Published : 06 Apr 2025 08:25 AM
Last Updated : 06 Apr 2025 08:25 AM
‘இந்து தமிழ் திசை’யின் கடந்த ஏப்.3-ம் தேதி நாளிதழின் 2-ம் பக்கத்தில் ‘சாதி ஒழிந்த இடமாக மெட்ரோ இருந்து விட்டுப் போகட்டுமே’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை தொடர்பாக, பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயிலில் பணியாளர்கள் தேர்வில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பொறுப்புக்கு சென்றால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். தமிழர்களுக்கு வேலை கிடைக்காது என்ற அச்சத்தையும் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அதனை சுட்டிக்காட்டி அந்த கருத்து ஏற்புடையது அல்ல என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கூறி உள்ளது.
அத்துடன், கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து கூட்டு நிறுவனமாக தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தனி தொழில் நிறுவனமாக இயங்குவதால் தமிழக அரசு பின்பற்றும் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. சாதி வேறுபாடு இன்றி பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் இந்த கட்டுரை கூறுகிறது.
இட ஒதுக்கீடு இல்லை என்றாலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையை நிர்வகிக்கும் பொறுப்பை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வழங்கும் முடிவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறுகிறது. அப்படி எனில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று நாளிதழ் கூறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிலைப்பாடு அதுவாக இருக்காது என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தை பொறுத்தவரை அரசியல் ரீதியான சர்ச்சைகள் காரணமாக பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் அந்தக் கருத்து வெளியிடப்பட்டதே தவிர, அது இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்வை ஆகாது.- ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT