Published : 30 Mar 2025 10:59 AM
Last Updated : 30 Mar 2025 10:59 AM
மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும். ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு வியாபாரிகளுக்கு அத்துப்படி. மாட்டு சுழிகளையே 10 வகையாகச் சொல்வார்கள்.
அதேபோல் மாட்டின் வயதையும் விவசாயிகள் சரியாகக் கணித்து விடுவார்கள். ‘பல்ப் போட்டுருச்சா?’ என்று கேட்பார்கள். இது மாட்டின் பிராயத்தைக் குறிப்பது. கீழ்வாயில் பால் பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் ‘பல்ப்’ என்றார்கள். வருஷத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். 4 வருடங்களில் 8 பற்கள் போட்டு விடும். இதை ‘கடைத்தேர்ச்சி’ அதாவது ‘கடைசி பல் போடுதல்’ என்பார்கள்.
மாட்டுத்தாவணியில் மாடுகளை விற்போரும் வாங்குவோரும் தரகர்களை வைத்துக் கொண்டு கையில் துண்டைப் போட்டு விலை பேசுவார்கள். ஒவ்வொரு விரலைப் பிடிப்பதற்கும் ஒவ்வொரு விலை உண்டு. ஐந்து விரலை கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய் என்று அர்த்தம். அதை ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய். விரல்களில் உள்ள ஒவ்வொரு வரையை அழுத்தினால் 10 ரூபாய் கூடுதல் என அர்த்தம். இந்த முறைகளைப் பின்பற்றித்தான் மாடுகள் விலை பேசப்படும்.
நாட்டுக் கோழிகளும் ஏறத்தாழ 10 வகை உண்டு. ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு, கருப்பு ஆடு மட்டுமல்ல... அவற்றிலும் கிட்டத்தட்ட 25 வகைகள் உள்ளன.
கடிகாரம் இல்லாத காலத்தில் கிராமங்களில் விடியல் பொழுதுகளை பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ஒரு கண்ணுக்கு உறங்கி, சாம ஏமத்திலே, சாமக்கோழி கூப்பிட, தலைக்கோழி கூப்பிட என்பார்கள். வெள்ளி முளைக்க, முத்தம் தெளிக்கிற நேரம் - இது காலை 6 மணியை குறிக்கும் சொற்கள்.
காலம்பற, நிலங்கரை, விடிஞ்சி இது 8 மணிக்கான சொற்கள். பொழுது புறப்பட, முந்திக் கற்காலை இது மாலை 4 - 5 மணியை குறிக்கும் வார்த்தைகள். கருக்கால, மம்மல்ல என்பது இரவு 7 மணியைச் சொல்கின்ற வார்த்தைகள். அதேபோல் சாயங்காலம், ஊரடங்க, இரவை, நிலாப் புறப்பட, நடுச் சாமம், அர்த்த ராத்திரி என்றெல்லாம் சொல்வதுண்டு.
கிராம மக்களின் உரையாடல்களில் சொலவடைகள் சரளமாக இருக்கும். அவை ஆயிரக்கணக்கில் உண்டு. அர்த்தமுள்ளதாக அவை இருக்கும்.
கரிசல் மானாவரியில் விளைவிக்கப்படும் நவதானியம் என்பது நெல் மட்டுமல்ல, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, செஞ்சோளம், திணை, நாத்துச் சோளம், மாப்பிள்ளை மினுக்கி சோளம், வரகு என பல வகைகள் உள்ளன. சில தானியங்கள், நாம் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால், விவசாயிகள் அதை பல்வேறு வகையில் பிரித்து வைத்திருந்தார்கள்.
நதிநீர் இணைப்பு கோரி வழக்கு
எங்கள் ஊர் பக்கம் அதாவது திருவேங்கடம் அருகே இருபுறமும் வடாறில், வைப்பாறு, நிட்சேவ நதி என இரண்டு நதிகள் கலக்கின்றன. காந்தியார் விரும்பிய வண்ணம், அவரது அஸ்தி எங்கள் பகுதியில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் நிட்சேவ நதியில் கரைக்கப்பட்டது ஒரு முக்கியமான வரலாற்று செய்தியாகும். காந்தியாரின் அஸ்தி கரைக்கப்பட்ட 7 நதிகளில் இந்த நதியும் ஒன்று.
திருவேங்கடத்தைத் தாண்டி, ஒரு தரைப்பாலம் உண்டு. மழைக்காலங்களில் இரண்டு நதிகளும் சேர்ந்து பெருக்கெடுத்து, வெம்பக்கோட்டை அணை பக்கமாகச் சென்று, சாத்தூரில் வைப்பாறாக இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வங்கக் கடலில் கலக்கின்றது.
தேசிய நதி நீர் இணைப்பில் கங்கை மற்றும் வடபுல நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி, வைகையை அடுத்து இந்த வைப்பாறு உள்ளது. வைப்பாறைத் தாண்டி தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாற்றோடு கலக்க வேண்டும் என்று நான் வழக்கு (WP. No. 6207/1983) தொடுத்தேன். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதியாக 2012 பிப்ரவரியில் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 38 - 39 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கு தொடர்ந்ததற்கான முக்கியமான காரணம், வடக்கே உள்ள ஜீவநதியான கங்கை, தென் குமரியைத் தொட வேண்டும் என்பதுதான்.
கிராமங்களில் ஒருகாலத்தில் ‘புரத வண்ணார்கள்’ என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் மீது கட்டுப்பாட்டை விதித்து ஒதுக்கி வைத்தார்கள். அவர்களின் தனிமனித உரிமையை மீறக் கூடிய வகையில் பகலில் அவர்கள் வெளியே வரக் கூடாது; இரவில்தான் நடமாட வேண்டும் என்ற அவலமான நிலை இருந்தது. அதேபோல், ராக்கூத்தாடிகள், ராப்பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என இரவில் உலா வருபவர்களும் இருந்தார்கள்.
‘நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது’ என்று கூறியபடி நடுச் சாமத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் தெருக்களில் செல்வார்கள். சிறு வயதில் உள்ளவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று கொண்டு குறி சொல்வார்கள். மறுநாள் காலையில் வீடுகளுக்கு வந்து நெல் மற்றும் தானியங்கள் பெற்றுக் கொள்வார்கள். அதேபோல், பகலில் பூம்பூம் மாட்டுக்காரர்கள், அலங்கரிக்கப்பட்ட காளையுடன் வருவார்கள். அவர்களின் சொற்படி காளை தலையாட்டும்.
பத்தமடை பாய், அம்பையில் மரக்கடைசல், காருக்குறிச்சியில் கலை நுணுக்கத்துடன் செய்யப்படும் பொருட்கள், வாகைகுளம் குத்துவிளக்குகள் என்பதெல்லாம் பிரசித்தி பெற்றவை.
ஆழ்வார்திருநகரில் அவதரித்தவர் நம்மாழ்வார். பிறப்பெடுத்த நாள் முதலே பேசாமல் இருந்தார். பின்னர் திருக்குருகூர் நம்பி கோயிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் 16 ஆண்டுகள் தவம் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து, இறை அருளால் பல்வேறு பாசுரங்களை இயற்றி, பாடினார். அவரைப்போன்று, ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர் சைவத்தில் முக்கியமான ஆளுமையாக இருந்தார்.
புளிய விருட்சத்தின் அடியில் தவமிருந்து இறைஞானம் பெற்றவர் நம்மாழ்வார் என்பதால்தான், வைணவர்கள் புளியோதரையை பெரிதும் விரும்புகிறார்கள் என்றும்கூட சொல்வார்கள்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நாயக்கர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் உன்னதமான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள சிலையைத் தட்டினால், இனிய சுர ஒலிகள் வெளிவரும். இத்தகைய சிறப்புகளுடன் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஒரு குறத்தி தன் அழகால் ஓர் அரச குமாரனை மயக்கி கவர்ந்து செல்வது, நடன நங்கை, ரதி தேவி, வீரபுத்திரன் போன்ற சிற்பங்கள் அழகிய கலைநயத்தோடு வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் சிறப்புகளை வரலாற்று அறிஞர் ஆனந்த குமாரசாமி விரிவாக விளக்கியுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளரான கோமல் சுவாமிநாதனின் நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படமாக வெளியானது. கரிசல் மண்ணின் எட்டையபுரத்தின் தெற்கே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தில் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினை அந்த அளவுக்கு அங்கே தலைவிரித்தாடியது.
திருநெல்வேலி சதி வழக்கில் பொதுவுடைமைவாதி நல்லகண்ணுவுடன் கைதான வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் சொல்வார், “கரிசல் பூமியில் குடி தண்ணீருக்கு கூப்பாடு உண்டு. ஆனால் அதுக்குன்னு ஒரு பெருமை உண்டு. உப்புத் தண்ணி எங்க ஊரில் பிரசித்தம். நெறைய இறவைக் கிணறு இருக்கும். எல்லாவற்றிலும் உவர் தண்ணீர்தான். குளத்துக்குள் ஊத்து தோண்டி ஊற ஊற தண்ணீர் எடுத்து குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டு சொட்டாக அங்கே தண்ணீர் சுரக்கும். அதை சிரட்டையில் வழிச்சு, மண் குடத்தில் ஊத்துறது தனிக் கலை.
கரிசல் மண்ணுக்கு தனி மணம் உண்டு. ஆண்டுக்கு 3 மழை பெய்தாலும் வானம் பார்த்த பூமிதான். அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களுக்கு இல்லை. உவர் தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும். எள்ளுச் செடியும் துள்ள வரும். எங்க மொழியே தனி. என்னலே, என்னவே... எப்படி இருக்கீங்க... இப்படி பேச்சு வழக்கும் கொச்சையாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்குள் இருக்கிற நாட்டுப்புற இலக்கியம் கொஞ்சி விளையாடும்” என்று கரிசல் மண்ணின் சிறப்பைக் குறிப்பிடுகிறார்.
கடந்த காலத்தில் கிராமத்தில் விவசாயத் தொழில்தான் பிரதானமாக இருந்தது. பின்னர் தீப்பெட்டி தொழிலிலும் பரவலாக ஈடுபட்டார்கள். இப்போது விவசாயம் தேய்பிறையாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 100 நாள் வேலை என்று அலுவலகத்துக்கு செல்வதுபோல இன்றைக்கு கிராம மக்கள் அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் கிராமத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.
தற்போது பெரும்பாலான விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் நெற்கதிர் அறுக்க 20 - 25 பேர் வருவார்கள். கதிர் அறுத்து கட்டு கட்டி தலைச்சுமையாக களத்து மேட்டுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கதிர் அடித்து, முறத்தால் வீசி பதர்களை நீக்கி, மலைபோல் நெல்லை குவிப்பார்கள். அதை அளந்து மூட்டைகளில் கட்டுவார்கள். இதற்கெல்லாம் 2 - 3 நாட்களாகும். ஆனால் இப்போது கதிர் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு ஒருசில மணி நேரங்களில் நெல் வேறு, வைக்கோல் வேறு என பிரித்து எடுத்து விடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் கட்டைப் பேனாவை க்விங்க் மையில் தொட்டு, காகிதங்களில் எழுதுவதை நான் பார்த்துள்ளேன். அதற்குப் பிறகு சாத்தூரில் செய்யப்பட்ட நிப்புகள் கொண்ட பேனாக்கள் பயன்படுத்தப்பட்டன. பேனாவில் மையை நிரப்பி எழுத வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளையும் அந்த பேனாவில்தான் எழுத வேண்டும். தற்போது, பால்பாயின்ட், ஜெல் பேனாக்கள் என வந்து விட்டன.
அப்போதெல்லாம் நெல்லையில் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தாமிரபரணி ஆற்றின் கரையில்தான் நடத்துவார்கள். அங்கு, காந்தி, வ.உ.சி, பாரதியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் தேவர், காயிதே மில்லத், காமராஜர் போன்ற பெரிய ஆளுமைகள் எல்லாம் பேசியதுண்டு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது, அண்ணா அவரைப் பார்த்துவிட்டு, இதே தாமிரபரணி கரையில்தான் பேசினார்.
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நெல்லை மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையின் கல்லறை பாளையங்கோட்டையில் உள்ளது. கால்டுவெல் போப்பின் கல்லறை இடையான்குடியில் உள்ளது. அவரது கல்லறையில் ‘இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கலெக்டராக இ.பி.தாமஸ் இருந்தபோது, 800 அடி நீளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பாலம் கட்டப்பட்டது. இப்போது சுலோச்சனா முதலியார் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கின்றது.
இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதுவரை எந்தவித பழுதும் இல்லாமல் ஸ்திரமாக உள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் கட்டப்பட்டுள்ள வாட்டர்லூ பாலம் போன்ற உருவ அமைப்பை அப்படியே கொண்டு இந்தப் பாலம் கட்டப்பட்டது.
டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’
திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கிய கர்த்தாக்கள் பலர் தோன்றி தங்களது அரும்பெரும் பணிகளால் தமிழுக்கும், கலை, பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்தார்கள்.
அந்த வகையில், ‘டி.கே.சி.’ என்று அன்புடன் அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார், வழக்கறிஞராக நெல்லையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1924-ம் ஆண்டில் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் அவருடைய நண்பர்கள் பலரும் இணைந்தார்கள்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஒன்று கூடுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான வீடுகளில் பெரும்பாலும் உள்முற்றம் இருக்கும். சூரிய வெளிச்சத்துக்கும், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முற்றங்கள் அமைக்கப்படும். இந்த முற்றத்தைச் சுற்றி வட்டமாக அமர்ந்து நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ‘வட்டத்தொட்டி’ என்று அழைக்கப்பட்டது.
இந்த இலக்கிய அமைப்பு 1924 முதல் 1927 வரை தொடர்ந்து நடைபெற்றது. அதற்குப் பிறகு 1935 முதல் 1939 வரை சென்னை, திருநெல்வேலி மற்றும் தென்காசியிலும் நடைபெற்றது.
திருநெல்வேலியில் நடைபெற்ற வட்டத்தொட்டி நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், எஸ்.வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், மு.அருணாசலம், வித்வான் கு.அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, மீ.ப.சோமு, தொ.மு. பாஸ்கர தொண்டைமான், அ.சீனிவாசராகவன் போன்றவர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வந்தனர்.
அதேபோல், ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெ.நா.அப்புசாமி, பாலசுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள் அவ்வப்போது வந்து கலந்து கொள்வார்கள். பிற்காலத்தில் படைப்பாளிகளான கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவர்களின் வேடந்தாங்கல் ‘மரியா கேண்டீன்’
பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் நான் படித்தபோது, மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தும் மரியா கேண்டீன் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அந்த கேண்டீனை இடித்து விட்டு, வேறு கட்டிடம் கட்டி விட்டார்கள்.
இந்த மரியா கேண்டீன் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஏராளமான மாணவர்கள் தங்கள் தோழர்களோடு சந்தித்து மகிழும் வேடந்தாங்கலாக விளங்கியது. அன்றைக்கு மாணவர்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தமிழ் அறிஞர்களாகவும், பல்வேறு ஆளுமைகளாகவும் உயர்ந்தார்கள்.
இந்த கேண்டீனில் அமர்ந்து, உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை மாணவர்கள் அலசுவார்கள். தமிழக, இந்திய அரசியல் சூழ்நிலைகள், தலைவர்களின் செயல்பாடுகள் விரிவாகப் பேசப்படும். அதேபோல், குடும்பச் சூழ்நிலைகள், எதிர்காலக் கனவு என தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் பகிர்ந்து கொள்வார்கள்.
அந்த வகையில் சில மாணவ - மாணவிகளிடையே ஏற்பட்ட அன்பு, காதலாக மலர்வதும் உண்டு. அந்த காதல், திருமண பந்தத்தில் இணைவதற்காக நிச்சயிக்கப்பட்ட தருணங்களும் இந்த மரியா கேண்டீனில் நடைபெற்றன.
சில திருமணங்களுக்கு நானே சாட்சி கையெழுத்திட்டதும், இதனால், அவர்களின் குடும்பத்தினர் என்னை துரத்தியதும், அவர்களிடம் இருந்து தப்பி ஒளிந்து கொண்டதும் உண்டு. இன்றைக்கும் அந்த தம்பதிகள் பேரக் குழந்தைகளோடு வயதான காலத்திலும் காதல் ஜோடியாக ஏகாந்தமாக சுற்றி வருகின்றனர்.
காவல் துறையினரின் தடியடியால் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த லூர்து நாதன் என்ற கல்லூரி மாணவரின் சிலை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ளது. அந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜர், நெடுமாறன், செல்லப்பாண்டியன், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெப்பின் பெர்னாண்டோ, எஸ்.கே.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இடங்களாக மரியா கேண்டீனும், பாளையங்கோட்டை தெற்கு பஜாரும் விளங்கின.
(தொடர்வோம்...)
முந்தைய பகுதி > கோவில்பட்டி தியேட்டர் முதல் ‘பராசக்தி’ தணிக்கை வரை - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 7
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT