Last Updated : 26 Apr, 2025 09:41 AM

1  

Published : 26 Apr 2025 09:41 AM
Last Updated : 26 Apr 2025 09:41 AM

அரசு இணைய சேவை நல்ல வழியில் உதவட்டும்!

அரசு கேபிள் டிவி சேவையைப் போல், தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களுக்கு ரூ.200 கட்டணத்தில் அரசு பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணைய வளர்ச்சியில் புதிய பாய்ச்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (TANFINET) மூலமாக 11,626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில், 53,334 கி.மீட்டர் தொலைவிற்கு இணைய வசதி ஏற்படுத்தும் பணிகள் 92 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் அரசு இணைய சேவை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அமைச்சர் அறிவித்துள்ளார். இல்லங்களில் இணைய சேவை அத்தியவாசிய தேவைகளின் பட்டியலில் இடம்பெற்று வரும் இந்த காலகட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது அலைபேசி வசதி என்பது அடர்ந்த வனப்பகுதிகளைத் தவிர, குக்கிராமங்களையும் எட்டியுள்ள நிலையில், பிராட்பேண்ட் இணைய வசதி நகர்ப்புறங்களைத் தாண்டிகிராமங்களை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த நிலையில் அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது.

மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வி கற்பதற்கும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தேடிப் பெறுவதற்கும், உலக அறிவை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி கடைக்கோடி மக்களும் அறிந்து கொள்வதற்கும் இத்தகைய வசதி பெரும் பங்காற்றும். அதேசமயம், அரசு கேபிள் சேவை எந்த அளவுக்கு தரமான சேவையை அளிக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். கேபிள் சேவையில் தனியார் ஆதிக்கம் என்பதும், குறிப்பாக அரசியல்கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் என்பதும் நாடறிந்த ரகசியம். மறைமுகமாக அவர்கள் காய் நகர்த்தி அரசு கேபிள் சேவை முறையாக மக்களைச் சென்றடையாத வண்ணம் பார்த்துக் கொள்வதையும் கண்கூடாக காண முடிகிறது.

அதேபோன்ற ஒரு நிலை அரசு இணைய சேவைக்கும் ஏற்பட்டு விடாதபடி, சுதந்திரமான வெளிப்படைத்தன்மை மிக்க நேர்மையான அமைப்பாக அந்த சேவை நிறுவனம் இயங்குவதை உறுதி செய்தால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும்.

தற்போது இணைய சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் ரூ.600 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அரசு இணைய சேவை ரூ.200-க்கு கிடைக்கிறது என்றால் மக்கள் அனைவரும் அரசு சேவையையே விரும்புவார்கள். அது நடந்து விடக்கூடாது என்று இடையூறுகளையும், நெருக்கடிகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் குறிப்பாக அரசியல் சார்புடன் இயங்கும் நிறுவனங்கள் கூடியமட்டும் முயற்சி எடுக்கும் நிலை ஏற்படும்.

இதுபோன்ற நெருக்கடிகளுக்கு இடம்தராமல் மக்கள் நலன் காக்கும் அரசு என்பதை வெற்று வார்த்தைகளாக இல்லாமல் செயல்வடிவத்தில் காண்பித்து கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இத்திட்டம் வெற்றிகரமாக சென்றடைய அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x