Published : 10 May 2025 10:18 AM
Last Updated : 10 May 2025 10:18 AM

கிராம பொருளாதாரத்தை உயர்த்திய நூற்பாலைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 19

படம் உதவி: லெட்சுமி நூற்பாலை

அந்தக் காலத்தில் மதுரையில் மதுரா கோட்ஸ் நூற்பாலை, கோவில்பட்டியில் லெட்சுமி நூற்பாலை, லாயல் நூற்பாலை, தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் ஆலை, விக்கிரமசிங்கபுரத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆர்.வி.மில்ஸ் ஆகியவை பிரபலமாக இருந்தன. இந்த ஆலைகள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கின. ஆலைகளைச் சுற்றி இருந்த கிராமங்களும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றன.

ஆலைகளில் ஒலிக்கப்படும் சங்கு ஒலி, சுற்றுவட்டார மக்களுக்கு நேரத்தை கணிக்கும் கடிகாரமாக விளங்கியது. இந்த சங்கு ஒலியைக் குறிப்பிடும்போது, சிறுவயதில், பள்ளிக்கூடப் பருவத்தில் நிகழ்ந்தவைகள் நினைவுக்கு வருகின்றன.

அன்றைய பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஓடுகள் வேயப்பட்டிருக்கும். அதன் இடைவெளியில் இருந்து வரும் சூரிய ஒளிக் கதிர், மாலையில் வகுப்பு முடியும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து விழும். வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே, அந்த ஒளிக்கதிர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட்டதா என்று மாணவர்கள் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அந்த இடத்தை ஒளிக்கதிர் தொடும் நேரமும், வாட்ச்மேன் ‘பெல்’ அடிக்கும் நேரமும் சரியாக இருக்கும். அந்த மணியோசைக்கு முன்பாகவே தங்களுடைய புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை புத்தகப்பைக்குள் திணித்து வெளியே ஓடுவதற்கான முஸ்தீபுகளில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். அந்த நினைவுகள் எல்லாம் இன்றும் என் நினைவில் நிழலாடுகின்றன.

நூற்பாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்கப்படுவதுண்டு. அந்த போனஸ் தொகையைக் கொண்டுதான் புத்தாடைகள், அணிகலன்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்திருப்பார்கள்.

போனஸ் பேச்சுவார்த்தைகள் சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். நூற்பாலை முதலாளிகளும், தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். சில சமயங்களில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விடுவதுண்டு. இதனால் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு, மாதக்கணக்கில் நூற்பாலைகள் மூடப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும். இந்த பென்ஷனை அன்றைய கிராமத்துப் பாமர மக்கள் ‘பிஞ்சன்’ என்பார்கள்.

எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களின் பெயர்களுக்குப் பின்னால் மலை, குன்று, குளம், பட்டி, நேரி, புரம், மங்களம், குடி, நந்தல், நல்லூர் என்ற சொற்கள் ஒட்டிக் கொண்டு வரும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், மணப்பாடு, தருவைகுளம், பெரியதாழை மற்றும் புன்னக்காயல் ஆகிய ஏழு கடற்கரைகள் உள்ளன. இப்பகுதிகளை ஒட்டி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் ஒன்றுகூடி ஊர் கோயில் திருவிழாக்களை காலம்காலமாக நடத்தி வருகின்றனர்.

கடற்கரை பகுதியில் போர்த்துக்கீசியர், ஆங்கிலேயருடைய வழிமுறை குடும்பத்தினர் இன்றைக்கும் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் மீனவக் குடும்பங்களுக்கு காளிங்கராயர், வல்லவராயர், பூபால ராயர், வில்வ ராயர் என்ற பெயர்களும் வழங்கப்படுவதுண்டு.
அதேபோல் அவர்கள் மத்தியில் கோவலத்தான், கூத்தக்குழியான், மணப்பாட்டான், ஆழாந்தலையான், அமலி நகரான், தாளையான், கூட்டுப்புலியான், இடிந்தகரையான் என்று அந்தந்த ஊர் வழக்கத்தில் மீனவர்கள் உறவுகளோடு பேசுவது உண்டு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரியில் மீன் பிடிப்பதற்கு பேரூர், இறச்சகுளம், பறக்கை, கற்காடு, புத்தேரி, கோட்டாறு போன்ற குமரி மாவட்ட மீனவர்கள் வருவார்கள். உவரி பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மீனவர்களிடம் இருந்தது.
கரிசல் வட்டாரத்தில் கடந்த 50 - 60-ம் ஆண்டுகளில் திருப்பதிக்கு சென்று வருவது என்பது ஒரு பெரிய யாத்திரையைப் போன்று கருதப்பட்டது. திருமலை திருவேங்கடத்தானை தரிசனம் செய்தது, தனக்கும், குடும்பத்தினருக்கும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தியதை எல்லாம் 2 - 3 மாதங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

அப்போதெல்லாம் திருப்பதிக்கு செல்வதென்றால் மூட்டை முடிச்சுகள், சாப்பாடு பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு, மோட்டார் யூனியன் பேருந்தில் ஏறி, கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு பகல் 12 மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள்.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நிலக்கரி புகையை ‘குபுகுபு’வென வெளியேற்றியபடி கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு பகல் 3 மணிக்கு வந்து சேரும். அதில் ஏறி மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் சென்றடைவார்கள். அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, பின்னர் திருப்பதி செல்லும் ரயிலில் ஏறுவார்கள். ஒருமுறை திருப்பதி போய் வர கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிடும்.

பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பி வரும்போது 50 - 60 லட்டுகளையாவது வாங்கி வருவார்கள். இரவில் உற்றார் உறவினர்கள், ஊராரை வரவழைத்து பயபக்தியோடு பூஜை செய்து, சாப்பாடும் போட்டு, லட்டு பிரசாதத்தை வழங்குவார்கள்.

திருப்பதிக்குப் போய் வந்தவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். ‘சென்னை பட்டணத்துக்குப் போயி... அங்கிருந்து திருப்பதி போயிட்டு வந்தவராக்கும்...’ என்று பெருமையோடு ஊரார் பேசுவார்கள்.

அப்போதெல்லாம் சென்னையை ‘பட்டணம்’ என்றும், திருநெல்வேலியை ‘சீமை’ என்றும் அழைப்பது வழக்கம். கோவில்பட்டியில் இருந்து சென்னை பட்டணத்துக்கு செல்பவர்கள், மவுண்ட் ரோடு, பாய்க்கடை பஜார், பாரிமுனை பகுதிகளை ஆச்சரியத்தோடு பார்த்து வியந்தார்கள். சென்னையில் ஒருநாள் தங்கி இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கு கிடைக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு மறுநாள் கோவில்பட்டி ரயில் நிலையம் வரும்போது அவர்களை ஊர் மக்கள் திரளாக நின்று வரவேற்ற காட்சி இன்றும் என் நினைவில் உள்ளது.

அதேபோல் எங்கள் வீட்டு வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1949-ல் அந்த வழக்கை நடத்த வழக்கறிஞருக்கான கட்டணம் ஐநூறு ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார்கள். அப்போது அது பெரிய தொகை. அன்று புழக்கத்தில் இருந்த நூறு ரூபாய் தாள் செவ்வக வடிவில் பெரியதாக இருக்கும். இந்த வழக்குக்காக அடிக்கடி எங்கள் வீட்டில் இருந்து சென்னைக்குப் போய் வருவது உண்டு.

திருப்பதி பயணம் போல் காசி யாத்திரையும் அன்று முக்கியமாகப் பார்க்கப்பட்டது. கங்கையில் புனித நீராடுதல் பூர்வ ஜென்ம புண்ணியம் என்று கருதினார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியாவின் கலாச்சார நகரங்கள் என்று சொல்லப்பட்ட மதுரை, ஹம்பி, தட்சசீலம், நாளந்தா, பாடலிபுத்திரம், விக்கிரமசீலா போன்ற நகரங்களுக்கு ஈடானது காசி. முண்டாசுக் கவிஞர் பாரதியாரும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தியும் காசி இந்து சர்வகலாசாலையில் படித்தவர்கள்தான்.

காசியில் தெரிந்த வீட்டிலோ அல்லது வாடகைக்கு சத்திரங்களிலோ தங்கி, கங்கையில் புனித நீராடி, காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்த பின்னர், கங்கையில் நடைபெறும் ஆரத்தியையும் கண்குளிர கண்டு ரசிப்பார்கள். காசிக்கு சென்று வருவதை பெரும் பேறாகக் கருதினர். வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று, கங்கையில் மூழ்கி எழுந்து வர வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காசியின் பெருமையை பாரதியார் தமது பாடலில், “காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்று சிலாகித்தார். அதேபோல், ‘கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்றும் பாடினார்.

காசி என்ற நகரத்தின் மற்றொரு பெயர் வாராணசி. வருணா நதியும் அசி நதியும் கங்கையுடன் சங்கமிக்கும் இடம்தான் வாராணசி. இதற்கு பனாரஸ் என்ற பெயரும் உண்டு.

காசியில் உள்ள விஸ்வநாதரைப் போல, அன்னபூரணி என்ற காசி பாலாம்பிகை கோயிலும் பிரசித்தி பெற்றது. இது காசி விஸ்வநாதர் கோயிலின் அங்கமாகும். இக்கோவிலுக்கு நிர்வாக உதவிகளை செட்டிநாட்டு நகரத்தார் செய்துள்ளனர். கோயில் முகப்பில் ‘அன்னபூரணி தேவி’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல, கங்கை நதி ஓரத்தில் திருப்பனந்தாள் மடத்துக்குச் சொந்தமான உயர்ந்த கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடத்தில் ‘சிவ சிவ’ என்ற தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். முகலாய அரசர் ஒருவரை குமரகுருபர சுவாமிகள் சந்தித்து, உருது மொழியில் பேசி, காசி மடத்துக்கென்று சில இடங்களைப் பெற்றார் என்றும் சொல்வதுண்டு. தமிழுக்கும், காசிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
‘காட்’ என்று சொல்லக் கூடிய கங்கை நதி துறைகள் பல உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பெயர் காரணங்களும் நம்பிக்கைகளும் இருந்து வருகின்றன.

காசி பயணம் மேற்கொண்டு, அங்கு இறக்க நேரிட்டால், கங்கை நதிக் கரையிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்படும். இத்தகைய மரணமெய்துபவர்கள் நேரடியாக ஈசனின் திருவடியை சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இன்றைக்கும் நிலவுகிறது.

‘பேப்பர் சாமி’ சித்தர் - விளாத்திகுளம் சுவாமிகள்

எங்கள் பகுதியில் குருவிகுளம், இளையரசனேந்தல், செவல்பட்டி ஜமீன்கள் இருந்தன. இளையரசனேந்தலைச் சேர்ந்த ஜமீன் ஒருவர் ‘பேப்பர் சாமி சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் தென்காசியையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாசம் செய்து அருளாசி கூறினார். இதனால், இளையரசனேந்தல் ஜமீனுக்கு ‘பேப்பர் சாமி ஜமீன் மடம்’ என்ற பெயரும் உண்டு.

விளாத்திகுளம் சுவாமிகளைப் பற்றி கடந்த பதிவில் கூறியிருந்தேன். அவரைப் பற்றிய மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விளாத்திகுளம் சுவாமி, ‘நல்லப்ப சுவாமிகள்’ என்று அழைக்கப்படுகின்ற காடல்குடி ஜமீனைச் சார்ந்தவர். இவர் விளாத்திகுளத்தில் தங்கியிருந்தார். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி, ஒலிவாங்கி வசதி இல்லாமல் 8 கட்டையில் உச்சஸ்தாதியில் பாடுவார். அவரை யார் சந்தித்தாலும், முதலில் அவர் கேட்பது.... ‘என்னய்யா நல்லாயிருக்கீங்களா... சாப்பிட்டீங்களா?’ என்பதாகத்தான் இருக்கும்.

மிக எளிமையாக இருப்பார். இடுப்பில் வேட்டி, மேலே ஒரு துண்டு மட்டுமே அணிந்திருப்பார். நரைத்த பெரிய மீசை வைத்திருப்பார். நெற்றி நிறைய விபூதியும், குங்குமப் பொட்டோடும்தான் காணப்படுவார். இடுப்பு வேட்டியில் ஒரு விபூதிப் பையை சொருகி இருப்பார். யார் வந்தாலும் விபூதியை அள்ளி பிரசாதமாகக் கொடுப்பார்.

தியாகராஜபாகவதர், கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் ஒருமுறை தனித்தனியாக அவர்கள் இராமநாதபுரத்தில் இருந்து, சாயல்குடி வழியாக விளாத்திகுளம் வந்து பின்னர் திருநெல்வேலிக்கு செல்வதாக பயணம் திட்டம் இருந்தது. அப்போது விளாத்திகுளம் வந்தவுடன், அங்கு இறங்கி காலணியை கழட்டி வைத்துவிட்டு, வெறும் காலுடன் விளாத்திகுளம் சுவாமியை பயபக்தியோடு தரிசித்து சென்றது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

விளாத்திகுளம் சுவாமியைப் பற்றி கு.அழகிரிசாமி, கி.ரா.., கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ.அழகிரிசாமி போன்றவர்கள் பெருமையாகச் செல்வார்கள். சோ.அழகிரிசாமி ஆரம்பக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடைய பி.எஸ்.பி (பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி)யில் இருந்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவருடைய ஆரம்பகால அரசியல் நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் சுவாமியை பாடச் செய்தார் என்று கூறுவதுண்டு.

விளாத்திகுளம் சுவாமியை ஒருமுறை மைசூர் சமஸ்தானத்தில் நடைபெறும் தசரா விழாவில் பாட அழைத்தார்கள். அங்கு அற்புதமாகப் பாடினார். பாடலைக் கேட்டு மயங்கிய மைசூர் மகாராஜா, முத்துமாலையை விளாத்திகுளம் சுவாமிக்கு சூட்ட வந்தபோது, அதை ஏற்க மறுத்து, “நீங்கள் மைசூர் ராஜா... நானும் காடல்குடி ஜமீன் ராஜாதான், இந்த முத்துமாலை எனக்கு வேண்டாம். இதை வேறு யாராவது ஏழைகளுக்கு கொடுங்கள்” என்று மறுதலித்து விட்டார். அது அவருடைய சுயமரியாதையை மட்டுமல்ல; எளிமையையும் அவரது இயல்பையும் காட்டியது.

இதுபோல அவரைப் பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > நெல் வகைகளைக் குறிப்பிடும் ‘எட்டையபுரம் பள்ளு’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 18

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x