Published : 24 Apr 2025 08:58 AM
Last Updated : 24 Apr 2025 08:58 AM
இன்றைக்கு ஆன்லைன் வர்த்தகம் உலகம் முழுவதும் இமாலய வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே கிடைக்கச் செய்வதிலும், அவர்களது வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதிலும் சிறு வணிகர்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
அத்தகைய சிறு வியாபாரம் செய்யும் கடைகள் பெருநிறுவனங்களின் அபார வளர்ச்சி காரணமாக பாதிக்கப்படுவதை வணிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டி வருகின்றனர். சென்னை நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10,645 ஆக இருந்த கடைகளின் எண்ணிக்கை தற்போது 8,476 ஆக குறைந்துள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரவை வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சக்தி சிவக்குமார் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் 2,169 கடைகள் மூடப்பட்டிருப்பது கிட்டத்தட்ட 20 சதவீதம்.
ஒட்டுமொத்த மளிகை வணிகத்தில் 27 சதவீதம் ஆன் லைன் மூலம் நடப்பதாகவும், அதன் காரணமாக சிறு வணிகர்களின் விற்பனையில் கடந்த 5 ஆண்டுகளில் 20 முதல் 40 சதவீதம் வரை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரு நிறுவனங்கள் மளிகைப் பொருட்களை அதிக சலுகை விலையில் விற்பது உள்ளிட்ட காரணங்களால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி கடை வாடகை, மின்கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வால் திணிக்கப்படும் வாடகை உயர்வு, உரிமை புதுப்பித்தல் 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் என்று வற்புறுத்துதல் உள்ளிட்ட பல காரணிகளால் சிறு வணிகர்கள் நஷ்டமடைந்து கடைகளை மூடிவிட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.
சாதாரண மக்கள் எளிதில் அணுகி தங்களது தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு சிறு கடைகளையே இன்றைக்கும் நாடுகின்றனர். அத்தகைய சிறு வணிகம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் சிறு வணிகர்களுக்கு வங்கி கடன் வழங்க உதவினால் மட்டும் போதும் என்றில்லாமல், அவர்களின் தேவையை அறிந்து அவர்கள் தொழிலில் நஷ்டமடையாமல் காப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றின்போது, இன்றைக்கு அசுர பலத்துடன் இயங்கிவரும் ஆன்லைன் வர்த்தகம் எதுவும் செயல்படவில்லை.
அன்றைக்கு பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கடை திறக்காவிட்டாலும் வாசலில் போட்டு வைத்தும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்றும் விநியோகம் செய்தவர்கள் சிறு வணிகர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு பாதிப்பு என்று வரும்போது அரசும், பொதுமக்களும் ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதே நன்றிக்கடனாக அமையும்.
பெருவணிக நிறுவனங்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்கள் கேட்கும் வரிச்சலுகைகளை அரசு வழங்குவதுடன், சிறு வணிகர்களுக்கென ஆன்லைன் வியாபார தளம் ஒன்றையும் அரசு சார்பில் இலவசமாக உருவாக்கித் தந்து அவர்களை இன்னலில் இருந்து மீட்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT