Last Updated : 10 May, 2025 08:53 AM

 

Published : 10 May 2025 08:53 AM
Last Updated : 10 May 2025 08:53 AM

பதிலே சொல்ல முடியாமல் சிக்கியுள்ள பாகிஸ்தான்

பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இது, நியாயமான கோபத்தின் வெளிப்பாடு.

இந்தியாவின் தாக்குதலுக்கு எதிரொலியாக, உள்நாட்டு அரசியலைச் சமாளிப்பதற்காக, பெயரளவுக்கு கண்டனம் தெரிவித்து அமைதி காத்திருந்தால் பாகிஸ்தான் தப்பியிருக்கும். ஆனால், பதில் தாக்குதல் நடத்தி தவறுசெய்துவிட்டது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போர் மேகமும் இருநாடுகளிடையே வலுவடைந்துள்ளது.

பாகிஸ்தானில் அப்பாவிமக்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக செய்யப்படும்பிரச்சாரத்தை இந்தியா மறுத்துள்ளது. பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும்,சில வழிபாட்டுத் தலங்களை பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களாக பயன்படுத்தியதால், அந்த இடங்களும் இலக்காகஅமைந்தன என்றும் இந்தியா தரப்பில்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பஹல்காம் சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் தலைவர்கள், இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகள் மீது பாகிஸ்தான் கொடி போர்த்தி, அந்நாட்டு ராணுவ தளபதிகள் சல்யூட் அடித்து, அரசு மரியாதை செய்ததுடன், ராணுவ வீரர்களே சவப்பெட்டிகளை தூக்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்ததை பாகிஸ்தான் அரசால் எப்படி மறுக்க முடியும்?

இந்த காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும் இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிபயங்கரவாதிகளுக்கு என்ன காரணத்திற்காக அரசு மரியாதை வழங்கப்பட்டது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளின் பங்கு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இறந்த பயங்கரவாதிகளை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருப்பது, பயங்கரவாதிகளின் தலைமையிடம் பாகிஸ்தான் என்பதை அவர்களே பகிரங்கமாக உலக நாடுகள் முன்பாக ஒப்புக் கொண்டிருப்பதற்குச் சமம். இதை அந்த அரசால் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் உள்ள பந்தத்தை அந்த நாடு தனக்குத் தானே வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது.

பாகிஸ்தான் நடத்தியுள்ள தாக்குதலில் 3 சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொற்கோவிலுக்கு குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் உள்நோக்கத்தை அனைவரும் புரிந்து கொள்ளமுடியும். தொடர்ந்து 300 முதல் 400 ‘ட்ரோன்’களை அனுப்பிதாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.

போர் என்பதுஎந்த நாட்டுக்கும் நல்லதல்ல. பஹல்காம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் உள்ளநியாயத்தை புரிந்து கொள்வதுடன், பாகிஸ்தான் தன்னுடையவலிமை, பொருளாதார நிலைமை ஆகியவற்றையும் உணர்ந்து போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தாமல் அமைதி காப்பதே நன்மை பயக்கும். -

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x