Published : 07 May 2025 06:41 AM
Last Updated : 07 May 2025 06:41 AM
அரிய வகைத் தனிமங்களை (Rare Earth Elements [REEs]) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அரிய வகைத் தனிமங்கள் விநியோகத்தில் சுமார் 70%க்கும் மேல் சீனாதான் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளதால், அரிய வகைத் தனிமங்களின் ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு சீனா நிறுத்தியுள்ளது.
சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீனா இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்கள், பாதுகாப்பு / மருத்துவக் கருவிகள் தயாரிப்பதில் இத்தனிமங்கள் முக்கிய அங்கம் வகிப்பதால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உள்படப் பிற உலக நாடுகள் அரிய வகைத் தனிமங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.
முக்கியத்துவம்: சர்வதேசத் தூய - பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் (IUPAC), 2005இல் வரையறுக்கப்பட்ட 17 தனிமங்களின் தொகுப்பே அரிய வகை பூமி தனிமங்கள். இதில் வேதியியல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள லாந்தனைட்ஸ் (lanthanides) - ஸ்காண்டியம் (scandium), ஐட்ரியம் (yttrium) ஆகியவையும் அடங்கும். இத்தனிமங்களில் முக்கிய ஆதாரமாக பாஸ்ட்னசைட் (bastnasite), லோபரைட் (loparite), மோனசைட் (monazite) உள்ளன. இத்தனிமங்கள் பூமியின் மேற்பரப்பில் ஏராளமாகக் காணப்பட்டாலும், அவற்றைப் பிரித்தெடுப்பதும், சுத்திகரிப்பதும் சிக்கலானது.
இதன் காரணமாகவே இவை அரிய வகை பூமி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அரிய வகை பூமி தனிமங்கள் 1788இல் கண்டு பிடிக்கப்பட்டன. அன்றிலிருந்து மனித வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு அவை முக்கிய அங்கமாக மாறிவிட்டன. மேண்டில் விளக்குகள் தொடங்கி, பாறைகளின் புவியியல் தோற்றம் வரையிலான அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் இவை பயன்பட்டன.
குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அரிய வகை பூமி தனிமங்களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்தது. உயர் தொழில்நுட்பக் கருவிகளில் முக்கிய மூலப்பொருளாக இத்தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கைபேசி, திறன்பேசிகள், கணினி ஹார்டு டிரைவ்கள், மின்சார வாகனங்கள், எல்சிடி திரைகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், கேமரா, ஸ்கேனர்கள், புற்றுநோய் மருத்துவக் கருவிகள் தயாரிப்பில் அரிய வகைத் தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதிக்கம் செலுத்தும் சீனா: 1990களிலிருந்து அரிய வகைத் தனிமங்களின் மையமாக சீனா இருந்துவருகிறது. சமீப ஆண்டுகளில் பிற உலக நாடுகளும் அரிய வகை பூமி தனிமங்களின் ஏற்றுமதியில் முனைப்புக் காட்டிவருகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக அரிய வகைத் தனிமங்களைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. பிரேசில், 21 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்களின் இருப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடம் 1.9 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்கள் இருப்பு உள்ளது; இருப்பினும் சுற்றுச்சூழல், அரசியல் கொள்கை காரணமாக இத்தனிமங்கள் உற்பத்தியில் சமீப காலமாக அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை.
உலக அளவில் அரிய வகைத் தனிமங்களை அதிகம் வைத்திருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா அறியப்படுகிறது. இந்தியாவிடம் ஏறக்குறைய 6.9 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தனிமங்கள் பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒடிஷா, கேரளம் போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக, கேரளக் கடற்கரைகளில் மோனசைட் மணற் பரப்புகளில் அரிய வகை பூமி தனிமங்கள் நிறைந்துள்ளன. மேற்கு மலைத் தொடர் மலைகளில் இருந்து உருவாகும் இம்மணல் ஓடைகள் வழியாக கேரளக் கடற்பரப்பை வந்தடைவதாகச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில்... 2021, மார்ச் நிலவரப்படி, இந்தியாவில் 12.73 மில்லியன் டன் மோனசைட் வளம் இருப்பதாக இந்திய கனிமப் பொருள்கள் ஆண்டிதழ் (Indian Mineral Year book [2023]) மதிப்பிட்டுள்ளது. இதில் 3.78 மில்லியன் டன்களுக்கு ஆந்திரப் பிரதேசம் அதிக இருப்பைக் கொண்டுள்ளது; அதைத் தொடர்ந்து கடலோர மாநிலங்களான ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு அதிகம் கிடைக்கும் அரிய வகைத் தனிமங்களாக லாந்தனம் (Lanthanum), சீரியம் (Cerium), சமாரியம் (Samarium) போன்றவை உள்ளன. ஒப்பீட்டளவில் இத்தனிமங்கள் லேசான எடை கொண்டவை (அணு எண் அடிப்படையில்). டிஸ்ப்ரோசியம் (Dysprosium), டெர்பியம் (Terbium) போன்ற கனமான அரிய வகைத் தனிமங்களின் விநியோகத்தில் நம் நாட்டில் கட்டுப்பாடுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அரிய வகைத் தனிமங்கள் அதிகம் இருந்தாலும், உலக அளவிலான உற்பத்தியில் 1%க்கும் குறைவாகவே இங்கே அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு, சுரங்கத் தொழில்களில் தனியார் துறையின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதே முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள அரிய வகை பூமி தனிமங்கள் விநியோகச் சங்கிலி பாதிப்பை இந்தியாவால் ஈடுசெய்ய முடியும்; இச்சூழலை இந்தியா சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் அரிய வகை பூமி கூறுகள் - தனிமங்களைத் தனியார் நிறுவனங்கள் ஆராயலாம் என இந்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதன் மூலம் அரிய வகைத் தனிமங்கள் உற்பத்தியில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவிக்க முடியும் என அரசு நம்புகிறது. இதற்காக 13 தொகுதி நிலங்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன. அரசின் இப்புதிய கொள்கையில், தனிமங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் ஆய்வுச் செலவில் 50% திரும்பிச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற சவால்கள்: இந்தியாவில் போதிய தொழில்நுட்பம் - உள்கட்டமைப்புத் திறன் இல்லாமல் இருப்பது அரிய வகைத் தனிமங்களின் உற்பத்திக்கு இன்னொரு தடையாக உள்ளது. இந்தியாவில் அரிய வகைத் தனிமங்களின் முதன்மை ஆதாரமான மோனசைட்டில், அதிக அளவு தோரியம் உள்ளது.
தோரியம் கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆகவே, இதைப் பிரித்தெடுப்பதிலும் - தூய்மைப்படுத்துவதிலும் கடுமையான வரைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அடுத்ததாக, சுற்றுச்சூழல் - சுகாதார எதிர்விளைவுகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஓர் அரிய வகைத் தனிமத்தைச் சுத்திகரிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் தூசி, கழிவு நீர், கதிரியக்கக் கழிவுகள் சுற்றுச்சூழலில் மாசை ஏற்படுத்துவதுடன், மனித ஆரோக்கியத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உலக அளவில் அரிய வகை பூமி தனிமங்கள் உற்பத்தி சார்ந்து கடும் போட்டி நிலவுகிறது. வளங்கள் நிறைந்த நாடுகள் எடுக்கும் கொள்கை முடிவுகள், தனிமங்களின் விநியோகச் சங்கிலிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில் அரிய வகைத் தனிமங்களின் உற்பத்தியில் இந்தியாவின் செயல்பாடு உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை: அரிய வகை பூமி தனிமங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தற்காலிகச் சுணக்க நிலையை நீக்க, சுரங்க நடைமுறைகளை வரைமுறைப்படுத்துவதும், சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதும் முக்கியமானவை. குறிப்பாக, இத்தனிமங்கள் உற்பத்தியைப் பரவலாக்குவதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடுகளில் இந்தியா அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அதேநேரத்தில், தனிமங்களின் சுத்திகரிப்பில் சுற்றுச்சூழல் மாசைத் தடுப்பதற்கான மாற்று வழிகளை நோக்கி நகர்வதும் அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT