Published : 27 Apr 2025 09:26 AM
Last Updated : 27 Apr 2025 09:26 AM
‘விசுவாவசு’ தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதி, நான் என்னுடைய கிராமத்தில் இருந்தேன். சித்திரை முதல் நாளன்று பொன் ஏர் பூட்டும் வைபவம் கிராமங்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதை நல்லேர் பூட்டுதல், ஏர்பூட்டு திருவிழா என பல பெயர்களில் அழைப்பதுண்டு.
கிராமங்களில் தை மாதம் அறுவடை முடிந்துவிடும். அதைத்தொடர்ந்து, சித்திரை 1-ம் தேதி விளைநிலத்தை உழ ஆரம்பித்து அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்துவார்கள். மன்னராட்சி காலத்தில் மன்னர்களே பொன் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பணியைத் தொடங்கி வைக்கும் நடைமுறை இருந்தது. அதைப் பின்பற்றி விவசாயிகளும், ஏர் கலப்பையுடன் இரட்டை மாடு பூட்டி தங்களுடைய நிலங்களை உழ ஆரம்பிப்பார்கள். இது ஆதிகாலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு நீண்ட நெடிய பாரம்பரிய விவசாயிகள் திருவிழாவாகும்.
இதுகுறித்த தகவல்கள் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் பல்வேறு பள்ளு இலக்கியங்களிலும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஈழத்திலும் இத்திருவிழாவை நடத்துவதுண்டு.
சித்திரை மாதம் என்பது கோடை காலத்தின் தொடக்கமாகும். வெந்தணலாய் வெயில் வாட்டி வதைக்கும் காலம். வயல் வெளிகளில் இலை தழைகள் சறுகாகக் காய்ந்து விடும். அந்த சமயத்தில் நிலத்தை உழும்போது அவை மண்ணோடு மண்ணாகக் கலந்து இயற்கை உரமாகி விடும். மண்ணுக்கு நுண்ணூட்டச் சத்தும் கிடைக்கும்.
மேலும், சித்திரை மாத வெயிலால் வயல்வெளிகளில் மண் இறுகி பாறைபோல் ஆகிவிடும். அதைத் தொடர்ந்து மழைக் காலத்தில் மழை பெய்யும்போது நிலத்தை உழுவது சிரமமாக இருக்கும். எனவே மழைக்கு முன்பாகவே நிலத்தை உழுதுவிட்டால், மழை பெய்யும்போது அந்த மண் சாகுபடிக்கு ஏற்றதாக இலகுவாக மாறிவிடும். பெரும்பாலும் நிலத்தில் மகசூல் முடிந்தவுடன் தரிசாகப் போட்டுவிடக் கூடாது. கூடிய விரைவில் உழுதுவிட வேண்டும்.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது முன்னோர் வாக்கு. அதை எதிர்கொள்ளும் வகையிலேயே சித்திரை முதல் நாளன்று பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வு நடத்தப்படுகிறது.
பொன் ஏர் பூட்டும் நாளில் கலப்பையை கழுவி தயாராக வைத்திருப்பார்கள். மேலும் உழவு மாடுகளைக் குளிப்பாட்டி, அதனுடைய கொம்புகளில் வர்ணம் தீட்டி, நெற்றியில் மங்களகரமான மஞ்சள், குங்குமம் பூசுவார்கள். அதேபோல், ஏரிலும் மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் பூசி தயாராக வைத்திருப்பார்கள். ஈசான மூலையில் பசுமாட்டுச் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அல்லது, 7 கற்களை வைத்து அதற்கு மஞ்சள் தடவி குங்குமம் வைக்கப்பட்டிருக்கும். இந்த 7 கற்கள் என்பது கிராம தேவதைகளான ஏழு கன்னிமார்களைக் குறிப்பதாகும்.
வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுவத்தி, கற்பூரம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த பச்சரிசி, அவலோடு வெல்லம் கலந்து படையல் வைத்திருப்பார்கள். விவசாயியின் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்க வயதில் மூத்தவர் ஊதுவத்தி, கற்பூரம் ஏற்றி பூஜை செய்வார்.
நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிப்படைய வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும், ஜீவராசிகள் அனைத்துக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக் கொண்டு, பொன் ஏர் பூட்டி நிலத்தை உழத் தொடங்குவார்கள். இந்த நிகழ்ச்சி விடியற்காலையில் ஆரம்பித்து 8 - 9 மணிக்கெல்லாம் முடிந்து விடும்.
உழும்போது ஒரு சிலர் நவதானியங்களைத் தூவுவதுண்டு. நிலத்தை 3 அல்லது 5 முறை உழுவது நல்லது. அதுவும் ஆழமாக உழவேண்டும். ஆழமாக உழுதால் பயிர்கள் வேர் விடுவதற்கு எளிதாக இருக்கும்.
பூஜை முடிந்த பின்னர், படையலிட்டவற்றை எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த ஆண்டு எனக்கு கிடைத்தது உள்ளபடியே மனநிறைவைத் தந்தது.
காலங்கள் செல்லச் செல்ல, இதுபோன்ற ஏர் பூட்டல் நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகின்றன. எனக்குத் தெரிந்தவரை கடந்த 1985-ம் ஆண்டு வரை சிறப்பாகவே நடந்து வந்தன. அதற்குப் பிறகு டிராக்டர்களின் பயன்பாடுகள் வந்தவுடன் ஏர் பூட்டுதல்கள் குறையத் தொடங்கின.
தற்போது சித்திரை முதல் நாளன்று டிராக்டர்களுக்கு வழிபாடு செய்து, உழவுப் பணியை தொடங்குகின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும்தான் பாரம்பரியத்தை விட்டு விடாமல், மாடுகளில் கலப்பையைக் கட்டி பொன் ஏர் பூட்டுதல் நடக்கிறது.
உழவு மாடுகள், ஏர் கலப்பையை வழிபடுவது மட்டுமல்லாமல், விவசாயத்துக்குப் பயன்படும் மண்வெட்டி, கடப்பாறை, களை சுரண்டி, குளங்கள், ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் கழிஞ்சல்களையும் விவசாயப் பெருமக்கள் வழிபடுவார்கள்.
விலைமதிப்பற்ற நவதானியங்கள், பயிர் வகைகளைக் கொடுக்கும் விவசாய நிலத்தை பொன் விளையும் பூமி என்று விவசாயிகள் கருதினார்கள். விவசாய நிலத்தில் கால் பதிக்கும்போது காலணிகளையும் கழட்டி விட்டுத்தான் இறங்குவார்கள்.
தைப்பொங்கல், மாட்டுப் பொங்கலைப் போன்று பொன் ஏர் பூட்டும் நாளும் விவசாயிகளுக்குத் திருநாள்தான். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்தத் திருவிழா பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தை மாதத்தில் அறுவடைப் பணிகள் முடிந்தவுடன் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும்தான் விவசாயிகளுக்கு ஓய்வு கிடைக்கும். அத்தகைய மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் கிராமங்களில் பெரும்பாலான கோயில்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.
சித்திரை ஆரம்பித்து விட்டால், நிலத்தை உழுது பக்குவப்படுத்த வேண்டும். ஒருசிலர் கோடையில் பருத்தி போன்றவற்றை பயிர் செய்வார்கள். கோடைகாலம் முடிந்தவுடன் மழை தொடங்கும். அதோடு வேளாண் பணிகளும் தொடங்கிவிடும். நீர் பாய்ச்சுதல், பயிர் பராமரிப்பு, களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் என அடுத்தடுத்து வேலைகள் ஆரம்பித்து விடும். டிசம்பர் கடைசி வரை இது தொடரும்.
மின்சார வசதி உள்ள கிணறுகளில், மின்வெட்டு காரணமாக முன்பெல்லாம் இரவு நேரத்தில் மட்டும்தான் தண்ணீர் பாய்ச்ச முடியும். மார்கழி மாதத்தில் கடும் பனி வாட்டி வதைத்தாலும், இரவு முழுவதும் பம்ப் செட்டில் காத்திருந்து மின்சாரம் இருக்கும் நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரவில் பாம்புகள், தேள், போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
எங்கள் வட்டாரத்தில் மயில்கள் அதிகம் உண்டு. விளைநிலங்களில் அவை கூட்டம் கூட்டமாகக் காணப்படும். தானியங்கள் முழுமையாக விளைச்சல் அடைவதற்கு முன்பே, பால் பிடிக்கும் பருவத்திலேயே நெல் மணிகள், தானியங்களை உட்கொண்டுவிடும். அதேபோல் மற்ற பறவை இனங்களும் உண்டு. இவற்றிடம் இருந்தும் பயிர்களைக் காக்க போராட வேண்டும்.
இவ்வாறு இரவு பகல் பாராமல் ஆண்டு முழுவதும் பாடுபட்டாலும், பெரும்பாலான விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியோ, நிம்மதியோ இருப்பதில்லை. முதலில் நல்ல மழை பெய்ய வேண்டுமே, பயிர்கள் நன்றாக வளர வேண்டுமே, மகசூல் நல்ல முறையில் கிடைக்க வேண்டுமே என்ற கவலை... அதன் பின்னர் மகசூல் செய்தவற்றுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை... எதிர்பார்ப்பு!
அதுவும் எங்கள் கரிசல் பகுதி விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசமானது. ஏனெனில், தீராவாச நிலங்களான தஞ்சை, டெல்டா பகுதிகளைப் போன்றோ, தேனி, மதுரை மாவட்டங்களுக்கான முல்லை பெரியாறு பாசனமோ, அல்லது தெற்குப் பகுதியில் உள்ள தாமிரபரணி பாசனமோ எங்கள் பகுதிக்கு கிடையாது. இருக்கும் நீர்வளத்தைக் கொண்டு விவசாயம் செய்தாலும், அதற்குரிய பலனை கிடைக்கவிடாமல் இடைத்தரகர்கள் இடையில் புகுந்து அபகரித்துக் கொள்கின்றனர். எனவே துன்பப்பட்டு, துயரப்பட்டுதான் விவசாயிகள் ஜீவித்து வருகின்றனர்.
எனக்குத் தெரிந்து, எங்களிடம் வாழைத்தார்களை அதிகபட்சமாக ரூ.25 விலை கொடுத்து தரகர்கள் வாங்குகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் ஒரு பழமே ரூ.5-க்கு மேல் விற்கப்படுகிறது. ஒரு தாரில் குறைந்தபட்சம் 50 பழங்களாவது இருக்கும் என்றால் இடைத்தரகர்கள், வியாபாரிகள் எந்த அளவுக்கு லாபம் பார்க்கிறார்கள் என்பது தெரிய வரும். பாடுபட்டு விளைவித்த விவசாயிக்கும் பலன் கிடைப்பதில்லை; அதேபோல் அதிக விலை கொடுத்து வாங்குவதால் மக்களுக்கும் பலனில்லை.
விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்கித்தான் பயிர் செய்கிறார்கள். அந்தக் கடனை கட்டத் தவறினால் வட்டிக்கு மேல் வட்டி கூடும். இதற்கு மேல் அவர்களுடைய அன்றாட வீட்டுச் செலவுகள், பிள்ளைகளின் படிப்பு செலவுகள், வெளியூரில் படிப்பதென்றால், விடுதி, உணவு செலவுகள், உறவினர் வீட்டு சுகதுக்கங்களில் பங்கேற்கும் செலவுகள், பண்டிகை காலங்களில் பிள்ளைகளுக்கு துணிமணிகள் வாங்குதல், மருத்துவச் செலவுகள் என அனைத்துக்கும் இந்த விவசாய வருமானத்தை நம்பியே உள்ளனர். விவசாயம் பொய்த்துப் போனால், அவர்கள் படும் வேதனைகளைச் சொல்லி மாளாது. இவற்றை சமாளிக்க மேற்கொண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற நிலைகளில்தான், சமாளிக்க முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை முன்பெல்லாம் இந்தியாவில் சோட்டா நாக்பூர், விதர்ப்பா பகுதிகளில்தான் விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாக நடந்தன. ஆனால் இன்றைக்கு, வளமிக்க தஞ்சை மாவட்டத்திலேயே தற்கொலைகள் அதிகமாக நடந்தேறுகின்றன. கடன் தொல்லையால் தூக்கிட்டும், விஷம் அருந்தியும் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உயிர்ப்பலி நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கான நீண்ட பட்டியல் என்னிடம் உண்டு. ஆனால் அதை சொல்வதற்கான இடம் இது இல்லை. என்னுடைய ‘தமிழக விவசாய சங்க போராட்ட வரலாறு’ என்ற நூலில் இதைப்பற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன்.
விவசாயிகள் சந்தோஷமாக இருந்தால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும். அவர்களது வாழ்வும் விடியலை நோக்கிச் செல்லும். அதனால்தான் மகாத்மா காந்தியும் சொன்னார் - ‘கிராம ராஜ்யம் வேண்டும்’ என்று. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் ஜீவனோடு வாழ்கிறது என்று அவர் சொன்ன காரணத்தினால்தான், பூதான இயக்கத்தை வினோபா ஆரம்பித்தார். நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு நிலங்களைக் கொடுக்க நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார் அந்த மாமனிதர்.
அதற்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணன், மோகன்தாரியா, சர்வோதயா ஜெகநாதன் போன்றவர்கள் கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டார்கள்.
இந்தியாவின் வடபுலத்தில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி, மாவோ இயக்கங்களும், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், ஆயுத யுத்தப் போராளிகள் என்ற மாவோ இயக்கமும் தோன்றியதற்கான காரணங்களுள் முக்கியமானவை விவசாயிகள் வஞ்சிக்கப்படுதல், அரசு அதிகாரிகளின் துஷ்பிரயோகங்கள், வர்க்க பேதங்கள் போன்றவைதான்.
பொதுவாக விவசாயிகள் காலையில் கழனிகளுக்குச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். எந்தவிதமான வம்பு - தும்புகளிலோ, பிரச்சினைகளிலோ சிக்க மாட்டார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். கடன் வாங்கினால் அதை எப்பாடு பட்டாவது வட்டியோடு திருப்பித் தந்துவிடுவார்கள். மனசாட்சிக்குப் பயப்படுபவர்கள். பிறரை ஏமாற்றுவது தெய்வ நிந்தனை என்று நினைப்பார்கள்.
அதேநேரம் விவசாயம் பொய்த்து, கடனை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இழிசொற்களை எதிர்கொள்ள முடியாமல், கவலைகளை மறக்க ஒருசிலர் மது போதைக்கு அடிமையாகி தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு, குடும்பத்தையும் நிலைகுலையச் செய்து விடுகின்றனர்.
பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வில் நான் பங்கேற்றபோது இவையெல்லாம் என் மனதை வருத்தின...
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > கிராம நிர்வாகம் - வரிவிதிப்பு முறைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 15
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT