Published : 23 Apr 2025 06:30 AM
Last Updated : 23 Apr 2025 06:30 AM
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசா எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 30% குறைந்துள்ளது; குறிப்பாக சீனா, வியட்நாம், ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களுக்கு வழக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது, அங்கு கல்வியைத் தொடரும் மாணவர்களிடம் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எஃப் - 1 விசா: அமெரிக்காவில் குறிப்பிட்ட காலத்துக்குக் கல்லூரி, பல்கலைக்கழங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசாவே ‘எஃப்-1’ விசா. ‘எம்-1’ விசா என்பது தொழில்சார் படிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.
அமெரிக்கா ஓர் ஆண்டில் அதிகமாக விநியோகிக்கும் விசாவாக ‘எஃப்-1’ இருந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை இது கொண்டுள்ளது. அதில் முதன்மையானது ஒரு தனிநபர் தற்காலிகமாகப் படிக்கும் நோக்கத்துடன் மட்டுமே அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்பது. அதாவது, பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர் நாடு திரும்பிவிட வேண்டும்.
நாடுகள் நிலவரம்: அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான குடியேற்ற விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் இந்த நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
போராட்டங்கள், சிறு சிறு சட்ட விதிமீறல்களுக்கு எல்லாம் மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுவிடுவதாக மாணவர்கள் விமர்சிக்கின்றனர். ரத்து செய்யப்பட்ட மாணவ விசாக்களில் 50% இந்திய மாணவர்களுடையவை என அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த இடத்தில் சீன மாணவர்கள் (14%) உள்ளனர். தென் கொரியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் கணிசமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
விசா நிராகரிப்புகளுக்கு அமெரிக்கா தரப்பில் உரிய விளக்கம் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும், மறுக்கப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில், தனிப்பட்ட விவரங்கள், முந்தைய கல்விப் பின்னணி, துணை ஆவணங்களில் உள்ள சிறிய முரண்பாடுகள் போன்றவை நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடங்களில்... 2014-15இல் அமெரிக்காவில் மாணவ விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8.56 லட்சமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2020இல், கரோனா தீவிரமாக இருந்தபோது விசா எண்ணிக்கை 1.62 லட்சமாகக் குறைந்தது. 2024இல் ஜனவரி முதல் செப்டம்பர்வரை 64,008 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. 2023இல் இதே காலக்கட்டத்தில் 1.03 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2014இல் மறுக்கப்பட்ட விசா விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பத்தாண்டுகளில் விசா நிராகரிப்பு விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2022 - 2023இல் அமெரிக்காவுக்கு வந்த மாணவ விசாக்களின் எண்ணிக்கை 6.99 லட்சம், இதில் 2.53 லட்சம் விசாக்கள் நிராகரிக்கப்பட்டன.
2023-24இல் வந்த மாணவ விசாக்களின் எண்ணிக்கை 6.79 லட்சமாக இருந்த நிலையில் 2.79 லட்சம் விசாக்கள் நிராகரிக்கப்பட்டன. டிரம்ப் அதிபரான பிறகு, கல்வி தொடர்பான விசாக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா விசாக்களும் மறுக்கப்படுகின்றன; முன்பு 10% விசாக்கள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 20 - 30% ஆக அதிகரித்துள்ளது எனத் தனியார் விசா முகமைகள் தெரிவித்துள்ளன.
சட்ட வழியில்... விசா மறுக்கப்பட்டது தொடர்பாக, தேசியச் சட்டம், குடியேற்றச் சட்டங்களை அமெரிக்கா கடுமையாக நடைமுறைப்படுத்திவருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் சட்டத்தைப் பின்பற்றினால் அமெரிக்கா அவர்களுக்கான வாய்ப்புகளை அளிக்கும்; ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் விளைவுகளைச் சந்திப்பார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவால் 170 கல்லூரிகளில் பயின்று வந்த 1,100 சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விசா நீக்கத்துக்கு எதிராகவும், தாங்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்திய மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க சட்டப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது. இச்சட்டப் போராட்டத்தில் இந்திய மாணவர்களுடன், சீன மாணவர்களும் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
கல்வித் தரத்தை மேம்படுத்தல்: அமெரிக்கா மட்டுமல்லாது, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும் சர்வதேச மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விசாக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதலும் சில ஆண்டுகளாக அதிகரித்துவருவது, அங்கு பயிலும் மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேம்பட்ட கல்வி, பொருளாதார நிலைகளுக்காக இந்திய மாணவர்கள் பலரும் வெளிநாடுகளில் கல்வி பயில விரும்புகின்றனர். இந்தியாவில் உயர் படிப்புகளுக்குப் போதிய வேலைவாய்ப்பு இல்லாத சூழலும் மாணவர்களின் வெளிநாட்டுத் தேர்வுக்குக் காரணமாக உள்ளது.
ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கற்றலுக்குச் சம வாய்ப்புகளை உருவாக்குவது, மேம்பட்ட ஆசிரியர் பயிற்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவற்றில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வி நிலையங்களை உருவாக்குவதில் இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்களைச் சீரமைத்து சரிசெய்வது அவசியம். இதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மூலம் சாத்தியமாகும் வேலைவாய்ப்புகளுக்கு இணையானவற்றை இந்தியப் பல்கலைக்கழகங்களும் உருவாக்கிட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT