Published : 09 Apr 2025 06:30 AM
Last Updated : 09 Apr 2025 06:30 AM
உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் சுமார் 7 லட்சம் பேர் வரை தற்கொலை செய்துகொள்கின்றனர்; குறிப்பாக, மிகக் குறைந்த – நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகள், தற்போது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளன.
2018 - 2022க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மனநலன் தொடர்பான தற்கொலை 44% அதிகரித்துள்ளது. தற்கொலை செய்துகொள்பவர்களில் இளைஞர்களே அதிகம் எனத் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் மனநல ஆரோக்கியம் சார்ந்த தீவிரக் கேள்விகளை எழுப்புகின்றன.
ஆய்வுகள்: பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை கரோனாவுக்குப் பறிகொடுத்தது, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் காரணமாகஇந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. 2019 உடன் ஒப்பிடும்போது 2020இல் மனநலன் தொடர்பான தற்கொலைகள் 25% அதிகரித்திருந்த நிலையில், 2022இல் இந்த எண்ணிக்கை மேலும் 6% உயர்ந்தது.
2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டால், 2022இல் அதிகபட்சமாக 1.71 லட்சம் தற்கொலைகள் நடந்துள்ளன; அதாவது 1,00,000 பேரில் 12.4 பேர் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் தற்கொலை தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட விகிதங்களில் இதுவே அதிகம்.
2022இல் நடந்த தற்கொலைகளிலும் 35% பேர் 18-30 வயதுடையவர்கள், 32% பேர் 30 முதல் 45 வயதுடையவர்கள். அந்த வகையில், நாட்டில் நடக்கும் 67% தற்கொலைகளில் 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் நிகழ்கின்றது. உலகளவில் சாலை விபத்துகளால்தான் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.
ஆனால், இந்தியாவில் இளைஞர்கள் உயிரிழப்பில் தற்கொலை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 8 நிமிடத்துக்கு ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொள்கிறார். இளைஞர்களிடம் அதிகரித்துவரும் தற்கொலை மனநிலை இந்தியச் சமூகத்துக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களே அதிகளவு தற்கொலை செய்துகொள்கின்றனர்.
மாநிலங்கள் நிலவரம்: 2022 நிலவரப்படி, இந்தியாவில் அதிகமாக சிக்கிம் மாநிலத்தில் தற்கொலை விகிதம் 43.1% ஆகப் பதிவாகியுள்ளது. சிக்கிமைத் தொடர்ந்து அந்தமான் நிகோபார் தீவுகள் (42.8%), புதுவை (29.7%), கேரளம் (28.5%), சத்தீஸ்கர் (28.25%), தெலங்கானா (26.3%), தமிழ்நாடு (25.9%), கர்நாடகம் (20.2%), கோவா (19.2%), மகாராஷ்டிரம் (18.1%) ஆகிய மாநிலங்கள் இப்பட்டியலில் உள்ளன. தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2021 - 2022 ஆண்டுகளில் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணிகளாகக் குடும்பப் பிரச்சினை, மனஅழுத்தம், திருமணம் - வரதட்சிணைப் பிரச்சினைகள், மது - போதைப் பொருள் பழக்கம், கடன் - வேலையின்மை ஆகியவை உள்ளன.
சமீப ஆண்டுகளில் பெண்களின் தற்கொலைக்கு, வேலையின்மை முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது: வேலையில்லாத பெண்களின் தற்கொலை விகிதம் 1,00,000 பேருக்கு 94.8 ஆக உள்ளது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள்: கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள் சார்ந்த தற்கொலை இரண்டு மடங்காகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை 2012இல் 4.91% ஆக இருந்தது. 2022இல் இந்த எண்ணிக்கை 7.63% ஆக உள்ளது. 2022இல் மட்டும் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகம் பதிவாகியுள்ளன.
மாணவர்கள் தற்கொலை அதிகம் நிகழ்கிற, பயிற்சி மையங்களை அதிகம் கொண்டுள்ள கோட்டா என்கிற ஊர் அமைந்துள்ள ராஜஸ்தான் இப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டிபோடும் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதற்கு மாறாக, அவர்களின் தனித்திறன்களை வளர்க்க இந்தியக் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; இதன் மூலம் மாணவர்கள் மீதான அழுத்தம் குறையும் எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டம் என்ன கூறுகிறது? - மனநல சுகாதாரச் சட்டம் - 2017 ஆனது, எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் குடிமக்கள் அனைவருக்கும் மனநலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை அளிப்பதுடன் பாலினம், சாதி, மத பேதம் இல்லாமல் நல்ல தரத்துடன் சிகிச்சை அளிப்பதையும் உறுதிப்படுத்துகிறது. எனினும், மனநல ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டியே, தேசிய மனநலத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய தற்கொலைத் தடுப்பு முயற்சிகள் பரவலாக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்கொலையைத் தூண்டும் சமூக-பொருளாதார அழுத்தங்களைக் களைந்து, தனிநபர்களின் நெருக்கடியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். தற்கொலைத் தடுப்புக்கான உதவி எண்களை அதிகரிப்பதுடன், தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்ட ஒருவரை முன்கூட்டியே அடையாளம் காணும் விழிப்புணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும்.
மேலும், தற்கொலை செய்துகொள்ளப் பயன்படுத்தப்படும் பொருள்கள் எளிமையாகக் கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, தற்கொலை குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் அதற்கான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தற்கொலை எண்ணத்துடன் இருப்பவரை அம்முடிவை நோக்கித் தள்ளும் வகையில் ஊடகங்களின் செய்திகள் இருக்கக்
கூடாது.
உணர்வுகளை வெளிப்படுத்துவது, உறவுகளைக் கையாள்வது, பள்ளி, கல்லூரிக் காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன்கள் போன்றவற்றை இளம்பருவத்தினர் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, குடும்ப – கல்வி அமைப்புகள் தங்களை மாற்றத்துக்கு உள்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மனநலனுக்காக உதவி பெறுவதை இயல்பானதாகப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்தெடுத்து, மனநல ஆதரவு ஒரு சலுகையாக இல்லாமல், அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும்.
தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வதற்குத் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவ உதவி எண் 104, சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT