Published : 02 Apr 2025 06:31 AM
Last Updated : 02 Apr 2025 06:31 AM
ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதன் எல்லைக்குள் யார், எப்போது நுழைகிறார்கள், எவ்வளவு காலம் தங்குகிறார்கள், அவர்கள் வந்ததன் நோக்கம் போன்றவற்றை அரசு அறிந்துகொள்வது அவசியம். முறைகேடான வர்த்தகம், சட்டவிரோதக் குடியேற்றம், ஆயுதம், வெடிமருந்து ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு நீண்டகாலமாக அச்சுறுத்தலாக இருந்துவருகின்றன.
அந்த வகையில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் வருகையை நெறிப்படுத்தப் புதிய குடியேற்ற மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாட்டினரின் இந்திய வருகையை இந்த மசோதா ஒழுங்குபடுத்துகிறது.
முந்தைய சட்டங்கள்: இந்தியாவுக்கு ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை, சுமார் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தரும் வெளிநாட்டவருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
இந்தியாவுக்குள் வெளிநாட்டினரின் வருகையை முறைப்படுத்த நடைமுறையில் பாஸ்போர்ட் சட்டம்-1920 (The Passport Act of 1920), வெளிநாட்டினர் பதிவுச் சட்டம் - 1939 (1939 Registration of Foreigners Act), வெளிநாட்டினர் சட்டம் - 1946 (The Foreigners Act of 1946), குடியேற்றச் சட்டம்-2000 (Immigration Act, 2000) போன்றவை அமலில் உள்ளன.
இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘புதிய குடியேற்ற மசோதா 2025’ மேற்குறிப்பிட்டுள்ள பழைய சட்டங்களுக்கு மாற்றாகவும், குடியேற்றத்துக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பான கட்டமைப்பாகவும் கருதப்படுகிறது. புதிய குடியேற்றச் சட்டம், வெளிநாட்டவர் இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுக்கிறது; சுற்றுலா, மருத்துவம், கல்வி சார்ந்து இந்தியாவுக்குள் பயணிக்க விரும்பும் வெளிநாட்டவரின் விசாவையும் எளிதாக்குகிறது.
விசா செயல்முறையை எளிதாக்க, இந்தியத் தூதரகங்கள் நேரடியாக விசாக்களை வழங்குகின்றன. அதேநேரத்தில், குடியேற்றப் பணியகம் மூலம் 167 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மின்-விசாக்களும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்: வெளிநாட்டினரைச் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அகதிகள்- புகலிடம் கோருபவர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என ஆறு பிரிவுகளாகப் புதிய குடியேற்ற மசோதா வகைப்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் விசா தேவை, தங்கியிருக்கும் காலம், விசாவைப் புதுப்பிப்பதற்கான நிபந்தனைகள் பற்றிய விதிகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
புதிய குடியேற்றச் சட்டத்தில், அனைத்து விசா விண்ணப்பதாரர்களும் குற்றவியல் பதிவுச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதன்படி கல்வி, மருத்துவச் சிகிச்சை, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் கீழ் நீண்ட கால விசாக்களில் (180 நாட்களுக்கு மேல்) இந்தியா வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குள் வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தில் (FRRO- Foreigners Regional Registration Office) பதிவுசெய்ய வேண்டும்.
பாகிஸ்தானியக் குடிமக்களாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவுச் செயல்பாட்டில் முகவரி விவரங்கள், உள்ளூர் தொடர்புகள், இந்தியாவில் தங்குவதற்கான நோக்கம் போன்ற தகவல்களை வழங்க வேண்டும். வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் காலம், குறிப்பிட்ட காலத்தைத் தாண்டிச் சென்றால், உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டும்.
இந்திய விசாக்களை இணையம்வழி, இந்தியத் தூதரகங்கள் மூலம் தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம். விசாவுக்குத் தேவையான ஆவணங்கள் வெளிநாட்டவர் விண்ணப்பிக்கும் வகையைப் பொறுத்தது. குறிப்பாக, ஒருவர் நீண்ட காலம் இந்தியாவில் தங்க விருப்பம் கொண்டால், அவர்களுக்கான விசாக்களுக்கு பயோமெட்ரிக் தரவு - கைரேகைகள் - முக அங்கீகாரம் போன்றவை தேவை.
கட்டுப்பாடுகள்: வெளிநாட்டவர் வழங்கிய தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உதாரணத்துக்கு முகவரி மாற்றம், வேலையின் நிலை, பல்கலைக்கழக இடமாற்றம் போன்றவற்றை வெளிநாட்டவருக்கான மண்டலப் பதிவு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மாற்றங்களைத் தெரிவிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் அபராத விதிப்பு அல்லது நாடுகடத்தும் நடவடிக்கைக்கு உள்ளாவார். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளில் விசா முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு, வணிக நடவடிக்கைகளில் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள் ஈடுபட முடியாது. விசா வைத்திருப்பவர் குற்றச் செயல்கள் அல்லது மோசடியில் ஈடுபட்டால், விசா ரத்து செய்யப்படும். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விசா பெறப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் தங்கியிருந்தாலோ விசா ரத்து செய்யப்படும்.
தண்டனைகள்: முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைபவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படுவார்கள். புதிய குடியேற்றச் சட்டத்தின் மூலம், சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுத்து வைக்கவும், நாடு கடத்த அல்லது இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்களும் முறையான பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும், வெளிநாட்டினருக்கு விசா அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்; இதைக் குடியேற்ற அதிகாரிகள் ஆய்வுசெய்வர்.
போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்து தங்கி, வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபருக்கு ஏழு ஆண்டு சிறையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் விமானம், கப்பல் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்களை விமானம் வருவதற்கு முன்பு குடியேற்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணமற்ற நபர்களை ஏற்றிச் செல்லும் நிறுவனங்களுக்கும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோதமாக மீண்டும் நுழைய முயல்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இந்தியா வருவதற்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்படும்.
விமர்சனங்கள்: குடியேற்றச் சட்ட மசோதாவில் உள்ள சில விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், வெளிநாட்டவர் மீது இவற்றை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன; குறிப்பிட்ட மதம், சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்படக் கூடும். புதிய குடியேற்ற மசோதா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அகதிகளை (உதாரணமாக, இலங்கைத் தமிழர்கள்) கடுமையாகப் பாதிப்பதுடன் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையையும் பெருமளவு குறைக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT