Published : 18 Mar 2025 12:41 PM
Last Updated : 18 Mar 2025 12:41 PM

நெருக்கடி மிகுந்த விண்வெளி நிலைய வாழ்க்கையும், உடலில் ஏற்படும் மாற்றங்களும்!

கிரீன்விச் நேரத்தின்படி இயங்கும் விண்குடில் வாழ்க்கையில் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் தூக்க நேரம். நாம் சாதாரணமாகப் படுப்பதுபோல் எங்காவது படுத்தால் விண்வெளியில் மிதந்து சென்றுவிடுவோம் என்பதால் ஜிப் உடன் பைபோல இருக்கும் படுக்கைக்குள்தான் உறங்க வேண்டும்.

விழித்திருக்கும் நேரத்தில் பதினைந்து நிமிடத்துக்கு ஒரு வேலை என்கிறபடி தினசரி வேலைப் பட்டியல் பூமியிலிருந்து அனுப்பப்படும். அதன்படி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

குடிலைச் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வப்போது கட்டளைப்படி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சில நேரம் புயல் போன்ற இயற்கைச் சீற்றம் உருவாகும்போது, விண்குடிலின் ஜன்னல் வழியே ஒளிப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

இடையிடையே அவர்களுக்கான நேரம் இருக்கும். அதில் பாட்டு கேட்கலாம், புத்தகம் படிக்கலாம், திரைப்படம் பார்க்கலாம். தினமும் வீட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு வீடியோ காலில் பேச வாய்ப்பு கிடைக்கும்.

மாதம் ஒருமுறை பூமியிலிருந்து உணவு, நீர், ஆக்ஸிஜன், எரிபொருள், ஆய்வுக் கருவிகள் போன்றவற்றைத் தாங்கிய ஆளில்லா சரக்கு விண்கலம் செல்லும். அதில் உள்ள சரக்கை எடுத்து பத்திரப்படுத்துவதும், குப்பைகளைச் சேகரித்து அழிப்பதும் பணிக் குழுவின் வேலைதான்.

பூமியிலிருந்து பதம் செய்து டூத்பேஸ்ட்போல பாகு பதத்தில் டியூபில் அடைத்து அனுப்பப்படும் உணவு தவிர காபி, ஜூஸ், பழங்கள், இறைச்சி போன்றவற்றை உண்ணலாம். வாணலி போன்றவற்றில் இட்டு எதையும் சமையல் செய்ய முடியாது; மைக்ரோவேவ் மூலம் சூடாக்குவது அல்லது இறைச்சியை உலர் வறுக்கும் முறையில் வறுப்பது போன்ற வகையில் மட்டுமே சமையல் செய்ய முடியும். உணவு தயாரிப்பதும் பணிக்குழுவின் வேலையே.

விண்வெளியில் துணியைத் துவைக்க முடியாது. எனவே உள்ளாடைகளை ஓரிரு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். மற்ற ஆடைகளைச் சுமார் ஒரு வாரம் பயன்படுத்துவார்கள். சரக்கு விண்கலத்தில் அவர்களுக்குத் தேவையான ஆடைகள் செல்லும்.

தனிமை, சிறு குழுவுடன் அடைந்த இடத்தில் வாழ்க்கை போன்றவை சிலரின் மனநிலையைப் பாதிக்கலாம். ஆனால், விண்வெளி வீரர், வீராங்கனைகளைத் தெரிவு செய்யும்போதே தனிமை, சிறு குழு வாழ்க்கைக்குத் தயார்படுத்தித்தான் அவர்களை விண்வெளிக்கு அனுப்புவார்கள்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்: பூமியில், ஈர்ப்பு விசை காரணமாக நமது உடலில் தலையை நோக்கிச் செல்வதைவிட கால் நோக்கி ரத்தம் கூடுதலாகப் பாயும். விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால் உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் இயல்புக்கு மாறாகப் பாயும். எனவே விண்வெளிக்குச் சென்ற சில நாள்களுக்குத் தலைவலி, கண் வலி போன்றவை ஏற்படும். நாளடைவில் நமது உடல் விண்வெளி நிலைமைக்குத் தகவமைத்துக்கொண்டுவிடும்.

இதேபோல ஆங்கில எழுத்து ‘s’ போல பூமியில் இயல்பாக வளைந்து இருக்கும் முதுகுத் தண்டு விண்வெளியில் நேராக நீண்டு, நமது உயரம் சில செ.மீ.வரை கூடிவிடும். பூமியில் ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலைத் தாங்கிப் பிடிக்கும் எலும்புக்கு விண்வெளியில் வேலை இல்லை.

எனவே எலும்புச் செல் வளர்ச்சி குறைந்து நாளடைவில் எலும்பு அடர்த்தி குறையும். இது போன்ற உடலியல் மாற்றங்களைச் சரிசெய்ய ஆய்வுகளை மேற்கொள்வார்கள்; அதன் அடிப்படையில் புதிய புதிய உடற் பயற்சியை உருவாக்குவார்கள். இவற்றால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாலும், பூமி திரும்பியதும் மறுபடி நிலைமை திரும்பச் சில வாரங்கள் முதல் ஒரு மாதம்கூட எடுக்கலாம்.

விண்வெளி ஆபத்துகள் என்ன? - 371 நாள்கள் தொடர்ந்து விண்குடிலில் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோவிடம் விண்வெளி வாழ்க்கை ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோல முன்னர் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் தசை இழப்பு, எலும்பு அடர்த்தி குறைவது, குடல் பாக்டீரியா மாற்றம் போன்ற பல சவால்கள் இனம் காணப்பட்டுள்ளன. எனவேதான், தற்போது தினம் தினம் ஒவ்வொரு விண்வெளி வீரரும் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் மிதக்கும் குப்பை, அவ்வப்போது சீறிச் செல்லும் விண்கற்கள் மோதலால் விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்படலாம். இடர் தவிர் தொழில்நுட்பங்கள் உதவியோடு மோத வரும் பொருள்களை இனம் கண்டு விண்வெளி நிலையத்தின் பாதையைத் திசை திருப்பிச் சமாளிப்பார்கள்.

அவ்வப்போது சீறும் சூரியன் ஆற்றல் மிகுந்த கதிர்களை வெளியிடும். சூரியப் புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து, கதிர் தடுப்புப் பகுதியில் சில மணி நேரம் பதுங்கி இருப்பார்கள்.

நீண்ட விண்வெளி வாழ்க்கை - சோவியத் மிர் விண்வெளி நிலையத்தில் 1994 முதல் 1995 வரை 437 நாள்கள் தங்கிய ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி பாலியாகோவ்தான் இதுவரை தொடர்ந்து நீண்ட நாள்கள் விண்வெளி வாழ்க்கை நடத்தி சாதனை செய்தவர்.

இதுவரை ஐந்து முறை விண்வெளிக்குச் சென்றுள்ள ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ ஒட்டுமொத்தமாக 1,111 நாள்கள் விண்வெளியில் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். விண்வெளியில் 328 நாள்கள் வாழ்ந்த கிறிஸ்டினா கோச் மிக நீண்ட நாள்கள் விண்வெளியில் வாழ்ந்த பெண்மணி என்கிற சாதனை படைத்துள்ளார்.

விண்வெளி நிலையங்கள்

* 1971 ஏப்ரல் 19இல் ஏவப்பட்ட சோவியத் யூனியனின் ‘சல்யுட் 1’ தான் உலகின் முதல் விண்வெளி நிலையம். இதை விண்குடில் என்றும் சொல்லலாம்.
* 1973 மே 14இல் தொடங்கப்பட்ட ‘ஸ்கைலேப்’ அமெரிக்காவின் முதல் விண்குடில்.
* 2011 செப்டம்பர் 29 அன்று ஏவப்பட்ட தியாங்காங் தான் சீனாவின் முதல் விண்வெளி நிலையம். 2021 ஏப்ரல் 29 முதல் சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது.
* நாசா, ரோஸ்கோஸ்மஸ், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடா விண்வெளித் துறை, ஜப்பான் விண்வெளித் துறை ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயல்படுத்துகின்றன.

தொடர்புடைய கட்டுரைகள்:

> யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி பயணம் முதல் ஆராய்ச்சிகள் வரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x