Published : 05 Jun 2025 07:29 AM
Last Updated : 05 Jun 2025 07:29 AM
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 9 ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளை சேர்க்கப் போவதாக சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ரயில் பயணிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பெட்டிகள் குறைப்பு உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றாலும் மற்ற ரயில்களிலும் தூங்கும் வசதி பெட்டிகளுக்குப் பதிலாக மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளைச் சேர்க்கும் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ரயில் சேவை என்பது இன்றியமையாத போக்குவரத்து தேவையாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் 3 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் பேர் அன்றாடம் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில் சேவை நிறுத்தப்பட்டால், தமிழக மக்களின் அன்றாட நடவடிக்கையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு முக்கிய அங்கமாக ரயில் சேவை இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது, தற்போது வழங்கப்படும் வசதிகளை இன்னும் எப்படியெல்லாம் அதிகரிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, இருப்பதை பறிக்கும் செயலோ, ஒன்றை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக இன்னொன்றை வழங்குவதோ மக்கள் விரோத செயலாகவே அமைந்துவிடும்.
குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் நாள்தோறும் நிரம்பி வழியும் நிலையே உள்ளது. தேவை அபரிமிதமாக உள்ள நிலையில், ரயில் டிக்கெட் கிடைப்பதே அதிர்ஷ்டம் என்ற நிலையே நீடிக்கிறது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு தற்போது இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் ரூ.395-ம், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் ரூ.1,040-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன பெட்டிகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் என்பதால், வருவாயை அதிகரிக்கும் எண்ணத்தில் தெற்கு ரயில்வே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வருவாயை அதிகரிப்பது தான் நோக்கம் என்றால், இருக்கும் பெட்டிகளைக் குறைக்காமல் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியைச் சேர்க்கலாமே? தற்போது இயங்கும் பிரதான ரயில்களில் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 24 பெட்டிகள் வரை சேர்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டால், ரயில் நிலையங்களில் நடைமேடையின் நீளம் அதற்கேற்ப இல்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
கூடுதலாக ஒரு பெட்டியை இணைக்கும்போது, ரயிலின் நீளம் அதிகரித்து முன்பதிவில்லா பெட்டி ஒன்று நடைமேடைக்கு வெளியில் நிற்கும். அந்த பெட்டிக்கு மட்டும் பயணிகள் ஏற, இறங்க ஏதாவது தற்காலிக ஏற்பாட்டைச் செய்தால் இப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்; ரயில்வேக்கு வருவாயும் கூடுதலாக கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT