Last Updated : 15 Mar, 2025 09:10 AM

2  

Published : 15 Mar 2025 09:10 AM
Last Updated : 15 Mar 2025 09:10 AM

Fake News: கூடு விட்டு கூடு பாயும் பொய்!

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய். எதை உறுதிப்படுத்த முன்னோர்கள் இதை சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது எல்லாமே சந்தேகமாக உள்ளது. தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டு பயம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என மின்னணு ஊடகங்களில் வரும் காட்சிகள், செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை அறிய முடியவில்லை.

ஒருவரை போலவே நடை, உடை, பாவனைகளுடன் ஒருவரை உருவாக்கி, சமூக வலைதளங்களில் கூடு விட்டுகூடு பாய விட்டால்... அதன் விளைவுகள் எப்படி இருக்கும். உண்மையிலேயே தெரிந்தவர் பேசுவது போல் பேசி நம்ப வைத்து மோசடிகள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

குற்றங்கள் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகள் வெளியிடும் போது உண்மையான குற்றவாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் படங்கள், காட்சிகள் காட்டப்படுகின்றன. அவை பெரும்பாலும் உண்மையான நபர்களுக்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன.

இது சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வீடியோக்களில் பிரபலங்கள், அல்லது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் முக சாயல் அமைந்துவிட்டால் ஒன்றுமே அறியாதவர்கள், குறிப்பாக பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது அரசியல் முதல் விளையாட்டு வரையில் ஊடுருவி, பார்ப்பவர்களை திகைக்க வைக்கிறது.

பிரதமர் மோடி நடனமாடுவது போன்ற வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியதும் இங்கு நினைவு கூரமுடியும். இது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் வழியாக ‘மாஸ் ஒப்பினியன்’ ஒன்றை உருவாக்கும் போக்கு மோசமானது, மோசடியானது. அப்படித்தான், “போதை கடத்தல், ராகிங், கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு செய்தி பரவியது.

உண்மையில் “போதை இல்லா இந்தியா”வை உருவாக்குவது குறித்து அமித்ஷா பேசியதை மாற்றி வெட்டி, ஒட்டி வேலை பார்த்திருக்கின்றனர். அடுத்து ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இது கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.

இந்தியா வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர், “பாரத் மாதா கீ ஜே”, “வந்தே பாரதம்” என்று ஆரவாரம் செய்வது போன்ற ஒரு வீடியோ பரவியது. அதை பார்த்த பலரும் ‘மெய்சிலிர்த்து’ போனார்கள். உண்மையில் அந்த வீடியோ கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதற்கும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கும் தொடர்பே இல்லை.

இப்படி பழைய வீடியோக்களை வெளியிடுவது, போலி வீடியோக்களை பரப்புவது, கருத்துகளை மாற்றி வெளியிடுவது போன்ற நிகழ்வுகள் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அது பெரும்பாலும் வன்முறைக்கே வழிவகுக்கிறது. ஒரு செய்தியை, வீடியோவை பார்த்த பின்னர் உடனடியாக உணர்ச்சிவசப்படாமல் அல்லது உடனடியாக நம்பி விடாமல்... கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்தான்... என்று நினைத்து உண்மையை அறிய புதுசா சிந்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x