Published : 16 Apr 2025 06:30 AM
Last Updated : 16 Apr 2025 06:30 AM
இந்தியாவில் 2020 - 2022 காலக்கட்டத்தில் 4,484 சிறை மரணங்கள் (Custodial deaths) நிகழ்ந்துள்ளதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நிகழும் மரணங்கள் லாக் அப் மரணங்கள் அல்லது சிறை மரணங்கள் என அழைக்கப்படுகின்றன.
காவல் துறையினர், கைதுசெய்யப்பட்ட நபர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மனரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறை மரணங்கள் நிகழ்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21, எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ பறிக்கக் கூடாது எனக் கூறுகிறது. இதன்படி, காவல் துறையினால் அத்துமீறி நடத்தப்படும் லாக் அப் மரணங்கள் சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்.
இந்தியாவில்... 2016-17, 2021-22 (பிப்ரவரி 28 வரை) காலக்கட்டத்தில் இந்தியாவில் 11,419 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. லாக் அப் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2,580 பேர், சிறையில் மரணமடைந்துள்ளனர். இப்பட்டியலில் மத்தியப் பிரதேசம் (925 பேர்), மேற்கு வங்கம் (902 பேர்), மகாராஷ்டிரம் (874), பிஹார் (809 பேர்) போன்றவை அடுத்தடுத்து உள்ளன.
வழக்கு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் காவல் நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகளும் பல்வேறு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. 2019இல் மட்டும் காவல் விசாரணையின்போது நான்கு பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலிடம்: லாக் அப் மரணங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே தமிழ்நாட்டில் நீடிக்கிறது. தென்னிந்தியாவில் லாக் அப் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. மக்களவைத் தரவுகளின்படி, 2016-17, 2021-22 (பிப்ரவரி 28 வரை) ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவான லாக் அப் மரணங்களின் எண்ணிக்கை 478. ஆந்திரப் பிரதேசம் (244), கேரளம் (235), தெலங்கானா (128), கர்நாடகம் (58) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
விசாரணைகள் - தண்டனைகள்: இந்தியாவில், 2017-2021க்கு இடையில், காவல் நிலையங்களில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக, 286 நீதித் துறை விசாரணைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில், இம்மரணங்கள் தொடர்பாக 114 போலீஸார் கைது செய்யப்பட்டனர்; இதில் 79 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதில் ஒரு காவலர்கூடக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை. இதே காலக்கட்டத்தில், காவல்நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்துத் தமிழ்நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வழக்குகள் தொடர்பாக எந்த ஒரு காவலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை / தண்டனை விதிக்கப்படவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.
உதாரணத்துக்கு, 2020இல் நடந்த சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் லாக் அப் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸார் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்துவருவது நினைவுகூரத்தக்கது. இந்தியாவில் காவல் துறையினருக்கு எதிராகச் சட்டவிரோதக் கைது, சித்ரவதை, காயம் ஏற்படுத்துதல் தொடர்பாக 2017 - 2021க்கு இடைப்பட்ட காலங்களில் 25 மனித உரிமை மீறல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இக்காலக்கட்டத்தில் இது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக 16 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது; இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், 3 பேர் மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடுகள்: இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 22, சட்டவிரோதமான கைதிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. இதன்படி, காவலில் உள்ள கைதிகளின் பாதுகாப்புக்கு நீதிபதியே பொறுப்பு. ஆனால், நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நீதித் துறையிலிருந்து மக்களுக்குக் கிடைப்பதில்லை. காவல் நிலையத்தில் ஏற்படும் மரணங்கள், துப்பாக்கிச்சூடு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதல், உடல் உறுப்பு பாதிக்கப்படுதல் ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையில், 5 லட்சம் ரூபாயில் இருந்து 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதிசெய்யப்பட்டால் அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதிகாரமின்மை: மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளது, இவ்வழக்குகளில் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. லாக் அப் மரணங்கள் போன்ற காவல் துறையின் கொடூரச் செயல்களுக்கு எதிராக மாநில அரசுகளுக்கு வெறும் பரிந்துரைகளை மட்டுமே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் அளிக்க முடியும். இப்பரிந்துரைகளை மாநில அரசுகள் செயல்படுத்தலாம், செயல்படுத்தாமலும் போகலாம். இத்தகைய சூழலில், லாக் அப் மரணங்கள் போன்ற கடுமையான குற்றச் செயல்களுக்குத் தேவையான கட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாகிறது.
லாக் அப் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், இந்திய நீதித் துறை இயந்திரத்தனமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிக்கப்படாமல் காலதாமதம் ஏற்படுகிறது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலையத்தில், 1999இல் விசாரணைக் கைதி வின்சென்ட் மரணம் அடைந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸாருக்குச் சமீபத்தில்தான் தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
கால தாமதம் கூடாது: லாக் அப் மரணங்கள், நீதித் துறையின் தோல்வி என்பதை உணர்ந்து, காவல் துறையினர் தங்கள் அதிகாரத்தை மீறாமல் இருப்பதை நீதித் துறை கண்காணிக்க வேண்டும்; காவல் நிலையங்களில் மருத்துவச் சேவையை உறுதி செய்வதுடன் லாக் அப் மரணங்கள் - பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் அளிக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம். நீதிமன்ற விசாரணைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை நீதித் துறையும் அரசும் உறுதிசெய்வதுடன், கைதுசெய்யப்படும் நபரின் பாது காப்புக்கும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT