Last Updated : 27 Mar, 2025 08:22 AM

5  

Published : 27 Mar 2025 08:22 AM
Last Updated : 27 Mar 2025 08:22 AM

அதிவேக ரயில் சேவை - அருமையான திட்டம்

மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கும் நடவடிக்கை, ரயில் பயணிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செயலாக அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரயில்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்து வருகிறது. இருக்கும் வழித்தடங்களில் அதிகபட்சமாக எவ்வளவு ரயில்களை இயக்க முடியுமோ, அவ்வளவு ரயில்களை இயக்கி வருகிறோம் என்று ரயில்வே அதிகாரிகளும் விளக்கமளித்து வருகின்றனர். அவர்களது இயலாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும், அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்ய வழிகாண வேண்டும், புதிய வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வாய்ப்பு வரும்போதெல்லாம் குரல் கொடுத்து வருகின்றனர். தினசரி இயங்கும் ரயில்களில் இடம் காலியில்லை என்ற நிலையில், கூடுதலாக எத்தனை சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும் கூட்டம் நிரம்பி வழியும் நிலையே நீடிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், புதிய வழித்தடங்களை உருவாக்கி அதில் அதிவேக ரயில்களை இயக்க எடுக்கப்படும் முயற்சி பாராட்டுக்குரியது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரத்திற்கு 167 கி.மீட்டருக்கு ஒரு வழித்தடம், சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக வேலூருக்கு 140 கி.மீட்டருக்கு ஒரு வழித்தடம், கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு மார்க்கமாக சேலத்திற்கு 185 கி.மீட்டருக்கு ஒரு வழித்தடம் என மூன்று முக்கிய வழித் தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மூன்றுமே தமிழகத்தின் பிரதான போக்குவரத்து வழித்தடங்களாகும். இந்த மூன்றிலும் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டிருப்பது தமிழக போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) உருவாக்கப்பட்டு அதன்மூலம் ரயில்சேவை வழங்கப்படவுள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீட்டர் வரை செல்லும் அதிவேக ரயில்களாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து கட்டமைப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கையாக இந்த முயற்சி அமைந்துள்ளது. மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு மூலம் தற்போது டில்லி – மீரட் இடையே இத்தகைய ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்படுவது நமக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த முயற்சியில் சிறிதும் தொய்வின்றி, எவ்வளவு விரைவாக திட்டத்தை செயல்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், நாட்டின் முன்னோடி மாநிலமாகவும், சிறு நகரங்களை இணைக்கும் இத்தகைய கட்டமைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை தமிழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x