Published : 26 Mar 2025 08:44 AM
Last Updated : 26 Mar 2025 08:44 AM
சென்னை நகரில் ஒரு மணி நேரத்தில் 7 நகை பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது மாநகர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காலையில் நடைபயிற்சி சென்றவர்களைக் குறிவைத்து நடந்துள்ள இச்சம்பவம் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் இரண்டு சம்பவங்கள், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரியில் தலா ஒரு சம்பவம் என 7 நகை பறிப்பு சம்பவங்கள் மூலம் 26 சவரன் நகை பறிக்கும் செயல் நடந்துள்ளது. இதுதவிர, ஊரப்பாக்கத்தில் வீட்டில் நுழைந்து 9 சவரன் நகையைப் பறித்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குற்றவாளியை பொதுமக்களே விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் விமானம் மூலம் ஐதராபாத் தப்ப முயன்றபோது காவல்துறை துரிதமாக செயல்
பட்டு அவர்களை மடக்கிப் பிடித்துள்ளது. அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்ல ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கொலை, சேலம் – திருப்பூர் நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது.
குற்றச் சம்பவம் நடந்தபிறகு அவர்களை விரட்டிப் பிடித்து தண்டிப்பது ஒருபுறம் இருந்தாலும், குற்றம் நடப்பதற்கு முன்பே காவல்துறை மீதான அச்ச உணர்வு, குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்பட வேண்டும். நகை பறிப்பில் ஈடுபட நினைப்பவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து குற்றச் செயலில் ஈடுபட்டுவிட்டு எளிதில் தப்பித்து விடலாம் என்று நினைப்பதே தமிழக காவல்துறையை ஏளனமாக நினைப்பதற்கான எடுத்துக்காட்டு. தமிழக காவல்துறை எள்ளி நகையாடும் அளவிற்கு பாதுகாப்பு கட்டமைப்பை வைத்திருக்கிறது என்று தான் பொருள் கொள்ள முடியும். அதேபோன்று பட்டப்பகலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகள் கொடூர கொலைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், இதுபோன்ற கொடிய சம்பவங்களில் ஈடுபட்ட பின்னரும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையே அதற்கு காரணம்.
தமிழகத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டால் தமிழக காவல்துறையிடம் இருந்து தப்ப முடியாது; கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற பயம் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இருந்தால் மட்டுமே குற்றங்கள் தடுக்கப்படும். அத்தகைய பயத்தை குற்றவாளிகள் மத்தியில் புகட்ட தமிழக காவல்துறை தவறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு நடைபெறும் சம்பவங்கள் அமைந்துள்ளன. ‘திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான்...’ என்று பொதுமக்கள் ‘கமென்ட்’ அடிக்கும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருப்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இத்தகைய போக்கு நீடித்தால் அதன் விளைவுகள் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களைக் காப்பதற்காக இல்லாவிட்டாலும், தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது ஆட்சியாளர்கள் களத்தில் இறங்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT