Published : 19 Mar 2025 07:41 AM
Last Updated : 19 Mar 2025 07:41 AM
உள்ளூர் தொடங்கி உலகம் வரைக்கும் அறிவியல் தொடங்கி, அரசியல் வரைக்கும் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து வருகிறார்கள். அறிவிலும் ஆற்றலிலும் எந்த விதத்திலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். சமீபத்திய உதாரணம் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
தொடர்ந்து 10 மாதங்கள் விண்வெளியில் தங்கிய பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுனிதா. கடந்த காலங்களில் அவரை அங்கிருந்து பூமிக்குத் திரும்பக் கொண்டுவர மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியாக டிராகன் விண்கலம் மூலம் அவருக்கு விடிவு பிறந்திருக்கிறது. அவரின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. அவரின் அசாத்திய பொறுமை, பெண்கள் குலத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக அதிரித்துள்ளது என வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்பு விகிதம் இருந்தது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 938, 941 என படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 2024-25ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் 940 ஆக உள்ளது. இது ஆண்டு இறுதிக்குள் முந்தைய ஆண்டை விடவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கருவுற்று இருக்கும்போதே, குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருச்சிதைவு செய்து கொள்வதே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெரிதும் குறைவதற்கு முக்கிய காரணம். தீவிரமான குடும்பக் கட்டுப்பாடு திட்ட அமலாக்கம் காரணமாக, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்துவிட்டது.
வீட்டுக்கு 10 குழந்தைகள் வரை இருந்த குடும்பங்கள் எல்லாம் ஒரு காலத்தில் சகஜம். இது படிப்படியாகக் குறைந்து இப்போதெல்லாம் குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அதிலும் இரண்டும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டால் திருமண செலவுகளை சமாளிக்க முடியாதே என்ற கவலையில் கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வது வழக்கமாக இருந்தது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பரவலாக இருந்துவந்த கள்ளிப்பால் கலாச்சாரம் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஒட்டுமொத்தமாக, பாலின விகிதாச்சாரம் அதிகரித்துள்ள போதிலும், இன்னும் கரூர், சேலம், திருவண்ணாலை, தருமபுரி கள்ளக்குறிச்சி, தேனி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம் போன்ற சில மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை பெற்றோருக்கு சொல்லக் கூடாது, சொன்னால் கடுமையான நடவடிக்கை பாயும் என சட்டம் இருந்தாலும், ஸ்கேன் மையங்களும், கருத்தரிப்பு உதவி மையங்களும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.
அரசின் தீவிரக் கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கையும் இன்னும் அதிகரிக்க வேண்டும். அதோடு, விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கல்வி அறிவு, சமூக சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதோடு.. கல்விக் கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை, வேலை வாய்ப்புகளில் சிறிதேனும் முன்னுரிமை ஆகியவற்றை திட்டமிட்டு அமல்படுத்தும் போது... பரவலாகவே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். - எஸ்.ஆர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT