Last Updated : 02 May, 2025 12:07 PM

 

Published : 02 May 2025 12:07 PM
Last Updated : 02 May 2025 12:07 PM

சிந்து நதி ஒப்பந்தம் இடைநிறுத்தம்: பாதிக்கப்படுமா பாகிஸ்தான்?

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.

இது போன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லைகளை மூடுவது, தூதரக அதிகாரிகளைக் குறைப்பது, அந்நாட்டுக் குடிநபர்களின் விசாக்களைக் கட்டுப்படுத்துவது முதலான நடவடிக்கைகள் வழமையானவை. இம்முறையும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது மேலதி​க​மாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்​தப்​பட்​டிருக்​கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பாகிஸ்​தானுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க மாட்டோம் என்று சொல்லி​யிருக்​கிறார். இது சாத்தியமா? இதனால் இரு தரப்பிலும் ஏற்படக்​கூடிய விளைவுகள் என்னென்ன?

ஒப்பந்​தத்தின் கதை: 1947இல் இந்தியாவும் பாகிஸ்​தானும் விடுதலை அடைந்து தனி நாடுகள் ஆயின. புதிய நாடுகளுக்கு இடையே வரையப்பட்ட எல்லைக்கோடு சிந்து நதியை ஊடறுத்தது. இந்த நதி திபெத்தில் உற்பத்​தியாகி இந்தியாவில் 780கி.மீ. தொலைவும் பாகிஸ்​தானில் 2,170கி.மீ. தொலைவும் ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது. இது தவிர, சிந்து நதியில் ஐந்து கிளை நதிகள் சங்கமிக்​கின்றன.

ஆக, ஆறு நதிகள். இவற்றின் நீரை எவ்விதம் பங்கிட்டுக்​கொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. நீண்ட விவாதங்​களுக்குப் பிறகு, உலக வங்கியின் மத்தி​யஸ்​தத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் 1960இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். மேற்குறிப்​பிட்ட ஆறு நதிகளில் மூன்று நதிகள் (ராவி, பியாஸ், சட்லஜ்) ‘கிழக்கு நதிகள்’ என்றும், அடுத்த மூன்று நதிகள் ‘மேற்கு நதிகள்’ (சிந்து, ஜீலம், செனாப்) என்றும் அழைக்​கப்​படு​கின்றன.

ஒப்பந்​தத்​தின்படி கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுமை​யாகப் பயன்கொள்​ளலாம். மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்​தானுக்கு உரியது. இந்தப் பங்கீட்​டின்படி மொத்த நீரில் 20% இந்தியா​வுக்கும் 80% பாகிஸ்​தானுக்கும் கிடைக்​கும். மேலும், இந்தியப் பகுதியில் ஓடுகிற மேற்கு நதிகளில் புனல் மின் நிலையங்கள் அமைக்​க​வும், நீர்வழிப் போக்கு​வரத்தை மேற்கொள்ள​வும், குடிநீர்த் திட்டங்களை அமைக்​கவும் மேல் மடையில் இருக்கிற இந்தியா​வுக்கு அனுமதி உண்டு. இதற்குக் கீழ் மடையில் இருக்கும் பாகிஸ்​தானின் சம்மதத்தைப் பெற வேண்டும். பிரச்சினைகள் வந்தால் பேசித் தீர்த்​துக்​கொள்ள உலக வங்கி ஒரு வல்லுநரை நடுவராக நியமிக்​கும்.

இந்தியாவும் பாகிஸ்​தானும் மூன்று முறை போரிட்​டிருக்​கின்றன (1965, 1971, 1999). பாகிஸ்தான் பல முறை எல்லை தாண்டிய பயங்கர​வாதத்தை நடத்தி​யிருக்​கிறது. சமீப காலங்​களில் மேற்கு நதிகளின் குறுக்கே கிருஷ்ணகங்கா அணை, ரேட்டல் புனல் மின் நிலையம் முதலானவற்றை இந்தியா நிர்மாணித்த​போது, பாகிஸ்தான் இயன்றவரை முட்டுக்​கட்டை போட்டது. 2023 முதல் இந்த ஒப்பந்​தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்​திவந்தது; பாகிஸ்தான் உடன்பட​வில்லை.

ஆனால், அப்போதெல்லாம் இந்த ஒப்பந்​தத்தை இந்தியா முறிக்க​வில்லை. இப்போது முதற்​கட்டமாக ஒப்பந்​தத்தை இடைநிறுத்​தி​யிருக்​கிறது. சிந்து நதியால் பாகிஸ்​தானில் பயனுறும் பாசனப் பரப்பு 160 லட்சம் ஹெக்டேர். இதிலிருந்து பெறப்​படும் விளைபொருள்கள் பாகிஸ்​தானின் உள்நாட்டு உற்பத்​தியில் கால் பங்கு ஆகும். கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்​களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் சிந்து விளங்கு​கிறது.

விளைவுகள் யாவை? - இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் நீரின்றி வறண்டு போகுமா? மேற்கு நதிகளின் (சிந்து, ஜீலம், செனாப்) வாயிலாக பாகிஸ்தான் பெறும் நீரின் விகிதம் 80% என்று பார்த்​தோம். இதன் கொள்ளளவு 117 பில்லியன் கன மீட்டர் (BMC). இந்த நீர் எவ்வளவு இருக்​கும்? தமிழகத்தின் பரப்பளவு சுமார் 1,30,000 சதுர கி.மீ. தமிழகம் முழுவதும் மூன்றடி நீரை நிறுத்​தினால் அந்த நீர் எவ்வளவு இருக்​கும்? அதுதான் 117 பி.எம்.சி. இந்தப் பேரளவிலான நீரை பாகிஸ்​தானுக்குப் போகவி​டாமல் இந்தியா​விலேயே அணை கட்டி நிறுத்த முடியுமா? பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவுக்கு நாம் நீரைத் தேக்கி ஆண்டுகள் பலவாயிற்று.

அப்படித் தேக்கி​னால், அது 443 மில்லியன் கன மீட்டர் அல்லது 0.44 பி.எம்.சி.யாக இருக்​கும். அதாவது, அரை பி.எம்.சி.க்கும் குறைவு. பெரியாறு அணை, பழைய அணை விட்டு​விடு​வோம். 2006இல் உத்தராகண்டில் பாகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நவீன அணையான தெஹ்ரி அணையை எடுத்​துக்​கொள்​வோம்.

இதன் கொள்ளளவு 3.54 பி.எம்.சி. அதாவது, 117 பி.எம்.சி நீரை பாகிஸ்​தானுக்குப் போகாமல் தடுக்க வேண்டு​மானால் 33 தெஹ்ரி அணைகளைக் கட்ட வேண்டும். இப்படியான பேரணை ஒன்றைக் கட்ட 10-12 ஆண்டுகள் ஆகும். மிகுந்த செலவு பிடிக்​கும். இந்த நதி பாயும் பகுதிகள் குறுகலான, செங்குத்தான, பனிப் பாறைகள் மிகுந்த பள்ளத்​தாக்​குகள்.

அணை கட்டி நீர் தேக்கு​வதற்கான சமவெளிகள் குறைவு. இந்த இடங்களில் அணை கட்டுவது சுற்றுச்​சூழலுக்குக் கேடானது, பாதுகாப்புச் சவால்கள் மிகுந்தது, நிலநடுக்கப் பகுதி​களில் வடிவமைப்பும் சிரமமானது. தவிர, மக்கள் இடம்பெயர வேண்டி வரும். ஆக, 117 பி.எம்.சி.யில் பெரும்​பகுதி நீரைத் தேக்குவது என்பது பொறியியல்​ரீ​தி​யாகச் சிரமமானது. இந்த இடைநிறுத்​தத்தால் வேறு என்ன செய்ய முடியும்? இதற்கு சிந்து நதிநீர் ஆணையத்தின் முன்னாள் ஆணையரான பி.கே.சக்சேனா விடையளிக்​கிறார்.

ஒன்று - மேற்கு நதிகளின் மேல் மடையில் அணைகள் கட்டவும், புனல் மின் நிலையங்கள் அமைக்​கவும் இனி பாகிஸ்​தானின் சம்மதத்தைப் பெற வேண்டாம். அவர்கள் சமீப காலமாகப் போட்டு​வரும் முட்டுக்​கட்​டைகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.

இரண்டு - சிந்து நதி ஒப்பந்தம், மேற்கு நதிகளில் இந்தியாவின் புதிய கட்டு​மானங்களை ஆய்வுசெய்​யவும் கருத்​துரைக்​கவும் பாகிஸ்தானை அனுமதிக்​கிறது. இனி அவர்களால் ஆய்வு மேற்கொள்ள முடியாது. மூன்று - மேல்மடையில் உள்ள அணைகளைக் கோடைக் காலத்​தில்தான் தூர்வார முடியும். இனி எந்தக் கட்டுப்​பாடும் இராது.

நான்கு - ஒப்பந்​தத்​தின்படி மேல்மடையில் மழை அளவையும் நீர்த் தேக்க விவரங்​களையும் கீழ்மடைக்கு வழங்க வேண்டும். இப்போது வேண்டாம். இதனால் என்னவாகும்? பாகிஸ்​தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் முன்ன​தாகக் கிடைக்​காமல் போகும்.

வெள்ளக் காலங்​களில் ஆற்றுப் புறம்​போக்கில் அனுமதி​யின்றி வாழும் மக்களை அப்பு​றப்​படுத்துவது தாமதமாகும். முதல் மூன்றும் இந்தியாவில் கூடுதல் நீரைத் தேக்கவும் மின் உற்பத்தி செய்யவும் பயன்படும்; இதனால் பாகிஸ்​தானுக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறையும். நான்காவது, வெள்ளக் காலத்தில் பாகிஸ்தான் மக்களைப் பாதிக்​கும்.

இனி என்ன நடக்கும்? - ஒப்பந்​தத்​திலிருந்து யாரும் தன்னிச்​சையாக விலகிக்​கொள்ள முடியாது என்று பன்னாட்டு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வாதிடலாம். எல்லா வழக்கு​களையும் போலவே இதுவும் நீண்ட காலம் எடுக்​கும். பள்ளமான இடத்தை நோக்கி நீர் பாய்கிற இயற்கையின் நியதியை நாம் முற்றிலும் நிறுத்​திவிட முடியாது.

இடையில் சில தடைகள் அமைக்​கலாம். மேல்மடையில் சாத்தி​ய​முள்ள அணைகளையும் புனல் மின் நிலையங்​களையும் அமைக்​கலாம். அதற்கு இந்த இடைநிறுத்தம் பயன்படலாம். இது ராஜீயரீ​தி​யாகவும் இந்தியா​வுக்கு உதவலாம். வருங்​காலத்தில் இந்தியாவின் திட்டங்​களுக்கு முட்டுக்​கட்டை போடுவ​திலிருந்து பாகிஸ்​தானைத் தடுக்​கவும் பயன்படலாம். இது சிந்து நதிநீர்ப் பங்கீட்டில் ஒரு சமரச ஏற்பாட்டை நோக்கி பாகிஸ்​தானைச் செலுத்​தவும் கூடும்​.

- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x