Published : 20 Apr 2025 10:16 AM
Last Updated : 20 Apr 2025 10:16 AM
கிராமங்களில் தானியங்களை அளப்பதற்கு இரும்பாலான உழக்கு, நாழி, மரக்கால் படியை பயன்படுத்துவார்கள். இதை அளப்பதற்கு கிராமத்துக்கு ஒருவர் இருப்பார். அவரை ‘அளவைக்காரர்’ என்று அழைப்பார்கள். அவருக்கு அளவைக் கூலியாக நெல் மற்றும் தானியங்கள் கொடுப்பார்கள். சிலர் பழக்கத்தின் பேரில் கூலி எதுவும் வாங்காமலேயே அளந்து கொடுப்பதும் உண்டு.
எட்டையபுரம் பகுதியில் மரக்காலில் நெல்லையோ தானியத்தையே அளக்கும்போது மரக்கால் ஒன்று என்று ஆரம்பிப்பார்கள். அடுத்து இரண்டு... மூன்று... என்று தொடங்கி, எட்டு வரும்போது, எட்டு என்று கூற மாட்டார்கள். ஏனென்றால் ‘எட்டு - எட்டப்பன்’ என்று வருவதால் அதைத் தவிர்த்து, எட்டாவது மரக்காலை ‘மகாராஜா மரக்கால்’ என்பார்கள். இது அங்கு வாடிக்கையாக இருந்தது. பருத்தியை சதுர வடிவில் தாட்டு என்று கூறப்படும் 100 கிலோ அளவிலான சாக்கில் அடைத்து எடை போடுவார்கள். மிளகாய் வத்தலையும் இதேபோல்தான் எடை போடுவார்கள்.
அன்றைக்கு வீடுகளில் பெரும்பாலும் விறகு அடுப்புதான் பயன்பாட்டில் இருந்தது. விறகு விற்பதற்கு என்று விறகுக் கடைகள் ஊருக்கு ஒன்றிரண்டு இருக்கும். விறகுகளை பெரிய தூக்கு தராசில் எடை போடுவார்கள்.
பள்ளிகளில், வெள்ளிக்கிழமைகளில் தேசியக் கொடி ஏற்றி, வந்தேமாதரமும் தேசிய கீதமும் பாடப்படும். உயர் நிலைப்பள்ளி வரை இது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு சிறுவர்கள் படிப்பதற்காக படக் கதைகளுடன் மஞ்சரி, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் வெளிவந்தன. அதேபோல் பேசும் படம், பொம்மை போன்ற சினிமா மாத சஞ்சிகைகளும் வந்தன.
சிறுவர்களின் விளையாட்டு சாதனங்களில் சைக்கிள் டயர்களும் இடம்பெற்றிருந்தன. அந்த டயர்களை தெருக்களில் ஓடவிட்டு, ஒரு குச்சியால் தட்டிக் கொண்டே பின்தொடர்வார்கள். கடைக்கு செல்வதானாலும், நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதானாலும், அந்த டயர் வண்டிகளை ஓட்டியபடியே செல்வார்கள்.
சைக்கிள் கடைகளில் வாடகைக்கு சைக்கிள்கள் கிடைக்கும். சிறு வயதில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டப் பழகுவார்கள். பின்னால் ஒருவர் பிடித்துக் கொண்டே வருவார். முதலில் சீட்டில் உட்கார்ந்து பெடலை மிதிக்க கால்கள் எட்டாததால், குரங்கு பெடல் மிதித்தபடி சைக்கிள் ஓட்டப் பழகுவார்கள். சைக்கிள் பழகும்போது பலமுறை கீழே விழுந்து முட்டிக் காயங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல் சாலையில் செல்வோர் மீது மோதி கீழே விழுவதும், திட்டு வாங்கியதும் உண்டு.
பொதுவாகப் பள்ளிகளில் மட்டுமல்ல, வெளியிடங்களில் ஆசிரியர்களைப் பார்த்தாலும் பயம் கலந்த மரியாதையுடன் மாணவர்கள் ஒதுங்கிச் செல்வார்கள். ஆற்றிலோ, பம்ப் செட்டிலோ ஆசிரியர் குளிக்கிறார் என்றால் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள்.
1960 காலகட்டத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள குருவிகுளம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து, ஆசிரியர் படிப்பு படிக்கும் மாணவர்கள் வந்து பாடம் எடுப்பார்கள். குருவிகுளத்தில் இருந்து சைக்கிளில் வருவார்கள். வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் பாடம் நடத்துவார்கள். பாடம் சம்பந்தமான படங்கள் ஒட்டப்பட்ட ஆல்பங்களைக் காண்பித்து விளக்குவார்கள். அது புதுமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். வெள்ளிக்கிழமை மாலையில் அவர்கள் போகும்போது எங்களுக்கு இனிப்புகள் கொடுத்து, பிரியாவிடைபெற்றுச் செல்வார்கள். இது 50 - 60 காலகட்டங்களில் நடந்தது.
அந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்தான் 70களில் இன்றைக்கு பேரவைத்தலைவராக உள்ள ராதாபுரம் மு.அப்பாவு படித்தார் என்பது என் நினைவு. அன்றைக்கு நான் மாணவர் காங்கிரசில் இருந்தேன். அவர் எஸ்கேடிஆர் கூட இருந்தார்.
கோயில் திருவிழாக்களில் விடலைப் பருவத்தினர், தங்கள் வயதையுடைய இளம் பெண்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சுற்றி சுற்றி வருவார்கள். கண்களாலேயே பேசிக் கொள்வார்கள். சாமி கும்பிடுவதை விட, இதுதான் பிரதானமாக இருக்கும்.
‘இந்து நேசன்’ என்ற பத்திரிகை அப்போது பிரபலம். அதேபோல் ‘வாழு, வாழ’ மற்றும் இங்கே கூற விரும்பாத சில புத்தகங்களையும் விடலைப் பருவ மாணவர்கள் மறைந்திருந்து படிப்பதுண்டு.
ஒருமுறை என்னோடு படித்த ஒரு மாணவர், தனக்கு பிடித்த மாணவி பைக்குள் ‘அந்த’ புத்தகத்தை வைத்துவிட்டார். அந்த மாணவி, தனது வீட்டாரிடம் இதுபற்றி சொல்ல, மறுநாள் பெரிய களேபரம் ஆகிவிட்டது. இன்றைக்கு அவர் ராணுவத்தில் பெரிய அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். அந்த மாணவி, சமீபத்தில் தன்னுடைய பேத்திக்கு திருமணம் நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அந்த அதிகாரியும் வந்தார். நானும் போயிருந்தேன். ‘இவர் யாருன்னு தெரியுதா?’ என்று அந்த பெண்மணியிடம் கேட்டேன். நாணத்துடன் முறைத்தார். கடந்த கால நிகழ்வுகளை இன்றைக்கு நினைத்தாலும், மனதுக்குள் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது.
கிராமங்களில் விடுகதைகள், சொலவடைகளில் பாலியல் சொல்லாடல்கள் புதைந்து இருக்கும். அவற்றை தொகுத்து, ‘மறைவாகச் சொன்ன பாலியல் கதைகள்’ என்ற நூலை கி.ரா. வெளியிட்டுள்ளார்.
குற்றாலக் குறவஞ்சியிலும், முக்கூடல் பள்ளுவிலும், எட்டையபுரம் பள்ளுவிலும், இந்த வகையான சொல்லாடல்கள் ஆங்காங்கு உள்ளன. இந்த சொல்லாடல்கள் - சொலவடைகள் ஆயிரக்கணக்கில் உண்டு. என் கவனத்தில் வந்த சிலவற்றை கீழே தருகிறேன்...
* ஆக்கங்கெட்ட பொம்பளை சந்தைக்கு வந்தாளாம், அங்கேயும் ஆம்பளைக்குப் பஞ்சமாப் போச்சுதாம்!
* கடல் மீனுக்கு நுழையான் இட்டதே பெயர்.
* கடுங்காத்து மழை கூட்டும்; கடும் நேசம் பகை கூட்டும்.
* கடைந்தெடுத்த மோரிலும் குடைந்து எடுப்பாள் வெண்ணெய்.
* கலையும் மேகத்தைக் கண்டு, கட்டியிருந்த விதையை வட்டிக்கு விட்டானாம்.
* கழுதை உழவுக்கு வந்தால் காடு ஏன் தரிசாய்க் கிடக்கு?
* காஞ்சமாடு கம்புல விழுந்த மாதிரி.
* காணாத கழுதை கஞ்சியைக் கண்டதாம்; ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சுதாம்.
* கார்த்திகை மாசம் கடுமழை பெய்தால், கல்லின் மேலிருக்கும் புல்லும் கதிர் விடும்.
* கார்த்திகை மாதக் கீரையைக் கணவனுக்குக் கூட கொடுக்க மாட்டாள்.
* கிழவி செத்ததுல பாரமில்ல; இழவு கொடுத்து முடியலை.
* கூறுகெட்ட மாடு ஏழுகட்டு வைக்கோல் தின்னதாம்.
* கோவணத்தில் ஒரு துட்டு முடிந்திருந்தால் கோழி கூப்பிட ஒரு பாட்டு வருமாம்!
* தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை.
* தை மாத மழை தவிட்டுக்கும் உதவாது.
* தையில் முளைக்காத புல்லுமில்லை; மாசியில் விளையாத மரமுமில்லை.
* தோட்டக்காரனும், களவாணியும் சேர்ந்து கொண்டால் விடிய விடிய களவாங்கலாம்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பொண்ணுக்கு ஒரு வார்த்தை.
* நல்ல மாடுண்ணாத்தான் உள்ளூருலயே விலை போகுமே.
* பூனை வசிக்கிற வீட்டுலதான் எலி பேரன் பேத்தி எடுக்குமாம்.
* முன்னத்தேர் கோணினால் பின்னத்தேர் என்ன செய்யும்?
* மேனி மினுக்கியைக் கட்டினவனும் கெட்டான்; மேட்டு நஞ்சையை உழுதவனும் கெட்டான்.
* வஞ்சகமில்லாத மகராசனுக்கு வறுத்த காணமும் முளைக்கும்.
* வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட தச்சுதாம்.
கிராமப்புறங்களில் பழங்காலந்தொட்டே இயற்கை வழிபாடு மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. இதுகுறித்து தொல்காப்பியத்தில்,
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
என முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் குறித்து கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் அனுமதிக்கப்படாத ஒளவையார் வழிபாடு
ஆதிகால மனிதனின் வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. இயற்கை சீற்றங்களான இடி, மின்னல், மழை போன்றவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனவே இயற்கை வழிபாட்டை மனிதன் மேற்கொண்டான்.
ஆவி உலகம் பற்றிய நம்பிக்கையால் ஆவிகளுடைய கோபம் தம்மேல் படக் கூடாது என்பதற்காக ஆவி உலக வழிபாடும் கிராமப்புறத்தில் நடந்தது. வீட்டு தெய்வ வழிபாடு என்பது வீட்டில் வைத்து இறைவனை வழிபாடு செய்வது. முன்னோர் வழிபாடும் இதில் அடங்கும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் வைத்து குலதெய்வத்துக்குப் பூஜை செய்வார்கள். சிவராத்திரி அன்றும் குலதெய்வத்தை பூஜிப்பார்கள்.
இதுதவிர ஊர் தெய்வ வழிபாடு என்று மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் என ஊர் பொதுக் கோயில்களிலும் பூஜைகள், விழாக்கள் நடைபெறும்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒளவையார் நோன்பும் முக்கியமானது. இந்த வழிபாட்டு முறை பொதுவாக ஆடி, தை, மாசி மாதங்களில், தொடர்ந்து ஏதேனும் மூன்று செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும். இந்த வழிபாட்டைக் குறிக்கும் வகையில் “அசந்தா ஆடியிலும் தப்புனா தையிலும் மறந்தா மாசியிலும்” என்ற சொல்லாடலும் கிராம மக்களிடத்தில் வழக்கத்தில் இருந்தது.
ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று மக்கள் நம்பினார்கள். இந்த வழக்கம் இன்றும் இருக்கிறது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோயிலில் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இரவு நேரத்தில் யாராவது ஒரு சுமங்கலிப் பெண் வீட்டில் ஒளவையார் வழிபாடு நடைபெறும். அந்த வீட்டில் ஆண் இருந்தால் அன்று இரவு அவரை வெளியேற்றி விடுவார்கள். பெண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். சிறுவர்களை கூட அனுமதிப்பதில்லை.
பச்சை அரிசியை கழுவி உலர வைத்து அதை உரலில் இடித்து, உப்பு சேர்க்காமல் பிசைந்து கொழுக்கட்டை செய்வார்கள். இதற்கு ‘ஒளவையார் கொழுக்கட்டை’ என்று பெயர். முழு தேங்காய், தீபம் போட நல்லெண்ணெய் வைத்திருப்பார்கள்.
இளம் பெண்கள் முதல் வயதான சுமங்கலிகள் வரை அப் பகுதியில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்று கூடி கொழுக்கட்டையில் விளக்கு செய்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். சாமி கும்பிடும்போது மூத்த சுமங்கலி பெண் ஔவையார், பிள்ளையார் கதைகளைக் கூறுவார். பூஜை முடிந்த பின்னர் தேங்காய் துண்டுகளைக் கடித்துக் கொண்டு கொழுக்கட்டையை சாப்பிடுவார்கள்.
இந்தக் கொழுக்கட்டைப் பிரசாதத்தை ஆண்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஆண்கள் கண்ணில் பட்டால் அவர்களின் பார்வை பறிபோய்விடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவியது. சில வீடுகளில் சிறுவர்களின் தொல்லை தாங்காமல், ஆண் குழந்தைகளுக்கு, இந்தக் கொழுக்கட்டையை உண்ணத் தருவதுமுண்டு.
செங்கோட்டை ஆவுடை அக்காள்
பாரதியார் கவிதை எழுதுவதற்கு ஆர்வத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தவர் ஆவுடை அக்காள் என்பவராவார். இவரது பாடல்கள் பாரதியாரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவரை கவிதை எழுதத் தூண்டியது என ஆய்வாளர்கள் கூறுவர்.
ஆவுடை அக்காள் என்பவர் 16-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த பெண் தமிழ்க் கவிஞர். ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் செங்கோட்டையில் வாழ்ந்து வந்தார். பிராமண குலத்தைச் சார்ந்தவர். இளம்வயதிலேயே விதவையாகி விட்டார். இதனால் அவரது சமூகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் மீது விதித்தது.
இந்நிலையில் செங்கோட்டைக்கு ஒரு மகான் வந்தார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் நின்றார். வீட்டில் உள்ளோர் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஒரு வீட்டு வாசலுக்கு வரும்போது யாரும் வெளியே வரவில்லை. ஒரு பெண்ணின் அழுகுரல் மட்டும் கேட்டது.
‘யாரம்மா நீ...? ஏன் அழுகிறாய்?’ என மகான் கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், “சுவாமி...! நான் ஒரு இளம் விதவை. உங்களைப் பார்த்து ஆசி பெறவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் உங்களைப் பார்க்க அனுமதிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று குமுறினாள்.
உடனே மகான், ‘‘அம்மா... தாயீ! வெளியே வாம்மா...” என அழைக்க, அவர் வெளியே வந்து மகானை தரிசித்தார். அதன் பின் அவர் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டன.
நாளடைவில், அவர் செங்கோட்டைக்கு மேற்கே தென்மலைக்குச் சென்று அந்த மலையிலேயே தங்கி விடுகிறார். ஆயிரம் பாக்களுக்கு மேல் இயற்றி பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாரதிக்கு கவிதைகள் மீது ஏற்பட்ட மோகமும், கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. இவருடைய பாக்களால்தான்!
ஆவுடை அக்காள் பாடல்களை பலர் ஆய்வு செய்துள்ளனர். ஆங்கிலத்தில் வந்த ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் கூட இவரைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் இவரைப்பற்றி அதிகமாக யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லையோ, அல்லது தவிர்க்கப்பட்டதோ என்பது தெரியவில்லை.
சங்கரன்கோவில், தென்காசி, குற்றாலம், தென்மலை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் பெண்கள் சிலர் ஒரு குழுவாக இருந்து, ஆவுடை அக்காள் பாடல்களைப் பாடி அவரை இன்றைக்கும் தொழுது வருகின்றனர்.
கண்ணகி கோயில் வழிபாடும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், அதையொட்டிய நெல்லை மாவட்டத்திலும் உண்டு. இலங்கையிலும் கேரளத்திலும் வழிபடுகிறார்கள். அதேபோல், தென் மாவட்டங்களில் சாஸ்தா வழிபாடும் பிரசித்தி பெற்றது.
பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி 18-ம் பெருக்கு, வரலட்சுமி விரதம், மதுரை வட்டாரத்தில் பிட்டுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் ஊரார் திரண்டு வழிபாடு செய்வது வழக்கமாக இருந்தது.
கிராமங்களில் தெருக்கூத்துகள் பரவலாக நடத்தப்படும். அந்தக் கூத்துகளில் காலம் காலமாக மக்களிடையே நிலவிய நம்பிக்கையின் அடிப்படையில், மழை வேண்டி விராடபுராணம் கதையை சொல்வது, திருமணம் நடைபெற வேண்டும் என்று மீனாட்சி கல்யாணத்தைச் சொல்வது, குழந்தைப் பேறுக்காக சத்தியவான் சாவித்திரி கதையைக் கூறுவதும் உண்டு. இதுதவிர, இதிகாசங்களான ராமாயணம், மகாபாரத புராணங்களை ஒட்டியும் கூத்துகள் நடத்தப்படும்.
தெருக்கூத்துகளில் கட்டியங்காரன், கோமாளி, தொப்பக் கூத்தாடி என்று பல வகையான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.
பாவைக் கூத்து என்று ஒருவகை கூத்தும் உண்டு. திரைக்குப் பின்னால் விளக்கொளியில் கயிற்றால் பிணைக்கப்பட்ட பொம்மைகளை இயக்குவார்கள். அது திரையில் பிரதிபலிக்கும். வசனங்களுக்கு ஏற்ப அந்த பொம்மையை ஒருவரோ இருவரோ இயக்குவார்கள்.
இதேபோல், தோல்பாவைக் கூத்து, மரப்பாவை கூத்து என்று பல வகைகள் உண்டு.
கிராமங்களில் குறிப்பாக தென்மாவட்டங்களில் வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. மதுரைக்கு தெற்கே கன்னியாகுமரி வரை கோயில் திருவிழாக்களில் வில்லுப்பாட்டு தவறாமல் இடம்பெறும். பிச்சைக்குட்டி போன்ற பலர் இதில் பிரபலமாக விளங்கினார்கள். பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் பிச்சைக்குட்டி. இருந்தபோதும் இந்துமத மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து, புராண, இதிகாச கதைகளை வில்லுப்பாட்டில் விளக்குவார்.
வில்லுப்பாட்டில் இடம்பெறும் கதைகள் குறிப்பாக கருப்பசாமி, சுடலை மாடன், மாசானமுத்து கதை, அரிச்சந்திரன் கதை, சேர்வைக்காரன் கதை, நல்ல தங்காள் கதை என்று அந்தந்த வட்டாரத்துக்கு ஏற்ப இருக்கும். கனியான் ஆட்டம் என்று ஒரு ஆட்டம் உண்டு. இதுவும் கதை தழுவிய நிகழ்ச்சிதான்.
அதேபோல், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், கரடியாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் என்ற பல ஆட்டங்கள் திருவிழாக்காலங்களில் நடத்தப்படுவது உண்டு.
கிராமங்களில் வயதானவர்கள் தங்களது கடைசி காலத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதையே விரும்புவார்கள். படுக்கையில் கிடக்காமல் பாடையில் போவோரை புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவார்கள்.
கிராமங்களில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகளால் அன்றைக்கு 90 வயதைத் தாண்டி 100 வயதுவரை கூட வாழ்ந்தார்கள். என்னுடைய தாயார் இறக்கும்போது வயது 99. அவர் கிட்டத்தட்ட 88 வயது வரை கூட எங்களுடைய வயல்வெளி, காடுகளுக்கு தினமும் ஒருமுறையாவது சென்று வருவார். அந்தளவுக்கு அவர் திடகாத்திரமாக இருந்தார். தலையில் ஒரு ரோமம் கூட நரைக்கவில்லை.
இறந்தவர்களை, ‘திருவீடு’ சென்று விட்டார்கள் என்று சொல்வார்கள். வைணவர்கள் ‘வைகுண்டம்’ சென்று விட்டார் என்றும், சைவர்கள் ‘சிவபூமி’க்கு சென்று விட்டார்கள் என்றும் கூறுவார்கள்.
‘நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்’ என்ற இந்தத் தொடரில் என்னுடைய வாழ்க்கைப் பதிவுகள், அரசியல் பதிவுகள் குறித்து மட்டும் எழுதாமல், அன்றைய கிராமப்புற நாட்டாரியல், என்னுடைய சிறு பிராய காலத்தில் நான் பார்த்தவை, கேட்டவை, அறிந்தவை என அனைத்தையும் உங்களோடு விரிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மறந்து போன விஷயங்களையெல்லாம் நினைவுபடுத்தி சிறு சிறு குறிப்புகளாக எழுதி வருகிறேன். இவற்றையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில் எத்தனையோ கிராம பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் இன்றைக்கு அடியோடு மறைந்து விட்டன. இவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்துவது நம் கடமை.
இன்னும் ஒருசில அத்தியாயங்களுக்குப் பிறகு அரசியல் உலகத்துக்குள் நுழைவோம்...
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம் > கிராமத்து பழக்க வழக்கங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 13
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT