Published : 05 May 2025 06:02 PM
Last Updated : 05 May 2025 06:02 PM
தமிழக அரசியல் களத்தில் வந்து சென்ற, வென்று நின்ற திரைப் பிரபலங்கள் எண்ணிக்கை போல் வேறு எந்த அரசியல் களத்திலும் இருந்திருக்காது என்று சொல்லலாம். அதில் முக்கியமான லேட்டஸ்ட் என்ட்ரிதான் நடிகர் விஜய். ‘சினிமாவில் மெகா ஸ்டார்’, ‘அரசியல் அனுபவம் இல்லவே இல்லை’. ‘வயது குறைவு, ஆனால் ஃபேன் பேஸ் பெரிது’... இப்படி பொதுவான பார்வைகள் முன்வைக்கப்படும் நிலையில், எடுத்த எடுப்பிலேயே புனித ஜார்ஜ் கோட்டைதான் இலக்கு என்று பிரகடனப்படுத்திவிட்டு, அதன்பின்னர் பூத் கமிட்டி அமைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் கட்சி என்றாலும் கூட ‘மாஸ்’ கூட்டங்கள், தேர்தல் வியூக நிபுணர்களின் ஆலோசனை என தன்னை தயார்படுத்திக் கொண்டு கவனிக்கவும் வைக்கிறார் விஜய்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததுமே ‘விஜயகாந்தே நிலைக்க முடியவில்லை, விஜய் எம்மாத்திரம்?!’ என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்தச் சூழலில், விஜய் கட்சியின் இளம் தொண்டர்களின் பேரார்வ செயல்களும், அதைக் கட்டுப்படுத்தி ‘ஒழுங்கு’க்கு கொண்டுவரும் விஜய்யின் முயற்சிகளும் அரங்கேறி வருகின்றன. இந்த விஷயத்தில் விஜயகாந்த் அணுகுமுறையை நினைவுகூரும் ஓர் ஒப்பீட்டு விரைவுப் பார்வை இது.
‘விஜயகாந்த் எனும் ஆளுமை’ - சினிமாவில் விஜயகாந்த் எப்போதும் மாஸ் தான். ஸ்டண்ட் பாணியாகட்டும், வசூல் கேரன்டியாகட்டும் தனக்கென தனி ட்ரெண்ட் வைத்திருந்தவர் விஜயகாந்த். அவர் மீதான அபிமானம் வளர்ந்து கொண்டிருந்த வேகத்திலேயே பக்கவாட்டில் அவருக்கான ரசிகர்களும் பெருகிக் கொண்டிருந்தனர். கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருந்த விஜயகாந்தின் முகம் அவரை குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாகவே வைத்திருந்தது.
விஜகாந்தின் நண்பர்கள் அவருடைய ரசிகர் மன்றங்களை செம்மையாக செதுக்கி வளர்த்தனர். வெறும் ஹீரோ ஒர்ஷிப்பாக இல்லாமல் நலத் திட்டங்களை வாரிவழங்கும் மையங்களாக அவை மடைமாறின. அலுவலகங்களுக்கான கட்டுக்கோப்போடு மன்றங்கள் இயங்கத் தொடங்கின. விஜயகாந்தின் இளமைப் பருவத்தில் கட்டமைக்கப்பட்ட அந்த மன்றங்கள் அவர் அரசியலுக்கு அடிகோலிட்டபோது அரணாக இருந்தன என்றால் அது மிகையாகாது.
‘தொண்டர்களாகிய ரசிகர்கள்’ - அதனாலேயே திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அரசியலில் பலமாக இருந்த காலத்தில் ரசிகர்களை தொண்டர்களாக்கி அந்த துணிச்சலோடு அரசியலில் களமிறங்கினார் விஜயகாந்த். விஜயகாந்த் ‘ம்’ என்றாலும் கேட்பார்கள், ‘அமைதியா இருக்கமாட்டியா?’ என்று உரிமையுடன் ஒருமையில் கடிந்து கொண்டாலும் தொண்டர்களாகிய ரசிகர்கள் பம்முவார்கள்.
அரசியலில் அடியெடுத்து வைத்த கையோடு தேர்தல் பிரச்சாரங்களுக்காக பிரத்யேக கேம்பெய்ன் வாகனத்தில் விஜயகாந்த் பயணிக்கலானார். அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டம்தான். விஜயகாந்துக்கான கிரவுட் பற்றி அவ்வப்போது உளவுத்துறை ஆளுங்கட்சிக்கு ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. கூட்டம் திரண்டாலும் கூட தற்போது விஜய் செல்லுமிடமெல்லாம் சந்திக்கும் சவாலை விஜயகாந்த் சந்திக்கவில்லை என்று கூறலாம்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த தருணமும் அவர் சினிமாவில் ஹிட் நாயகன் இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிய காலமும் ஒன்றாக அமைந்தது. கடைசியாக வந்த படங்கள் எல்லாம் அரசியல் கருத்துகள் தாங்கிய படங்களாக வந்து கொண்டிருந்தன. அதனால் விஜயகாந்த் ரசிகர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட இலக்கை உணர்ந்து அரசியல் தொண்டர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர்.
ஒரு தொண்டருக்கான ஒழுக்கம் என்பதே கட்சிக்கு பலம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கட்சியை பலப்படுத்திவிட முடியாது. அவர்கள் ஒரு பாலமாக இருந்து தொண்டர்களை வைத்தே கடைக்கோடி குடிமக்களிடம் கட்சியை சென்று சேர்க்க முடியும். அத்தகைய ஒழுக்கத்துக்கு பழக்கப்பட்டவர்களாக இருந்தனர் விஜயகாந்த் ரசிகர்கள். விஜயகாந்த் இனி சினிமாவில் இளம் நாயகர்களுக்கு சமமாக போட்டியிட்டு சோபிப்பது எளிதல்ல. ஆனால், அரசியலில் சாதிப்பது சாத்தியம் என்று தயார்நிலையில் இருந்தனர். அதனால் அவர்களைக் கையாள்வது விஜயகாந்துக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் எளிதாக இருந்தது.
‘இன்னும் ஃபேன் பாய்ஸாகவே இருக்கும் விஜய் ரசிகர்கள்’ - நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த 2024 பிப்ரவரியில் தொடங்கினார். அவரும் தனது ரசிகர் மன்றமான ‘விஜய் மக்கள் இயக்கம்’ (Vijay Makkal Iyakkam) மூலமே அரசியல் களத்தில் இறங்கினார். ஆனால், இந்த ரசிகர் மன்றம் விஜயகாந்த் காலத்தில் இருந்த ரசிகர் மன்றம் போன்றதாக செயல்படவில்லை. விஜய் அரசியல் பிரவேசம் பற்றி தீவிரமாக ஹின்ட் கொடுக்க ஆரம்பித்த பின்னர்தான் அங்கொன்றும், இங்கொன்றுமான நற்பணிகள் நீள ஆரம்பித்தன.
எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் அவருக்கான வாக்காளர்களாக மாறியதன் பின்னணியில் அவருக்கே இருந்த அரசியல் கொள்கைப் பிடிப்பு மிக முக்கியக் காரணம். திமுகவில் அவர் அரசியல் பொறுப்பில் இருந்தவர். சினிமாவில் அவர் பேசிய அரசியலும் அவர் தாங்கிப்பிடித்த கொள்கையைப் பிரதிபலிப்பையாகவே இருந்தன. அதனால் அந்த ஃபேன் பேஸ் ஆரம்பத்திலிருந்தே எம்ஜிஆருக்காக பக்கபலமான தொண்டர்கள் தான்.
விஜயகாந்த் அவரது ரசிகர் மன்றங்கள் மூலமான சேவைகள் மூலம் எப்போதாவது அரசியலுக்கு வந்தால் துணைக்கு வருவார்கள் என்ற கணக்குடன் அவர்களை வளர்த்தெடுத்தார். ஆனால், திடுமென அரசியலுக்கு வந்து அரசியல் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் விஜய், அப்படியான கணக்குகளை வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் ரசிகர்கள் தல - தளபதி போட்டாப்போட்டியில் மாஸ் காட்டவே பழக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலும் 2கே கிட்ஸ்தான் அவரின் தீவிர ரசிகர்களாக உள்ளன.
அவர்களால் விஜய்யை இணையவெளியில் தூக்கிப் பிடிக்க முடியும், விஜய்யை சீண்டினால் அவர்களை ட்ரோல் செய்ய முடியும். விஜய் ஓட்டுப் போட வந்தாலே அவரைப் பின் தொடரத்தான் செய்தார்கள். அப்படியே பழக்கப்பட்டவர்களை தொண்டர்களைப் போல் பக்குவமாக செயல்படுங்கள், தலைவர் வரும்போது கொடியசைத்து வரவேற்பு நல்குங்கள், அவர் அமைதி காக்கச் சொன்னால் அமைதி காத்திருங்கள் என்றெல்லாம் கட்டளையிட்டால் அதை அவர்கள் தீவிரமானதாகக் கருதும் மனப்பான்மையில் இல்லை என்பதே யதார்த்தம்.
‘அரசியல் பழக வேண்டும்’ - திரையில் வரும் ஹீரோ விஜய்யை ஒர்ஷிப் செய்வதுபோலவே அரசியல் மேடையில் வரும் விஜய்யை கொண்டாடுவதிலும் மாஸ் காட்டிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதுமட்டுமல்லாது இப்போது இருக்கும் செல்ஃபி மோகம், ரீல்ஸ் மோகம், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் மோகம் எல்லாமும் கூட விஜய் ரசிகர்களை ஃபேன் பாய்ஸ் மோடிலேயே வைத்துள்ளது.
இந்தச் சூழலில்தான், “நம் அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும், சுய ஒழுக்கமும், 100 சதவீதம் சமரசமற்றதாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதென்று உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால், நான் சொல்வதை இனிமேல் கண்டிப்பாக பின்பற்றுங்கள்” என்று அறிக்கை வெளியிட்டார்.
இப்போதுதான் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர விஜய் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதை விஜய் ஃபேன் பாய்ஸ் புரிந்துகொள்ளும் வரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அங்கலாய்த்துக் கொள்வதுபோல், விஜய்யை ரசிகர்கள் கூட்டத்திலிருந்து பாதுகாப்பது பெரும்பாடாகத் தான் இருக்கும். விஜய் ரசிகர்கள் அரசியல் அறிய வேண்டும், பின்னர் அரசியல் பழக வேண்டும், அதன்பின்னரே அவர்கள் தொண்டர்களாகக் கட்சியைத் தாங்க முடியும்.
தொண்டர் படை பலத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நிற்கும் விஜய் விக்கிரவாண்டி முதல் மாநாட்டிலேயே தொண்டர்களுக்கான வழிகாட்டுதலை தீவிரமாகத் தெரிவித்திருந்தால் அதற்குக் கூடுதல் கவனம் கிடைத்திருக்கும். தாமதமாகிவிடவில்லை, இப்போதும் கூட முயற்சிக்கலாம் என்று கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT