Published : 18 Mar 2025 08:24 AM
Last Updated : 18 Mar 2025 08:24 AM
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சாலையோர உணவகம். டெல்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் கலோனல் புஷ்பிந்தர் பாத் என்பவரை சாதாரண உடையில் இருந்த பஞ்சாப் போலீஸார் சரமாரியாக தாக்கி உள்ளனர். நியாயம் கேட்க வந்த அவரது மகனையும் அடித்து உதைத்துள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக் ஸ்வரன்கர் (39). பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஐஐஎஸ்இஆர்) விஞ்ஞானியாக பணியாற்றினார். மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தார். கடந்த 11-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் மான்டி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. ஆத்திரத்தில் அபிஷேக்கை தள்ளிவிட்டார் மான்டி. நிலை தடுமாறி கீழே விழுந்த அபிஷேக் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இரண்டு சம்பவங்களுக்கும் காரணம்.... பார்க்கிங். முதல் சம்பவத்தில் சாதாரண உடையில் இருந்த போலீஸார் அதிகார தொனியில், ராணுவ அதிகாரியிடம் காரை எடுக்க கூறியிருக்கின்றனர். அவர் முடியாது என்று கூறியதால் ஆத்திரம். இருவருக்குமே தங்கள் அதிகாரத்தின் மீதுள்ளதுணிச்சல். இரண்டாவது சம்பவத்தில் நீயா, நானா போட்டி. ஆத்திரத்தில் மான்டி தள்ளிவிட விஞ்ஞானி அபிஷேக்கின் உயிர் பறிபோனது. இந்த இடத்தில் ‘பார்க்கிங்’ என்ற தமிழ்த் திரைப்படம், இரண்டு பேரின் ‘ஈகோ’வால் கொலை வரை சிந்திக்கும் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டியது.
எல்லா இடத்திலும் சந்திக்கும் பெரும் சிக்கல் ‘பார்க்கிங்’. வாகனம் வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த பிரச்சினையை சந்திப்பார்கள். இதற்கு தீர்வுதான் என்ன?
மக்கள்தொகை பெருக்கம், வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்பு ஒரு பக்கம், குறுகிய தெருக்கள், சாலைகள், ஆக்கிரமிப்புகள் மறுபக்கம். அரசு ஒன்றும் செய்ய முடியாது என்பது நிதர்சனம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. அதற்கான பார்க்கிங் கட்டமைப்புகள் இல்லை.
போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை, அபராதம் மட்டும் இதற்கு தீர்வாக இல்லை. நாமும் மாற வேண்டும். நமது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயாராக இருக்கிறது (அலுவலகம் அல்லது பார்க்கிங் வசதி உள்ள இடங்கள்) என்று தெரிந்தால் மட்டும் வாகனங்களை வெளியில் எடுப்பது. மற்ற நேரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது, சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது, நான்கைந்து பேர் சேர்ந்து போகும்போது மட்டும் கார் போன்ற தனி வாகனத்தில் செல்வது போன்ற சிறுசிறு முயற்சிகளை செய்யலாம்.
அதை விட்டுவிட்டு பார்க்கிங் ஏரியாவில் சண்டைக்கு நின்றால் பாதிப்பு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இருக்கும். தீர்வே இல்லாத ஒன்றுதான் இடியாப்ப சிக்கல். அப்படி இருக்கும்போது அதன் மூலத்தை கண்டுபிடித்து நூல் நூலாக பிரித்து விடுவேன் என்று நினைத்தால் இடியாப்பம் சிதைந்துவிடும். வாகனமும் நாமும் பாதுகாப்பாக இருப்பதற்கு விட்டுக் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT