Published : 30 Apr 2025 06:23 AM
Last Updated : 30 Apr 2025 06:23 AM
இந்தியாவில் 5 பெண்களில், 3 பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களே ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளிடையே தொடர்ந்து அதிகரித்துவரும் ரத்தசோகை ஓர் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினை என்றே உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
ரத்தசோகை: ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது அவற்றில் உள்ள ஹீமோகுளோபினின் செறிவானது, இயல்பைவிடக் குறைவாக இருக்கும் நிலையே ரத்தசோகை எனப்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்ல ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது.
ரத்தச் சிவப்பணுக்கள் மிகக் குறைவாக இருந்தாலோ, போதுமான ஹீமோகுளோபின் இல்லாவிட்டாலோ உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் ரத்தத்தின் திறன் குறைகிறது. இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல், தலைவலி ஏற்படுகிறது.
நடுத்தர வயது ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெ.லிட்டர் வரையிலும், பெண்களுக்கு 13 முதல் 15 கிராம்/டெ.லிட்டர் வரையிலும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் 12 கிராமுக்கு அதிகமாகவும், வளரிளம் பருவத்தினருக்கு 13 கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிடும் நிலையே ரத்தசோகை.
காரணங்கள்: ரத்தசோகை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது என்றாலும், முதன்மையான காரணமாக இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளது. ஃபோலேட், விட்டமின்கள் பி12, ஏ குறைபாட்டினாலும் ரத்தசோகை ஏற்படுகிறது. இவை தவிர நாள்பட்ட நோய்கள், மரபணு, எலும்பு மஜ்ஜைப் பிரச்சினைகள், தைராய்டு கோளாறு ஆகியவையும் ரத்தசோகையை ஏற்படுத்தும். மலேரியா, காசநோய் போன்ற நோய்களும் ரத்தசோகை ஏற்படக் காரணமாகின்றன.
அண்மையில் ‘நேச்சர்’ (Nature) இதழ் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாட்டால் ரத்தசோகை அதிகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்கிற அளவில், காற்றில் ‘பி.எம். 2.5’ துகள்களின் அளவு அதிகரிக்கிறது (காற்று மாசு அளவீடான ‘பி.எம். 2.5’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோ கிராமைவிட அதிகமான அளவில் மாசு இருக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது). மீறி அதிகரிக்கும் நிலையானது ரத்தசோகையைக் குழந்தைகளிடம் 10 சதவீதமும், பெண்களிடம் 7.23 சதவீதமும் அதிகரிக்கிறது.
மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் சைட்டோகைன்களைத் தூண்டுவதால், இவை எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைக் குறைய வைத்து ரத்தசோகையை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காற்று மாசு - ரத்தசோகை குறித்த இந்த ஆய்வுகளில் தொழிற்சாலைகள், விவசாயக் கழிவுகள், போக்குவரத்து போன்றவை காற்று மாசுக்கு முதன்மைக் காரணங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவது அவசியம்.
புள்ளிவிவரங்கள்: தேசியக் குடும்ப நல ஆய்வின்படி(4), கடந்த 2015 - 2016இல், 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 53.10% பேர், குழந்தைகளில் (6 முதல் 59 மாதங்கள்) 58.60%, ஆண்களில் 15 முதல் 49 வயதுக்கு இடையே 22.7% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. தேசியக் குடும்ப நல ஆய்வின்படி(5), கடந்த 2019 – 2021இல், இந்தியாவில் 67% (6 முதல் 59 மாதங்கள்) குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட, 15 முதல் 49 வயதுக்கு இடையே உள்ள பெண்களில் 59.1% இளம் பெண்களிடம் ரத்தசோகை கண்டறியப்பட்டது. இதில் 15 முதல் 49 வயதுடைய ஆண்களில் 25% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மாநிலங்கள் நிலவரம்: இந்தியாவில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளில் 50% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக 2019 - 2021 தேசியக் குடும்ப நலச் சுகாதார ஆய்வறிக்கை (5) தெரிவிக்கிறது. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 80% குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 70%க்கும் அதிகமான குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஹார், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஷா, திரிபுராவில் 60%க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பு வளரிளம் பெண்களுக்கு 52.9% ஆகவும் வளரிளம் ஆண்களுக்கு 24.6% ஆகவும் உள்ளது. குறிப்பாக, திருச்சி (82.3%), விழுப்புரம் (73.4%), கரூர் (73.2%) போன்ற மாவட்டங்கள் தேசியச் சராசரியைவிட அதிக அளவில் ரத்தசோகை உடைய சிறுவர் - சிறுமியரைக் கொண்டுள்ளன.
ரத்தசோகை இல்லா இந்தியா: ரத்தசோகை இல்லா இந்தியா (Anemia Mukt Bharat) என்கிற திட்டத்தை மத்திய அரசு 2018இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து, இரும்புச் சத்து மாத்திரைகள் சுகாதார மையங்களில் வழங்கப்பட்டன. எனினும் இம்முறைகளில் கண்காணிப்பு இல்லாத காரணத்தினால், அரசு நிர்ணயித்த இலக்கு இதுவரை எட்டப்படாமலே உள்ளது.
மேலும், மானிய விலையில் உணவு விநியோகத் திட்டத்தின் கீழ், 2021இல் செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹரியாணா மாநிலத்தில், செறிவூட்டப்பட்ட மாவுகளில் (கோதுமை) ரத்தசோகை சார்ந்த ஆரம்பகால ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன. ஆனால், வெவ்வேறு உணவு முறைகளைப் பின்பற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த முறை ஏற்றுக்கொள்ளப்படுமா என ஊட்டச்சத்து நிபுணர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
அரிசி, கோதுமை, உப்பு போன்ற பிரதான உணவுகளில் இரும்பு, ஃபோலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகியவற்றைச் சேர்க்க உணவுச் செறிவூட்டல் திட்டத்தை விரிவுபடுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் இரும்புச் சத்து மத்திரைகள் வழங்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும்.
உணவில் இரும்புச் சத்து நிறைந்த சத்தான உணவுகளைச் சேர்த்துக்கொள்ளும் அதேநேரத்தில், இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை உறுதிசெய்யும் ஆய்வுகளிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, ஹீமோகுளோபினின் முக்கியத்துவம், இரும்புச் சத்தின் தேவை ஆகியவை குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT