Published : 19 Mar 2025 06:38 AM
Last Updated : 19 Mar 2025 06:38 AM
தமிழ்நாட்டில் முதல் முறையாகப் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.33% ஆக இருந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-23இல் 7.61% ஆகவும், 2023-24இல் 9.19%, 2024-25இல் 6.48% ஆகவும் பதிவானது.
இதே காலக்கட்டத்தில் வலிமையான பொருளாதாரத் திட்டங்கள் மூலம் 2021 - 22 முதல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% எனச் சீரான பாதையில் பயணித்து வருகிறது. எனவே, 2024 – 2025 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 8%க்கும் அதிகமாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாகத் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது எனவும் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022-23இல் தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.78 லட்சமாக இருந்த நிலையில், தேசிய சராசரி ரூ.1.69 லட்சமாக இருந்தது கவனிக்கத்தக்கது. உலகளவில் நிலவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தமிழகத்தின் பொருளாதார மீள்தன்மை, முன்மாதிரித் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி இப்பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
முதல் பொருளாதார ஆய்வறிக்கை: மாநிலத் திட்ட ஆணையம் - நிதித் துறை போன்ற பல்வேறு துறைகளின் ஆலோசனையின் கீழ் தமிழகத்தின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, 2025 மார்ச் 13இல் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை விவசாயம், தொழில் துறை போன்ற முக்கியத் துறைகள் குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குவதுடன், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பின் வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றை ஆராய்கிறது. தமிழக அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மதிப்பிடுவதுடன், 2024-25, 2025-26ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி வாய்ப்புகளையும், நிலையான பொருளாதார வளர்ச்சியை அளிப்பதற்கான தீர்வுகளையும் இந்த ஆய்வறிக்கை முன்வைக்கிறது.
சமமான வளர்ச்சி: இந்திய நிலப்பரப்பில் வெறும் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் கொண்ட தமிழ்நாடு, 2023-24இல் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களித்துள்ளது. தமிழ்நாட்டின் சமூகக் கொள்கைகள், வலுவான உள்கட்டமைப்பு வசதிகள், திறன் வாய்ந்த தொழிலாளர் அமைப்புகள் நீடித்த பொருளாதார வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை நிலைநிறுத்த உதவியுள்ளன என்பதை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் ஒரே ஒரு பெருநகர மையத்தைச் சுற்றி மட்டும் குவிந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தலைநகர் சென்னையைச் சுற்றி மட்டும் அல்லாமல், பல நகர்ப்புற மையங்களிலும் சமமாகப் பரவியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. இதன் மூலம் நகரம் - கிராமம் என்கிற இடைவெளி குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
தமிழக மக்கள்தொகையில் 31.8% கொண்ட வடக்கு மண்டல மாவட்டங்கள், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சமாக 36.6% பங்களிக்கின்றன; மக்கள்தொகையில் 22.8% கொண்ட மேற்கு மண்டல மாவட்டங்கள், மாநில உள்நாட்டு உற்பத்தியில் 29.6% வழங்குகின்றன. 20.5% மக்கள்தொகை கொண்ட தெற்கு மண்டல மாவட்டங்கள் 18.8%, 25.5% மக்கள்தொகை கொண்ட கிழக்கு மண்டல மாவட்டங்கள் 15.1% என மாநில உள்நாட்டு உற்பத்தியில் அங்கம் வகிக்கின்றன.
பணவீக்கம்: நாடுகளுக்கு இடையேயான பதற்றம், காலநிலை மாற்றம் போன்றவற்றால் சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பணவீக்கம் தொடர்கிறது. உலக நாடுகளின் பணவீக்கம் 2022இல் 8.6%, 2023இல் 6.7% ஆக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, சில்லறை விற்பனைப் பணவீக்கம் 2022-23இல் 6.7% ஆகவும், 2023-24இல் 5.4% ஆகவும், 2024-25இல் ஜனவரி 2025 வரை 4.9% ஆகவும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சில்லறை விற்பனைப் பணவீக்கம் 2022-23இல் 6% ஆக இருந்து 2023-24இல் 5.4% ஆகவும், 2024-25இல்(ஜனவரி 2025 வரை) 4.8% ஆகவும் குறைந்துள்ளது.
இதில் 2019-20 முதல் 2023-24 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பணவீக்கத்தைவிட (சராசரி 4.85%) தமிழகத்தின் பணவீக்கம் (சராசரி 5.7%) அதிகமாகவே இருந்தது. ஆனால், 2020-21இல் இந்தப் போக்கு தலைகீழாக மாறியது. இக்காலக்கட்டத்தில் மாநிலத்தின் சில்லறைப் பணவீக்கம் கணிசமாகக் குறையத் தொடங்கியது. 2023-24இல் இந்தியாவின் 20 முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு மிகக் குறைந்த சில்லறைப் பணவீக்கத்தைக் கொண்ட 8ஆவது மாநிலமாக அறியப்படுகிறது.
நீட் - தேசியக் கல்விக் கொள்கை: தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, தேசியக் கல்விக் கொள்கை (2020), நீட் போன்றவை மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதாகவும் தெரிவித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மாநில சுயாட்சியை நீர்த்துப்போகச் செய்வதாகவும், நீட் போன்ற தேர்வுகள் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை விகிதத்தைப் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், சமூக – பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
பொருளாதாரப் பாதிப்பு: மாநில அரசுகள் நிதிக் கடன் பெறுவதற்கான மத்திய அரசின் கட்டுப்பாடுகளை இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை விமர்சிக்கிறது. மத்திய அரசு விதித்துள்ள நிதிக் கடன் கட்டுப்பாடுகள் தமிழகத்தின் பொருளாதாரத் திறன் முழுமையாகப் பயன்படுவதைத் தடுப்பதாகவும், கடன் வரம்புகள் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீடுகள், பொருளாதார விரிவாக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்புகளில்... கல்வித் தகுதிகளுக்கும் - வேலைவாய்ப்புச் சந்தைத் தேவைகளுக்கும் இடையே வேறுபாடு நீடிப்பதால் இளைஞர்களிடையே தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சேவைத் துறையில் நகர்ப்புற வேலைவாய்ப்புகள் சார்ந்து தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தாலும், தேசியத் தொழிலாளர் கொள்கைகள் வேலைவாய்ப்பு உருவாகும் வேகத்தைக் குறைத்துள்ளதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் கொள்கைகள் தமிழ்நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்ப மாற வேண்டும்; இல்லை என்றால், தமிழகத்தில் தொழிலாளர் சந்தை ஏற்றத்தாழ்வுகள் தீவிரமாகும் என்றும், இதனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.
இறுதியாக, உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலிப் பாதிப்பு, காலநிலை மாற்ற விளைவுகள் போன்றவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாகப் பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக்கொள்கிறது. அதேநேரத்தில் நிலையான வளர்ச்சி, முதலீடுகள் மூலம் தீர்வுகளை வகுக்க முடியும் எனத் தமிழ்நாடு அரசு உறுதிகொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை நம்பிக்கை அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT