Published : 19 Apr 2025 10:08 AM
Last Updated : 19 Apr 2025 10:08 AM
அன்றைக்கெல்லாம் பல வீடுகளில் சித்த மருத்துவ நூலான ‘பதார்த்த குண சிந்தாமணி’ நூல் இருக்கும். 19-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அந்த நூலில் சித்த மருத்துவக் குறிப்புகள், ஆரோக்கிய உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும். அதைப் படித்து, சிறுசிறு உடல்நலக் குறைவுகளுக்கு தாங்களே மருத்துவம் பார்த்துக் கொள்வார்கள்.
அந்தக் கால செய்தித்தாள்களில் ‘மதன் மித்ரா’ என்ற பெயரில் ஒரு விளம்பரம் வரும். அது ஆண்மைக் குறைவை நீக்குவதற்கான லேகியம். திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சிலர், சென்னை விலாசத்துக்கு பணம் அனுப்பி அந்த லேகியத்தை வாங்கியதை நான் கண்டதுண்டு.
அப்போதெல்லாம், பிள்ளைவாள் ஓட்டல், பிராமணாள் ஓட்டல், ராயர்ஜி ஓட்டல், மிலிட்டரி அசைவ ஓட்டல், நாடார் ஓட்டல், மதுரையில் கோனார் மெஸ், நாகர்கோவில் பிள்ளைமார் மண்பானை சைவ ஓட்டல், போத்தி ஓட்டல் என்று சாதிப் பெயர்களோடு ஓட்டல்கள், உணவு விடுதிகள் இருந்தன. ஒவ்வொரு ஓட்டலிலும் ஒவ்வொரு வகை உணவு பிரமாதமாக இருக்கும்.
கிராமங்களில் வீடு கட்ட ஆற்று மணலை தெருக்களில் குவித்து வைத்திருப்பார்கள். அதில் நண்பர்களோடு ஏறி விளையாடியதும், மணல் வீடு கட்டி மகிழ்ந்ததும் இன்றும் நினைவில் உள்ளது.
அப்போதெல்லாம் பல் துலக்க கோபால் பற்பொடி பிரபலமாக இருந்தது. அதேபோல், பயோரியா பற்பொடி, தமிழ்வாணன் கல்கண்டு பற்பொடியும் பழக்கத்தில் இருந்தன. பலர் அரிசி உமியை கரியாக்கிய சாம்பல், வேப்பங்குச்சி, கருவேலமரக் குச்சிகளைக் கொண்டும் பல் துலக்குவார்கள்.
மழைக்காலங்களில் கால்களில் சேற்றுப்புண் வந்து விடும். அந்த சமயங்களில் சைபால்தான் கைகண்ட மருந்து. பெரும்பாலான வீடுகளில் பல்லாங்குழி இருக்கும். அதில் சோழிகள், புளியம்முத்து, குன்னிமுத்துகளைக் கொண்டு விளையாடுவார்கள். பெண் வயதுக்கு வந்துவிட்டால், பச்சை ஓலைகளால் குச்சில் கட்டியோ அல்லது தனி அறையிலோ அவளை அமர வைத்து விடுவார்கள். அப்போது அப்பெண்ணுக்கு பொழுதுபோவதற்காக சிறுவர்களோடு சேர்ந்து பல்லாங்குழி விளையாடுவார்கள். அதேபோல் கூழாங்கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடும் சொட்டாங்கல் விளையாட்டும் விளையாடுவதுண்டு.
பள்ளிக்கூட ‘வில்லன்’ மாணவன்
சிறு வயதில் சில பிள்ளைகள் யாருக்கும் அடங்காமல் இருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்த்தால்தான் அவன் அடங்குவான் என்பதற்காகவே அவர்களை பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்களும் உண்டு.
பள்ளிகளில் ஒருசில மாணவர்கள் தனித்துவமாகத் தெரிவார்கள். அவர்களைப் பார்த்து மற்ற மாணவர்கள் பயப்படுவார்கள். நான் படிக்கும்போது என் வகுப்பில் ‘மம்பட்டி ராமசுப்பு’ என்ற மாணவன் இருந்தான். அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களுக்குப் பயம் தொற்றிக் கொள்ளும். மாணவர்களின் புத்தகங்களை கிழித்து விடுவது, பென்சிலால் கிறுக்கி விடுவது என்பது போன்ற போக்கிரித்தனங்களை அவன் செய்வான்.
சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். ஏனென்றால் பள்ளிகளில் ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்கள். அது பல வண்ணங்களில் இருக்கும். அதேபோல் பொது இடங்களிலும் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்கள். அதை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.
அந்தக் காலத்தில் கல்யாண வீடுகளில் பெரும்பாலும் இட்லி, சாம்பார், சட்னிதான் இருக்கும். இல்லையென்றால் ரவை உப்புமா, தொட்டுக்கொள்ள சீனி மற்றும் காபி கொடுப்பார்கள். பொங்கல், வடை எல்லாம் இடம்பெறாது.
மத்தியானம் விருந்தில் அவியல், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர், அப்பளம், பாயாசம் என பல வகைகள் இருக்கும். இலை போட்டதும் முதலில் உப்பு, முருக்கு வத்தல் வைப்பார்கள். இந்த விருந்தோடு கல்யாண வீட்டு சாப்பாடு முடிந்துவிடும்.
திருமணம் முடிந்து மாப்பிள்ளை, மாமனார் வீட்டுக்குச் செல்லும்போது வழியில் கோயிலில் விடலை போட்டுச் செல்வார்கள். முதலிரவுக்கு முன், மணமகன் மற்றும் மணமகள் வீடுகளுக்கு மணமக்கள் இரண்டுமுறை சென்று வருவார்கள். இது அந்தக் காலத்தில் வாடிக்கையாக இருந்தது. முதலிரவு பெரும்பாலும் மணமகனுடைய வீட்டில்தான் இருக்கும்.
இப்போதெல்லாம் தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அன்றைக்கு மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பகல் 12 மணிக்குள் தொழுவத்தில் கட்டி விடுவார்கள். அல்லது மாலை 4 மணி முதல் 5 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவார்கள்.
சில கிராமங்களில் மாடு மேய்ப்பதற்காகவே சிலர் இருந்தனர். அவர்களிடம் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். தெருக்களை அடைத்தபடி மாடுகளை கூட்டமாக அழைத்துச் செல்வார். குளம், வெட்ட வெளிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார். மாலையிலும் அதேபோல் கூட்டமாக அழைத்துவந்து அவரவர் வீடுகளில் மாடுகளை விட்டு விடுவார். இதற்கு கூலியாக பாலோ, தானியங்களோ அவர் பெற்றுக் கொள்வார்.
மாடுகள் கன்று ஈன்ற பின், சீம்பால் சுரக்கும். எனக்கு அது பிடிக்காது. சிலர் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சீம்பாலுடன் வெல்லம் சேர்த்து காய்ச்சும்போது கட்டிகட்டியாக வரும். அதை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கொடுப்பார்கள். கி.ரா.வுக்கும் ஈழப் போராளி பிரபாகரனுக்கும் இது ரொம்பவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கிராமத்துக்கு பிரபாகரன் வந்தபோது, எங்கள் வீட்டில் பசு மாடு கன்று ஈன்றது. அப்போது சீம்பாலை அவர் விரும்பிச் சாப்பிட்டார்.
கள்ளுக் கடைகள்
அப்போதெல்லாம், எங்கள் ஊர் பக்கத்தில் கோவில்பட்டி, சிவகாசி, சங்கரன்கோவில், ராஜபாளையத்தில் பொருட்காட்சி நடக்கும். பெரும்பாலும் தை, சித்திரை, பங்குனி மாதங்களில் நடைபெறும். பொருட்காட்சியில் சென்னையில் இருந்து வந்த நடிகர்கள் நாடகங்களை நடத்துவார்கள். இரவு நேரத்தில் பொருட்காட்சி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுழலும் ஒளி கிட்டத்தட்ட 10 மைல் தொலைவுக்கு வானில் வட்டமடிக்கும். சிறுவர்களோடு சேர்ந்து வேடிக்கை பார்ப்பதுண்டு. இதெல்லாம் 1960களில் நடந்தவை.
நாட்டு வைத்தியம், சித்த வைத்தியத்துக்கு மாற்றாக அலோபதி மருத்துவம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அன்றைய மக்கள் அலோபதியை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் தமிழகத்தில் சித்த வைத்தியம், நாட்டு வைத்தியத்துக்கு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.
கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதனீர், கள் இறக்குவார்கள். முடையப்பட்ட பனை ஓலையில் பதனீர் குடிக்கும்போது மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். அதனுடன் நுங்கும் வெட்டி போடுவார்கள்.
கள்ளைப் பொருத்தவரை அன்றன்றைக்கு இறக்கப்படும் கள்ளில் அவ்வளவாக போதை இருக்காது. குழந்தைப் பேறு காலத்தில் வலி ஏற்படும்போது தாய்மார்களுக்கு பனங்கள் கொடுப்பது கிராமங்களில் வழக்கமாக இருந்தது.
அண்ணா முதல்வராக இருந்தவரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா மறைவுக்குப்பின் கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. ஊர் ஒதுக்குப்புறங்களில், குளம், ஆற்று ஓரங்களில் கள்ளுக் கடைகள் இருக்கும். ஆங்காங்கே அமர்ந்துகொண்டு, ஊறுகாய், காரச்சேவு, பக்கோடாவை வைத்துக் கொண்டு கள் குடித்துக் கொண்டிருப்பார்கள்.
அதற்கு முன் கேரளாவில் தயாரித்துக் கொண்டுவரப்படும் ஒரு திரவத்தை இங்கு மறைவாக விற்பார்கள். ப்ரவுன் கலரில் அது இருக்கும். சற்று போதையும் இருக்கும். எங்கள் ஊரில் சுண்டைக்காய் சீனிவாசன் என்பவர் பெட்டிக்கடையில் மறைத்து வைத்து அதை விற்பார். அதை வாங்குவதற்கென்று ஒரு கூட்டம் வரும். பெட்டிக் கடைக்குப் பின்னால் நின்று குடித்துவிட்டு, துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டு தலைகவிழ்ந்தபடி செல்வார்கள். பின்னர், ஊர் ஒதுக்குப்புறத்தில் உள்ள வேப்ப மரம், ஆலமரத்தின் நிழலில் போய் படுத்து விடுவார்கள்.
அதேபோல், ராணுவத்தில் இருந்து வருபவர்கள் ரம் பாட்டில் கொண்டு வருவார்கள். அந்தப் பாட்டிலை வாங்குவதற்கு ஒரு கூட்டம் அவருடன் சுற்றிக்கொண்டே இருக்கும்.
நான் கல்லூரியில் படிக்கும்போது விடுமுறையில் ஊருக்குச் செல்லும் சமயங்களில் ‘குனேகா சென்ட்’ வாங்கிச் செல்வேன். அதை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நான் வாங்கிச் செல்வதோ ஒன்றிரண்டுதான். சென்ட் பாட்டில் கிடைக்காதவர்கள் என்னிடம் கோபித்துக் கொண்டதும் உண்டு.
அன்றைய காலத்தில் மல்யுத்தத்தில் தாராசிங், கிங்காங் ஆகியோர் பிரபலமாக இருந்தனர். இவர்களில் யார் பெரியவர்? என்று கிராமங்களில் பெரிய விவாதமே நடக்கும்.
ஒருமுறை தாராசிங் திருநெல்வேலி போகும் வழியில், கோவில்பட்டியில் மதிய உணவுக்காக இறங்கினார். அப்போது எதேச்சையாக அவரை நான் பார்த்தேன். ஆஜானுபாகுவான உடம்பு. பார்த்து பிரமித்துப் போனேன்.
கிராமங்களில் திருவிழாக் காலங்களில் கலைக்கூத்தாடிகள் வித்தை காட்டுவார்கள். அதேபோல் சர்க்கஸ், தீ விளையாட்டுகள், சங்கிலி அல்லது கயிற்றில் பிணைக்கப்பட்ட வலுவான குண்டுகளை பல்லால் கடித்து தூக்குவது என பல சாகசங்களை நிகழ்த்துவார்கள்.
இன்றைய கிராமங்கள் 60 - 80களில் இருந்ததைப்போல் இல்லை. அன்றைக்கு வாழ்ந்த மக்கள் வெள்ளந்தியான குணத்துடனும், மனிதாபிமானத்துடன் இருந்தனர். ஆனால் இன்றைக்கு நகரத்தைப் போல் போட்டி, பொறாமை குணங்கள் மேலோங்கி விட்டன.
கிராமங்களில் பொதுவாக அவரை, வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலை, முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி, என சகலமும் கிடைக்கும். கிடைக்காத ஒன்று கிழங்கு வகைகள் மட்டுமே. அனைத்து காய்கறிகளையும் தோட்டத்திலேயே விளைவித்து விடுவார்கள்.
எங்கள் பகுதியில் ஒரு பெரியவர் ‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ என்று கூவிக் கொண்டே சைக்கிளில் இரும்புப் பெட்டியுடன் நான்கு மாதத்துக்கு ஒருமுறை வருவார். அவரது பெயர் காசிமணி நாடார். பெட்டியில், பவுடர், சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரிப்பன், ரெமி பவுடர், பான்ட்ஸ் பவுடர், மைசூர் சாண்டல், லக்ஸ் சோப்பு, கண்ணாடி வளையல்கள் இருக்கும். பெரும்பாலும் பெண்களே அவரது வாடிக்கையாளர்கள். ஏதாவது ஒரு வீட்டின் முற்றத்தில் பெட்டியை இறக்கி வைத்து விடுவார். அவரைச் சுற்றி பெண்களும், சிறுமிகளும் கூடி விடுவார்கள்.
ஜாதி மல்லி, பிச்சிப் பூ போல் தாழம்பூவும் நல்ல மணமுடன் இருக்கும். கிராமங்களில் முக்கியமாக இரும்புப் பெட்டிக்குள் தாழம்பூவை வைப்பார்கள். நீர்நிலைகளின் கரைகளில் புதர் போல் இவை செழித்து வளரும். இந்த தாவரத்தின் உச்சியில் தாழம்பூ இருக்கும். ஜடை பின்னும்போது தாழம்பூவையும் சேர்த்து பின்னுவது வழக்கம்.
எங்கள் பக்கத்து ஊரான காசிலிங்கபுரத்தில் குயவர் வீடுகள் அதிகம் இருந்தன. களி மண்ணிலும், செம்மண்ணிலும், குடங்கள், மூடும் தட்டுகள், பானைகள், சட்டிகள் செய்வார்கள். பொங்கல் நேரத்தில், எங்கள் வீட்டில் புதுப் பானையை கொடுத்து விட்டு பணம், எலுமிச்சம்பழம் பெற்றுச் செல்வது உண்டு.
ஜவ்வு மிட்டாய்
அந்தக் காலங்களில் சிறுசிறு வியாபாரிகள் தெருக்களில் கூவிகூவி பொருட்களை விற்பனை செய்வார்கள். சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்துக்கொண்டு பால் ஐஸ், சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் என குச்சி ஐஸ்களை ‘ஏர்ஹார்ன்’ அடித்தபடி விற்பார்கள்.
அதேபோல், ஜவ்வு மிட்டாய் வியாபாரி பெரிய மூங்கில் தடியை தோளில் சுமந்தபடி வருவார். அந்தத் தடியில் வெள்ளை அல்லது இரு வண்ணங்களில் ஜவ்வு மிட்டாய் சுற்றப்பட்டிருக்கும். அதன் உச்சியில் ஒரு பொம்மை இருக்கும். அதனுடன் பிணைக்கப்பட்ட கயிறு மூங்கில் ஓட்டை வழியாக கீழே இறங்கும். அந்த முனையை காலால் இழுத்தால் பொம்மை இரு கைகளையும் தட்டி தலையை ஆட்டும். ‘ஜல் ஜல்’ என்று சத்தமும் வரும். இதை சிறுவர்கள் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள். ஜவ்வு மிட்டாயை வாட்ச், மோதிரம், செயின் என செய்து சிறுவர்களின் கையில் ஒட்டி விடுவார். அதை அணிந்தவுடன் சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி வெளிப்படும்.
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பள்ளிக் குழந்தைகளுக்காகவே சிறு சிறு கடைகள் திறக்கப்பட்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தேவையான இனிப்பு மிட்டாய்கள், விளையாட்டுப் பொருட்களை விற்பார்கள். அதேபோல், வயதானவர்கள் பள்ளி நுழைவாயில் அருகே கடை விரித்து, கொடுக்காப்புளி, புளியம்பழம், நாவல்பழம், இலந்தை பழம், மாம்பழம் விற்பதும் உண்டு.
கிராமங்களில் அன்றைக்கெல்லாம் டி.வி. கிடையாது. ஒருசில வீடுகளில் ரேடியோ இருக்கும். இலங்கை வானொலியில் நாள் முழுவதும் பாடல்கள் ஒலிக்கும். திருநெல்வேலி, திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். வசதி படைத்தவர் வீடுகளில் கிராமபோன்கள் இருந்தன.
சக்திவாய்ந்த ஊடகமான சினிமாத் துறை, மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. சினிமா உலகம் சொர்க்க பூமி; நடிகர்கள் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் என்ற பிரமிப்பு கிராம மக்களிடையே இருந்து வந்தது. நடிகர், நடிகைகளை ஆத்மார்த்தமாக நேசித்தும் வந்தார்கள்.
திரைப்படப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் இருக்கும். அதில் நுண்ணிய ‘ட்ராக்’குகளில் இசை பதியப்பட்டிருக்கும். பெரும்பாலான இசைத்தட்டுகள் (ரிக்கார்டுகள்) எச்எம்வி நிறுவனத்தின் வெளியீடாகவே இருந்தன. நாய் ஒன்று ஒலிபெருக்கி முன் அமர்ந்திருப்பது போன்ற படம் இசைத்தட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும்.
கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டுவார்கள். ‘ரிக்கார்டு பிளேயர்’ என்று சொல்லக்கூடிய ஒரு பெட்டியை கொண்டு வருவார்கள். அதில் வட்ட வடிவில் சுற்றும் தட்டையான பகுதியும், அருகில் ஊசி பொருத்தப்பட்ட சிறு கருவி இருக்கும். அந்த தட்டையான பகுதியில் இசைத்தட்டுகளை வைத்து சுழல விடுவார்கள். பின்னர் ஊசி பொருத்தப்பட்ட கருவியை அந்த இசைத்தட்டு மீது வைத்தவுடன் பாடல் ஒலிக்கும்.
இந்த ஒலிபெருக்கிகள் வைத்திருப்பவர்களை ‘ரேடியோக்காரர்’ என்று கிராமங்களில் அழைப்பார்கள். இரண்டு மூன்று ஊர்களுக்கு ஒருவர் இருப்பார். அவர் சைக்கிளில் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்தவுடனேயே, சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள்.
சில சமயங்களில் தேய்ந்து போன அல்லது கீறல் விழுந்த இசைத்தட்டுகளில் முள் அடுத்த ‘ட்ராக்’குக்கு நகராமல், ஒரே பாடல் வரியையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கும். அப்போது ரேடியோக்காரர் அந்த முள்ளை லேசாக தட்டி விடுவார். பின்னர் சரியாகப் பாடும். அதேபோல் இசைத்தட்டு சுழலும் வேகம் குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலோ படல் அழுவது போன்றோ, அல்லது ‘கீச்கீச்’ என்றோ மாறிவிடும். உடனே அதை அவர் சரி பண்ணுவார்.
ஒலிபெருக்கிகளை கட்டி, மின் இணைப்பு கொடுத்து பாடல் ஒலிக்கும் வரை அவர் பின்னாலேயே சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முதல் பாடல் நாதஸ்வரத்துடனோ அல்லது ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்ற பாடலோடோ ஆரம்பிக்கும். இரவு 12 மணி வரை பாடல்கள், ஒலிச்சித்திரங்களை ஒலிபரப்புவார்கள்.
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன் போன்ற படங்களின் ஒலிச்சித்திரங்களை சிறுவயதில் பலமுறை கேட்டுள்ளேன். இரவு நேரங்களில் சாப்பாடு முடிந்து, வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு ஒலிச்சித்திரங்களை மக்கள் ரசித்துக் கேட்பார்கள். இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பகுதியே கலகலப்பாக இருக்கும்.
நாட்டாமை தீர்ப்பு
கிராமங்களில் பெரும்பாலும் பங்காளிச் சண்டை, புருஷன் பொண்டாட்டி சண்டை, மாட்டை அடுத்தவர் தோட்டத்தில் மேய விட்டது, வைக்கோல் படப்புகளில் தீ வைத்தல், மோட்டார் பம்புகளை உடைத்தல் போன்ற தாவாக்களே ஊர் கூட்டத்துக்கு வரும். இதுகுறித்த விசாரணை இரவு 7 - 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை கூட நீடிக்கும். இறுதியில் அபராதம் விதித்தோ, தண்டனை விதித்தோ அல்லது ஊரை விட்டு சில காலம் ஒதுக்கி வைத்தோ ஊர் நாட்டாமை தீர்ப்பு சொல்வார். அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிரச்சினைகளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல மாட்டார்கள். தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வார்கள்.
பள்ளிப் பருவத்தில் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். 6 - 7-ம் வகுப்புக்கு வந்தவுடன் மாணவிகளைக் கண்டால் மாணவர்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படும். பெரும்பாலும் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவிகள் வயதுக்கு வந்துவிடுவார்கள். அந்த மாணவிக்கு பெற்றோர் தாவணியைச் சுற்றி பள்ளிக்கு அனுப்புவார்கள். அதற்குப் பிறகு மாணவர்களுடன் பழகுவதை மாணவிகள் தவிர்த்து விடுவார்கள்.
மாணவர்களிடையே ‘அது என் ஆளு; இது உன் ஆளு’ என்ற போட்டியும், பொறாமையும் கூட ஏற்படுவதுண்டு. ‘நாளைக்கு உன் ஆள் மஞ்சள் கலர் டிரஸ்ஸில் வருவாள்; என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்ஸில் வருவாள் என்று அவர்களுக்குள் பந்தயம் கட்டுவார்கள். மறுநாள் எந்தக் கலரில் வருவாள் என்று இரவெல்லாம் அதைப்பற்றியே சிந்தனையே இருக்கும்.
உயர் நிலைப்பள்ளி வரை இந்த விளையாட்டுகள் தொடரும். சில சமயங்களில் தனக்குப் பிடித்த மாணவியின் மதிய உணவை, அவளுக்குத் தெரியாமல் திருடி சாப்பிடுவதெல்லாம் உண்டு. இவையெல்லாம் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஒருவித இனம்புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
(தொடர்வோம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT