Published : 29 Mar 2025 08:46 AM
Last Updated : 29 Mar 2025 08:46 AM
இன்றைக்கு போக்குவரத்துக் கழகம் அரசுடமையாக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தனியார் கைகளில் இருந்தது. அன்றைக்கு மிகவும் பிரபலமாக இருந்த டிவிஎஸ், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ், லயன், ஏவிஆர்எம், சந்திரா பேருந்துகள், மோட்டார் யூனியன் பேருந்துகள் போன்றவை எங்கள் பகுதியில் இயக்கப்பட்டன. குறிப்பாக டிவிஎஸ் பேருந்துகள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டதாகக் கூறுவார்கள். அந்தப் பேருந்து வருகையைக் கொண்டே நேரத்தை கணித்ததும் உண்டு.
பேருந்து வசதி இல்லாத காலத்தில், வசதி படைத்தவர்கள் வில் வண்டியில் பிரயாணம் மேற்கொள்வார்கள். கூண்டு கட்டப்பட்ட வில் வண்டியில் வைக்கோலை பரப்பி, அதன்மேல் ஜமுக்காளம் விரித்து அதில் அமர்ந்து செல்வார்கள். குடிப்பதற்கு திருகு செம்பில் தண்ணீர், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம் பொட்டலம், வடகம், மோர் மிளகாய், நார்த்தங்காய் ஊறுகாய் மற்றும் சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்கள் சகிதமாகப் புறப்படுவார்கள்.
இரவு நேரப் பயணத்தின்போது வண்டியின் கீழ் பகுதியில் மண்ணெண்ணெய் அரிகேன் விளக்கு எரியும். ஒருசிலர் நீண்ட டார்ச் லைட்டை எடுத்துச் செல்வார்கள். அதில் 8 முதல் 10 எண்ணிக்கையிலான அன்றைக்கிருந்த எவரெடி பேட்டரிகள் போடப்பட்டிருக்கும். இத்தகைய பயணங்கள் எல்லாம் பேருந்து போக்குவரத்து வந்ததும் படிப்படியாக காணாமல் போய்விட்டன.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தின்பண்டங்கள் பிரபலமாக இருந்தன. அந்தந்தப் பகுதிகளின் தண்ணீர், மண்ணின் வளத்தைப் பொருத்து அவற்றின் சுவை தனித்துவமாக இருக்கும். அந்த வகையில், தூத்துக்குடி மக்ரூன் பிஸ்கெட், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா, சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் லாலா கடை அல்வா, மைசூர்பா, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே பஜாரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண விலாஸ் புராதன லாலா கடை அல்வா, குற்றாலம் - செங்கோட்டை பார்டர் கடை புரோட்டா பிரபலமாக இருந்தன.
கடலை மிட்டாய்க்கு கோவில்பட்டி பேர்போனது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடம்பூர் போளி, கழுகுமலை பட்டறை சேவு, சாத்தூர், செவல்பட்டி சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, அருப்புக்கோட்டையில் தமிழ்மணி தியேட்டர் அருகே உள்ள லாலா கடையில் கிடைக்கும் ஓமப்பொடி, திருவேங்கடத்தில் சீனி மற்றும் கருப்பட்டி மிட்டாய், முட்டைக்கோஸ் போன்றவை பிரசித்தம். ராஜபாளையத்தில் ஆனந்தா கடையில் லட்டு, பூந்தி, மிக்சர் சுவையாக இருக்கும்.
திருநெல்வேலியில் சந்திர விலாஸ், துவாரகா லாட்ஜில் இருந்த சைவ ஓட்டல், ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே நியாஸ் அசைவ ஓட்டல், திமுகவைச் சேர்ந்த சூர்யநாராயணன் மற்றும் நம்பி நடத்திய உணவு விடுதிகள் இவையெல்லாம் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது நினைவில் உள்ளது.
கோவில்பட்டியில் அன்றைக்கு பாலமுருகன் என்ற ஓட்டலும், விடுதியும் இருந்தது. மற்றொரு ஓட்டலான சரஸ்வதி, பேருந்து நிலையம் எதிரில் இருந்தது. இன்றைக்கு உள்ள கோவில்பட்டி பேருந்து நிலையம் ஒரு காலத்தில், பழைய பாலமுருகன் ஓட்டலுக்கு எதிரில்தான் அமைந்திருந்தது. இந்த பாலமுருகன் ஓட்டலில் குறிப்பாக திமுக கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் தங்குவதுண்டு. அதேபோல் கல்யாணி லாட்ஜில் சுதந்திரா கட்சி, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தங்குவார்கள்.
சங்கரன் கோவிலில் போத்தி ஓட்டல், நாடார் ஓட்டல், சுல்தான் பிரியாணி கடை முக்கியமாக இருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு ஐயங்கார் உணவு விடுதி ஒன்று பிரபலமாக இருந்தது. அதன் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை. விருதுநகரில் நாடார் ஓட்டல், பர்மா ஓட்டல் அசைவ உணவுக்கு அன்றைக்கு பிரபலம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாளங்களில் ஒன்றாக, ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட பென்னிங்டன் லைப்ரரி விளங்கியது. அங்கு ஏராளமான அரிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பகுதியில் பெண்களுக்கென்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிறித்துவ போர்டிங் பள்ளி இருந்தது. அதேபோல், பாளையங்கோட்டை இக்னீசியஸ் கான்வென்டும் இருந்தது. அங்கு பெண்கள் தங்கிப் படிப்பார்கள். ரசிகமணி டி.கே.சி.க்கு தொடர்பு உள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இலக்கியவாதி ஜஸ்டிஸ் மகாராஜனும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றினார். வீரமாமுனிவரும், தேவநேயப் பாவாணரும் இந்த பகுதியில் உலவியவர்கள். கோவில்பட்டியில் குருமலை சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். குருமலையில் மூலிகை கலந்த காற்று தவழ்ந்து வரும். இந்தக் காற்றை சுவாசிப்பதால் காசநோய் குணமாகும் என்று அன்றைக்கு சொல்வார்கள்.
கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி - தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கும், அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றவை. சிவகாசியில் தீப்பெட்டி தொழிலுக்கு முன்னோடியாக விளங்கியவர் தொழிலதிபர் அய்ய நாடார் ஆவார். அவர் கல்கத்தா வரை சென்று தீப்பெட்டி தொழிலைப் பற்றி அறிந்து வந்து சிவகாசியில் தொழிற்சாலையை நிறுவினார். கோவில்பட்டியில் காதிரியா மேட்ச் ஃபேக்டரி, கோபாலகிருஷ்ண யாதவ், எவரெஸ்ட் மேட்ச் ஃபேக்டரி என்று பல தீப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தன. சிவகாசி, ஆயிரக்கணக்கான பட்டாசு, அச்சு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியதால், அதை ‘குட்டி ஜப்பான்’ என்பார்கள்.
எங்கள் பகுதி கரிசல் நிலப்பகுதி என்பதால் பருத்தி அதிகமாக விளையும். பருத்தியை அரவை செய்யும் ஜின்னிங் ஆலைகள் விளாத்திகுளம், எட்டையபுரம், கடம்பூர், கயத்தாறு, கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பந்தல்குடி போன்ற பகுதிகளில் அதிகமாக இருந்தன.
இந்த ஆலைகளில் இருந்து, துணிகளை உற்பத்தி செய்யும் கோவை லட்சுமி மில்ஸ், மதுரை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரத்தில் செயல்பட்ட மதுரா கோட்ஸ், கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்த லாயல் மில்ஸ், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளுக்கு பஞ்சு அனுப்பப்படும். இந்த ஆலை நிர்வாகத்தினர் ஆந்திராவில் உள்ள ராயலசீமாவிலும் பஞ்சு வாங்குவார்கள்.
அதுமட்டுமின்றி, பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பக்கிங்காமில் உள்ள துணி உற்பத்தி ஆலைகளுக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டன. பஞ்சு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்காகவே தூத்துக்குடியில் சாலை அமைக்கப்பட்டது. அதற்கு ‘கிரேட் காட்டன் சாலை’ என்று பெயர். ஒன்றிரெண்டு நாட்கள் காத்திருந்துதான் பஞ்சு மூட்டைகளை கப்பலில் அனுப்ப முடியும். இதற்காக தூத்துக்குடியில் மட்டக்கடை பகுதியில் வண்டிகளை நிறுத்தி விட்டு தங்குவார்கள். அவர்களுக்காகவே சிறுசிறு சாப்பாடு கிளப்புகள் அங்கு திறக்கப்பட்டன.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கூட, அன்றைக்கு இங்கிருந்து பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டது என்பதெல்லாம் செய்திகள். கிராமங்களில் விஸ்வகர்மா பணிகள் செய்வதற்காக இரண்டு வகையினர் இருந்தனர். ஒருவர் தச்சு ஆசாரி, மற்றொருவர் கொல்லாசாரி. தச்சு ஆசாரி என்பவர்கள் வீடு, கட்டிடங்களுக்கான மரவேலைகள் செய்வார்கள். சுத்தியல், ரம்பம், உளி, கொட்டாப்புளி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மரக்கட்டைகளை இழைத்து, ஜன்னல், கதவுகள், கட்டில், அலமாரி போன்றவற்றை செய்வார்கள்.
கொல்லாசாரி என்பவர்கள் மாட்டுக்கு லாடம் கட்டுவது, ஏர் கலப்பைகளில் ஏர் கொழுவு, வெட்டரிவாள், பன்னரிவாள், கோடாரி, அரிவாள்மனை, கத்தி போன்றவற்றை செய்வார்கள். இவர்கள் பட்டறை அமைத்து இருப்பார்கள். இதற்கு கொல்லுப்பட்டறை என்று பெயர். அங்கு ஒரு சிறிய குழியில் மரக்கரியைப் போட்டு நெருப்பு மூட்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஒரு குழாயை மண்ணில் பதித்து மறுமுனையில் ரப்பரால் ஆன ஒரு பையுடன் இணைத்திருப்பார்கள்.
அந்த பையின் வாய் பகுதி கைபிடியுடன் இருக்கும். இதை விட்டு விட்டு அழுத்தும்போது குழாய் வழியாக காற்று உள்ளே புகுந்து குழியில் இருக்கும் தீக்கங்குகளை பிரகாசமாக்கும். அதன் மேல் இரும்பு துண்டுகளை வைத்து பழுக்கக் காய்ச்சி, பின்னர் சுத்தியலால் அடித்து தேவையான கருவிகளைச் செய்வார்கள். இப்போதெல்லாம் இவை மின்சார மயமாகி விட்டன.
எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் ஊரில் தச்சு ஆசாரியாக காந்தாரி, கோதண்டராமன் ஆகியோரும், கொல்லாசாரியாக கருப்பையாவும் இருந்தனர். அதேபோல் எங்கள் ஊரில் பொன்னு டெய்லர் மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் தையல் கடைகள் வைத்திருந்தனர். தீபாவளி, பொங்கல் நேரத்தில் புது துணிகள் எடுத்து ஆடைகள் தைக்க வேண்டும் என்றால் இவர்களிடம்தான் செல்ல வேண்டும்.
பொன்னு டெய்லர் துணிகளை வேகமாக தைப்பார். ஆனால் அவரது மகன் கருப்பையா சோம்பேறி. அன்றைக்கு அவருக்கு என்னுடைய வயதுதான். தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு, புது ஆடையை வாங்குவதற்காக ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போல, டெய்லர் கடை முன்னே நின்றதெல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.
‘இதோ தைத்துவிட்டேன், காஜா வைக்க வேண்டும்... பட்டன் வைக்க வேண்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் வெட்டிய துணி தைக்கப்படாமல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒருமுறை எனக்கு கோபம் வந்து விட்டது. வீட்டில் இருந்த சட்டைக் கம்பை எடுத்துப் போய் அவரை வெளு வெளுவென் று வெளுத்து விட்டேன். ஆனாலும் அவர் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பார். இத்தனைக்கும் அவர் எனக்கு நல்ல நண்பர்.
‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்களை அப்படியே பேசி ஒப்பிப்பார். நான் அவரைப் பார்த்து, “கருப்பையா... இப்படி வசனம் பேசியே வீணாகப் போய்விடாதே... உன் குடும்பத்தைக் கவனி” என்று சத்தம் போடுவேன். அப்போது நான் காங்கிரஸில் இருந்தேன். ஒருமுறை, தென்னை மரத்தில் இருந்து தேங்காயை தெரியாமல் பறித்து விட்டதற்காக கருப்பையாவை ஊரை விட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். பின்னர் கலிங்கப்பட்டி ஊரில் தையல் கடை வைத்து அங்கேயே தங்கிவிட்டார். பின்னாளில் வைகோவின் அதிதீவிர பக்தராக மாறிவிட்டார்.
விடுமுறை காலங்களில் நான் சொந்த கிராமத்துக்குச் செல்லும்போது திருவேங்கடத்தில் என்னை வந்து பார்ப்பார். என்னிடம் ஏதாவது பணம் வாங்கிச் செல்வார். அப்போதுதான் அவருக்கு திருப்தியாக இருக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. ஒருமுறை கோவில்பட்டியில் இரவு இரண்டாம் காட்சி சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. திடீரென்று ஒரு சிலேடு போட்டார்கள். அதில், “கடம்பூர் குருமலை பக்கம் போகிறவர்களுக்கு ஓர் அறிவிப்பு. கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை பாசஞ்சர் ரயில் வந்துவிட்டது. அந்த ரயிலில் செல்ல இருப்பவர்கள் உடனே செல்லுங்கள்” என்று எழுதியிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தது.
அப்போதெல்லாம் இரவுக் காட்சி சினிமா நள்ளிரவைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கும். பெரிய படங்கள் என்றால் இன்னும் தாமதமாகி விடும். கடம்பூர் செல்பவர்கள் மதுரை பாசஞ்சர் ரயிலில்தான் செல்ல முடியும். ஏனென்றால் அப்போதெல்லாம் அந்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. அதற்காக படம் முடிவதற்குள்ளேயே எழுந்து அவசரம் அவசரமாக ஓடுவார்கள். இரண்டாம் காட்சி படத்துக்கு செல்வதென்றால் மாலை 4 மணிக்கு கடம்பூரில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயிலில் கோவில்பட்டி வருவார்கள். அங்கு பிச்சைக்கனி கடையில் புரோட்டாவையும், மட்டன் சுக்காவையும் ஒரு பிடி பிடித்துவிட்டு படம் பார்க்கச் செல்வார்கள்.
‘தினத்தந்தி’ நாளிதழின் தலைமை ஆசிரியராக தற்போது இருக்கும் சுகுமாரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்தான். கோடங்கால் கிருஷ்ணசாமி நாயக்கர் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். எனக்கு மிகவும் நெருங்கியவர். ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், சோ.அழகிரிசாமி, நல்லகண்ணு, தா.பாண்டியன், எஸ்.எஸ்.தியாகராஜனுக்கு உற்ற தோழராக இருந்தார். எந்நேரமும் கையில் ‘ஜனசக்தி’ பேப்பரை வைத்திருப்பார்.
ஒருமுறை பகலில் பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாக சைக்கிளில் சென்றவர் தவறி கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவரை, கோவில்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று கட்டு போட்டு அனுப்பி வைத்தோம். அந்த மருத்துவமனை நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் பான் என்ற டாக்டருடையது.
கிருஷ்ணசாமி நாயக்கரிடம், “ஏங்க மெதுவா போயிருக்கலாமே? ஏன் இந்த அவசரம்?” என்றேன். அதற்கு அவர், “என்ன செய்யுறது? நான் அந்த ரயிலைப் பிடிக்கவில்லை என்றால், மறுநாள் காலையில் பஸ் ஏறி கயத்தாறு இறங்கிப் போகணும். அதனால்தான் அவசரமாகப் போனேன். தவறி கீழே விழுந்துவிட்டேன்” என்றார். அந்த அளவுக்கு அப்போது பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்தது.
மதுரை பாசஞ்சரைப் பற்றி சொல்லும்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. 1950 - 60களில் கு.அழகிரிசாமி எழுதிய ‘குமாரபுரம் ரயில் நிலையம்’ என்ற சிறுகதை மிகவும் பிரபலமாகி, அதிகம் பேரால் வாசிக்கப்பட்டது. இது ஆங்கிலத்திலும், ரஷ்ய, சீன, பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கரிசல் வட்டாரம் தொடர்பான கதை.
ஒரு கிராமத்து மாணவன் தன்னுடைய கிராமத்தில் படித்துவிட்டு, அடுத்த வகுப்புகளுக்காக கோவில்பட்டி வ.உ.சி. கழக உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும்போது, அந்த மாணவனுக்கும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் நடந்த உரையாடலாக இந்த சிறுகதை விரியும். ஆனால், இவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று அந்த மாணவனுக்கும், தந்தைக்கும் தெரியாது. பள்ளிக்குச் சென்றபின், ‘ஆஹா... இவர்தான் தலைமையாசிரியரா?’ என்று வியப்புடன் மாணவரும் தந்தையும் பேசிக் கொள்வார்கள். இந்தக் கதை எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்தக் காலத்தில் முதன்முதலாக தனிச் சிற்றிதழ்களாக ‘தமிழன்’, ‘ஊஞ்சல்’ என்ற இரண்டு இதழ்களை கி.ரா. தொடங்கினார். புதுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வேங்கட சுப்பிரமணியம், ‘தினத்தந்தி’ செளந்தர பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் இதை விரும்பிப் படித்ததுண்டு.
இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராகும் விதமே சுவாரஸ்யமானது. ஒரு கொயர் நோட்டில் முதலில் கி.ரா. சில பக்கங்களை எழுதி, கு.அழகிரிசாமிக்கு தபாலில் அனுப்புவார். அவர் சில பக்கங்கள் எழுதிய பின்னர் சுற்றுக்கு விடுவார். முதலில் நா.பார்த்தசாரதிக்கு செல்லும். அடுத்து தி.க.சிவசங்கரனுக்குச் செல்லும். தொடர்ந்து சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி, டிகேசியின் பேரன் தீப நடராசனிடம் செல்லும். சில சமயம் கவிஞர் நகுலனும் பங்கு பெறுவார். ஒவ்வொருவரும் தங்களது படைப்புகளை எழுதிய பின் இறுதியாக கி.ரா.வுக்கு வரும். அவரிடம் வந்தவுடன் இதழ் முழுமை அடைந்து விடும்.
பின்னர், மேற்குறிப்பிட்ட அனைவரின் கைகளுக்கும் சென்று சேரும். இவ்வாறு ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராக 3 மாதங்களாகி விடும். இது கையால் எழுதப்பட்ட காலாண்டு தனிச்சுற்று இதழாகும். முதலில் ‘தமிழன்’ என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ‘ஊஞ்சல்’ என்று நிலைத்து விட்டது. இது ஒரு வித்தியாசமான தனிச்சுற்று. இது ‘சரசுவதி’ மற்றும் ‘கிராம ஊழியன்’ இதழ்கள் காலத்துக்குப் பின்னும் ‘கணையாழி’, ‘கசடதபற’ காலத்துக்கு முன்னும் வெளிவந்தது. இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழை மணிக்கொடி சீனிவாசன் வெகுவாகப் பாராட்டியது உண்டு.
இவரைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். அந்த காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக மணிக்கொடி சீனிவாசனை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அப்போது அவர், “நான் கும்பகோணத்துக்காரன்... இந்த திருநெல்வேலி மாவட்டத் தொகுதியில் எப்படி போட்டியிட முடியும்?” என்று கூறி பின்வாங்கிவிட்டார்.
அதைத்தொடர்ந்து சினிமா தணிக்கைக்குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இவர்தான், கலைஞர் வசனம் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தை தணிக்கை செய்தவர். இதற்காக சென்னை பாரகன் தியேட்டரில் (கலைவாணர் அரங்குக்கு எதிரில்) 3 நாட்கள் தணிக்கை செய்தார். அப்போதெல்லாம் 3 நாள் தணிக்கை என்பது அரிதானது. திரைப்படத்தில் பல காட்சிகளை வெட்டுவதற்குப் பரிந்துரைத்தார். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ‘பராசக்தி’ படம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
திருநெல்வேலியில் பிரபலமான ம.தி.தா. இந்துக் கல்லூரி ஒருசமயம் நிதிப்பற்றாக்குறையினால் திணறியது. கல்லூரியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிர்வாகத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். கல்லூரியின் முதல்வராக அலெக்சாண்டர் ஞானமுத்து இருந்தார். அவர் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் பகுதிகளில் தன்னுடைய தொப்பியை கையில் ஏந்தி பொதுமக்களிடம் நன்கொடைகள் பெற்றார். அதோடு, மதுரை திரவிய தாயுமானவர் அறக்கட்டளையின் உதவியோடு இந்துக் கல்லூரியை நிதி சிக்கலில் இருந்து மீட்டார்.
வரலாற்று அறிஞர் பத்மபூஷண் நீலகண்ட சாஸ்திரியும், தமிழறிஞர்கள் வெங்கடராஜூலு, சிதம்பரம், ராமலிங்கம் போன்றவர்கள் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளாகும். அன்னி பெசன்ட் அம்மையார் உரையாற்றிய பெருமை பெற்றது இந்துக் கல்லூரி.
தமிழ்நாட்டிலேயே முதல் பெண்கள் கல்லூரி நாசரேத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அது பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு இன்றைக்கு இருக்கின்ற சாராள் டக்கர் பெண்கள் கல்லூரியாக அமைந்தது. பாளையங்கோட்டை செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முதல்வர் வேதசிரோன்மணி கல்லூரி முதல்வராக மட்டுமல்லாமல், மாணவர்களின் முதல்வராகவும் விளங்கினார். அவர் பேன்ட், முழுக்கை சட்டை, டை கட்டிக் கொண்டு எளிமையாக சைக்கிளில்தான் கல்லூரிக்கு வருவார். அதேபோல் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய ஃபாதர்ஸ், பிரதர்ஸ் லாட்ஜ்களுக்கு சென்றால் அருமையான வெளிநாட்டு சாக்லெட்கள் கொடுப்பார்கள். வெள்ளை அங்கியோடு ஜெபமாலையை உருட்டிக் கொண்டும் பைபிள் படித்துக் கொண்டும் இருப்பார்கள்.
1972 காலகட்டத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வந்தேபோது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து, பி.காம். மாணவர் லூர்து நாதன் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஃபாதர்ஸ் தங்கியிருந்த அறைகள் சூறையாடப்பட்டன. அப்போது நடந்த ஒருசில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. பொருட்களை வெளியே எடுத்துப் போடும்போது சஞ்சிகைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.
முதல் உலகப் போரின்போது கோவில்பட்டி, கயத்தாறு, சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் சோழாபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் இன்றைக்குப் பயன்பாடில்லாமல் உள்ளன. இவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கலாம்.
1940-களில் இந்த மாதிரியான விமான நிலையம் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனை அருகேயும் இருந்தது. அங்கு விமானம் இறங்கப் போகிறது என்ற தகவல் வந்தவுடன் நெல்லை நகர் மக்கள் கூடி விட்டனர்.
இன்றைக்கு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடம் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு தனவானுடையது. முதல்வர் காமராஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெருந்தன்மையாடு அந்த இடத்தை இலவசமாகக் கொடுத்தார். இன்றைக்கு அது விரிந்து பரந்த மருத்துவமனையாகத் திகழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
அன்றைக்கு எல்லாம் அப்பகுதி காடுபோல் இருக்கும். கலெக்டர் பங்களா, மாவட்ட நீதிபதி பங்களா மட்டுமே அங்கு இருந்தன. இந்த மாவட்டத்தினுடைய இலக்கிய கர்த்தாக்கள் அனைவரையும் குறித்து என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் பதிவு செய்துள்ளேன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், தமிழறிஞர்கள், புலவர்கள் என 500-க்கும் மேற்பட்ட ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அனைத்தையும் இங்கு எழுதுவது சற்று கடினம்.
அதேபோல், அந்த காலத்து ஆண்டாள், நம்மாழ்வார், பிறவியில் பேசாமல் இருந்து பின்னர் கவிமழை பொழிந்த குமரகுருபரர் முதல் இன்றைக்குள்ள நவீன எழுத்தாளர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகள் உள்ளனர். அத்தனை பேரும் தமிழுக்கும், கல்விக்கும் இலக்கியத்துக்கும் தங்களை அர்ப்பணித்த பெருமக்கள். இந்த கட்டுரை நூல் வடிவமாக வந்தால் இந்த விவரங்களை நிச்சயம் இணைப்பேன்.
இசையிலும் நெல்லை மாவட்டம் முன்னோடியாக இருந்தது. எஸ்.ஜி. சுப்பையா அய்யர், செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா), பாடல்கள் எழுதிய சுப்பையா நாயுடு, முத்தையா பாகவதர், விளாத்திகுளம் சுவாமிகள், அரிகேசநல்லூர் பாகவதர், நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இசை வரிசையிலும் நீண்ட பட்டியல் உண்டு.
எட்டையபுரம் அரசருடைய ஆதரவோடு முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வசித்து வந்தார். அவருக்கு தற்போது ஒரு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நடிகமணி டி.வி.நாராயணசாமி எட்டையபுரம் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் பிறந்தவர். இவர்தான் எம்ஜிஆரை அண்ணாவுக்கு அறிமுகம் செய்தார். கலைஞர் நாடகம் நடத்துவதற்கும் இவர்தான் உதவி செய்தார். ஆலோசனைகளையும் வழங்கினார்.
திரைப்படத் துறையில் இருந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அந்த காலத்து பிரபலமான நடிகை. ‘பவளக்கொடி’ படத்தில் நடித்தவர். நடிகர்கள் டி.எஸ்.பாலையா, சந்திரபாபுவும் (தூத்துக்குடி) இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்.
அப்போதெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில் பாவைக் கூத்துகள் நடத்துவதுண்டு. ஒன்றுபட்ட தென் ஆற்காடு, வடஆற்காடு மாவட்டத்தில் நடத்தப்படும் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளுக்கும், நெல்லை மாவட்டத்தில் நடத்துகின்ற பாவைக் கூத்து நிகழ்ச்சிகளுக்கும் வேறுபாடு உண்டு. அதேபோல் தேவராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வகையறாக்கள் ஆடுவார்கள். கலைமாமணி குமாரராமன், அப்பண்ண சாமி போன்றவர்கள் ஒயிலாட்டம், தேவராட்டத்தில் சிறந்து விளங்கினார்கள்.
விருதுநகர் மாவட்டம் செவலூரில் பிறந்த கிராமியக் கலைஞர் முத்துமாரி, இடதுசாரி ஆதரவு பாடல்களை கனத்த குரலோடு திருவேங்கடம் பகுதிகளில் பாடுவார். அந்த வட்டாரத்தில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதேபோல் பிரபல ஓவியர் கொண்டையராஜு கோவில்பட்டியில் வாழ்ந்து புகழ் பெற்றவர்.
(தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT