Published : 26 May 2025 07:52 AM
Last Updated : 26 May 2025 07:52 AM
குடிமைப் பணிக்கான (ஐஏஎஸ்) முதல் நிலைத் தேர்வு, வழக்கம் போல குறிப்பிட்ட நாளில், தேர்வர்களுக்கு அதீத சோதனை / இடையூறு இல்லாமல், திட்டப்படி சரியாக நடந்து முடிந்துள்ளது. மத்திய தேர்வாணையத்தை மனதாரப் பாராட்டலாம்.
இனி.., முதல் நிலைத் தேர்வின் வினாத் தாளுக்குள் நுழைவோம். பொதுவாக எதிர்பார்த்த பகுதிகளில் இருந்து நேரடிக் கேள்விகள் அதிகம். ஒன்றே ஆண்டுகளில் இருந்து சில கேள்விகள், மாலையில் எளிமையான 'சீசாட்' தேர்வு.. 'பழகிய' தேர்வர்களுக்கு சாதகம் அதிகம். உண்மைத் தகவல்கள் அடிப்படையில் அமைந்த கேள்விகள் சற்றே கூடுதலாய் இருந்தன. முறையாகத் தயார் செய்து தேர்வு எழுதியவர்கள், நிச்சயம் மகிழலாம். சரியான வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்ற முதன்முறைத் தேர்வர்களும் அடுத்த நிலைக்கு இப்போதே தயாராகலாம்.
எப்போதும் போல, கேள்விகளில் நல்ல தரம்; 'நவீன கல்வி'க்குக் கணிசமான முக்கியத்துவம்; நடப்பு நிகழ்வுகளில் பொதுநல நோக்கு; சர்வதேசப் பார்வையை வலியுறுத்தும் புவிசார் வினாக்கள்... மீண்டும் ஒருமுறை, யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் சிறப்பு மிக்க தனித்துவம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாண்டும் சுற்றுச்சூழல், பூகோளம், பொருளாதாரம், உலக நடப்புகள், இந்திய சாசனம், இந்திய வரலாறு ஆகியன கேள்வித்தாள் முழுதையும் ஆக்கிரமித்து இருந்தன. ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு 'பொது அறிவுத் தளம்' அகன்று விரிந்து நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப மாறி வருவதைப் புரிய வைக்கிறது.
சுற்றுச்சூழல் தொடர்பான பல கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன; பாதுகாப்புத் துறை தொடர்பான, குறிப்பாக 'போர் விமானம்' பற்றிய கேள்வி, இளைஞர்கள் தொடர்ந்து தமது அறிவாற்றலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
தமிழகம் தொடர்பான மூன்று வினாக்கள் ஆச்சரியப்படுத்தின. 'சுயமரியாதை இயக்கத்தின் நிறுவனர் யார்?' என்கிற வினா - தமிழ்த் தேர்வர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!
மின் வண்டிகள், ஆளில்லா வானூர்திகள், மின்வண்டி 'பேட்டரி' கூறுகள், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், செயற்கை மழை, எத்தனால் உற்பத்தி, 'வெட் பல்ப்' வெப்பநிலை... இதையைல்லாம் அறிந்துள்ள இன்றைய தேர்வர், ஒரு வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் / பாதுகாவலர் என்கிற அடைமொழிக்கு முற்றிலும் தகுதியானவர் என்றே தோன்றுகிறது.
புவியியல் சார்ந்த வினாக்களில் உலகளாவிய அணுகுமுறை புலப்படுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய ஏரிகள், 'கண்டம் தழுவிய மாற்றம்' (continental drift) பெட்ரோலில் மட்டும் இயற்கை வாயு கட்டுப்பாட்டு வாரியம், கடற்காற்று, வறண்ட காற்று குறித்த கேள்விகள் நம்மை மகிழ்விக்கின்றன.
வரலாறு பகுதி - ரொம்ப சுமார். ஒத்துழையாமை இயக்கம், மகாத்மா காந்தியின் பிரச்சாரம்... எல்லாம், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மிகச் சாதாரணம். கடந்த சில ஆண்டுகளாக வரலாறு பகுதி கடினமாக இருந்தது; இவ்வாண்டு எளிமையாக இருக்கட்டுமே என்பதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கலாம்.
பொருளாதாரம் - மிக நன்றாக 'கையாளப்பட்டு' உள்ளது. வெறுமனே தத்துவ ரீதியாக இல்லாமல், நடைமுறை சார்ந்த, சர்வதேச நிதி பொருளாதார அமைப்புகள், கொள்கைகள், திட்டங்கள் குறித்த கேள்விகள் தேர்வின் தரத்தை உயர்த்திப் பிடிக்கின்றன.
நிதிப் பற்றாக்குறை: வருவாய்ப் பற்றாக்குறை இடையிலான வேறுபாட்டை சோதிக்கும் இரண்டு கேள்விகள் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளன.
மின் பணப் பரிமாற்றம், முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் 'யுபிஐ' வசதியை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள், RTGS - NEFT இடையிலான வேறுபாடு, கல்வி தொடர்பான 15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் செயல்பாடு, 'சர்குலர்' பொருளாதாரம் ... குறை சொல்ல முடியாத கேள்விகள்.
சாசனத்துடன் தொடர்புபடுத்தி சில அரசியல் அரசியல் வினாக்கள், ஆங்காங்கே விறுவிறுப்பு கூட்டுகிறது. 'மசோதா அனுமதி' விஷயத்தில் குடியரசுத் தலைவரின் அதிகாரம், ஆளுநரின் விருப்பு, நீதிமன்ற நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட ஆளுநரின் செயல்பாடு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் நிகழ்த்தும் உரைகள், கட்சித்தாவல் தடை சட்டம், சபாநாயகரின் அதிகாரம், லோக்பால் அமைப்பு ஆகியன 'மரபுவழி' கேள்விகள். அதேசமயம், இடைநிலைப் பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசின் வரிப் பங்கீடு - சாமர்த்தியமான (செமத்தியான) 'குத்தல்' கேள்வி.
சரி... வித்தியாசமான கேள்வி...?
'நேர மண்டலம்' தொடர்பானது.
கேள்விஇது சரியா? - 'சைபீரியாவில் 'அனடிர்'; அலாஸ்காவில் 'நோமே'... இடையே தூரம், சில கிலோமீட்டர் மட்டுமே. ஆனால், இங்குள்ள மக்கள் காலையில் தூங்கி விழிக்கும் போது (இரண்டு இடங்களிலும்) இருவேறு நாட்களாக இருக்கும். அனடிரில் திங்கள் என்றால் நோமேவில் செவ்வாயாக இருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT