோமதி ராஜாங்கம் சிருங்கேரி மடத்தில் வாழ்ந்தபொழுது, பாடல்களையும் வாழ்க்கைக் குறிப்பையும் வெளிக் கொணர்ந்தார். ஆவுடை அக்காளின் வேதாந்தக் குறவஞ்சி, வேதாந்தப் பள்ளு, சூடாலைக் கும்மி என்ற பல பாக்களை நெல்லைத் தமிழில் கிராமப்புற இலக்கியங்கள் போன்று படைத்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் நாகரிகம், தமிழகத்தின் பிரதான முதல் நாகரிகமாகும். ஆனால் அது கொண்டாடப்படாமலேயே இருக்கிறது. கீழடி கொண்டாடப்படுவது சரிதான்... அது சங்கம் வளர்த்த மதுரையின் ஆதிகாலத்து பண்பாட்டின் கூறுகளாகும். அதே அக்கறை ஆதிச்சநல்லூர் நாகரிகம் குறித்து ஏன் எழவில்லை என்பதுதான் நம்முடைய வேதனை.

பண்டைய வரலாற்றில் நெல்லை, மதுரை, திருச்சியில் உள்ள உறையூர், தஞ்சாவூர் ஆகியவை மூவேந்தர்கள் கோலோச்சிய பகுதிகளாகும். கல்கத்தாவில் இருந்து ஆங்கிலேயர்கள் விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்ட கடற்கரை துறையைச் சார்ந்ததுதான் சென்னை பட்டணம். நிர்வாக நகரம் ஒன்றை உருவாக்குவதற்காக ஆங்கில அரசுக்கு தெலுங்கு அரசர் சென்னப்ப நாயக்கர் தம்முடைய நிலப்பகுதிகளை அளித்தார். அப்படித்தான் சென்னை உருவானது.

அதேபோல், கோவையில் பிளேக் நோய் பரவுகிறது என்று மக்கள் அங்கு குடியேற அச்சப்பட்டனர். அத்தகைய சூழலில் பருத்தி அரவை ஆலைகள் தமிழறிஞர் நரசிம்மலு நாயுடு முயற்சியில் தொடங்கப்பட்டன. இதன்மூலம் கோவை நகர் விரிவடைந்தது.

மதுரை, நெல்லை, உறையூர், தஞ்சாவூர் இந்த நகரங்களை களமாகக் கொண்டே பழங்கால தமிழகம் கொண்டாடப்பட்டது. மேலும், பல்வேறு சங்க இலக்கியங்களிலும் இந்த.நகரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் எங்கோ ஒரு கரிசல் மண் கிராமத்தில் பிறந்து, அரசியல் பின்னணியோடு வளர்ந்து, பின்னாட்களில் அரசியலில் பங்கெடுத்து, ஐ.நா. சபையில் பேசக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதே ஐ.நா.வில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றும் வாய்ப்பும் வந்தது. அதேபோல், தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியின் முதல் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பணியாற்றியதும் நான்தான். எனக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ நல்வாய்ப்புகள் துரோகத்தால் கைநழுவிப் போயின. இருந்தாலும் மனம் தளராமல் பயணித்து வருகிறேன்.

இப்படியான நிலையில், நான் எதிர்கொண்ட அரசியல், கமுக்கமான நிகழ்வுகள் என என் மனத்தில் கனன்று கொண்டிருக்கும் தகவல்களை நெருப்புப் பொறிகளாக அதேநேரம் நாகரிகமாக அடுத்தடுத்து வெளிப்படுத்த இருக்கிறேன்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: நெல்லை மாவட்டத்தில் முத்திரை பதித்த தொழில் ஜாம்பவான்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 31

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x