Published : 02 Apr 2025 08:04 AM
Last Updated : 02 Apr 2025 08:04 AM
சீனாவில் தலா 1000 டன் தங்கம் புதைந்துள்ள இரண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது உலக மக்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.
தங்கச் சுரங்கத்தை கண்டறிவதற்கான ஆய்வை சீனா நீண்டகாலமாக நடத்தி வந்தது. அதில் ஹூனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் 1000 டன் அளவுக்கு தங்கம் இருப்பதாக கடந்த நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது லியோனிங் மாகாணத்தில் இன்னொரு 1000 டன் தங்கச் சுரங்கம் இருப்பதாக மற்றொரு செய்தி வந்திருப்பது தங்க வர்த்தகர்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா அதிநவீன ‘3டி ஜியாலஜிக்கல் மானிட்டரிங்’ தொழில்நுட்ப உதவியுடன் இந்த தங்கப் புதையலை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹூனான் தங்கச் சுரங்கத்தின் மதிப்பு மட்டுமே 83 பில்லியின் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகம்.
இவை உறுதியானால், உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் தென்னாப்பிரிக்காவின் ‘சவுத்டீப் கோல்டு மைன்’ சுரங்கத்தை விட பெரிய தங்கச் சுரங்கமாக சீனாவின் தங்கச் சுரங்கம் திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்க உற்பத்தியில் சீனா கணிசமான அளவு தங்கம் உற்பத்தி செய்தாலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா நாடுகளே தற்போது முன்னணியில் உள்ளன.
இப்போது கண்டறியப்பட்டுள்ள தங்கச் சுரங்கத்தின்மூலம் அந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி சீனா முந்திவிடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, உலக அளவில் வர்த்தக வரி தொடர்பான போர், பொருளாதார தேக்கம் குறித்த அச்சம் வெளியிட்டு வரும் நிலையில் சீனாவுக்கு கிடைத்துள்ள இந்த ‘ஜாக்பாட்’ அந்நாட்டை மற்ற நாடுகளை முந்திச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தச் செய்தி வெளியான சில தினங்களுக்குள் இந்தியாவிலும் ஒடிஷா மாநிலத்தில் அதிக அளவில் தங்கம் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) நடத்திய பல்வேறு கட்ட சோதனையின் முடிவாக ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர், நபராங்புர், கியோஞ்சர், தியோகார் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான அளவு தங்கம் புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களுக்கு பெயர்பெற்ற ஒடிசா மாநிலத்தில் தங்கமும் புதைந்திருப்பதில் ஆச்சர்யமில்லை என்பது மட்டுமின்றி, இவை வெட்டியெடுக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலக அளவில் ஜவுளி, பட்டாசு, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் போட்டியாளர்களாக இருந்துவரும் இந்தியாவும், சீனாவும் தங்க உற்பத்தியையும் கணிசமாக மேற்கொள்ளும்போது இருநாடுகளும் தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியாவும் சீனாவும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் புதிய உத்வேகத்தைப் பெறுவதுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைநாட்டுவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT