Published : 13 Mar 2025 09:10 AM
Last Updated : 13 Mar 2025 09:10 AM
சென்னை நகரில் கார் வாங்க வேண்டுமென்றால் கார் நிறுத்துவதற்கான இடமிருக்கிறதா? என்பதை காண்பித்த பின்னரே கார் பதிவு செய்யப்படும் என்ற நடைமுறை வரவேற்கத்தக்கது. சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் படும் அவதியைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையும் ஏற்றுக் கொண்டு உடனே அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. புதிதாக கார் வாங்குவோர் அந்தக் காரை பதிவு செய்யச் செல்லும்போது, காரை நிறுத்துவதற்கான இடம் சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணத்தை காட்டினால் மட்டுமே அந்தக் கார் பதிவு செய்யப்படும்.
இதுதவிர, அகலமான சாலைகளில் கார்களை நிறுத்துவதற்காக தனி இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு கார் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. வீடுகளில் கார் நிறுத்தும் வசதி உள்ளவர்கள் சாலையில் ஒதுக்கப்பட்ட தனி இடங்களில் கார்களை நிறுத்த அனுமதியில்லை. அரசு ஒதுக்கும் இடங்களில் கார் நிறுத்த ‘பர்மிட்’ வழங்கப்பட உள்ளது. குலுக்கல் மற்றும் ஏல முறையில் இவை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பர்மிட்’ வைத்திருப்பவர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் கார் நிறுத்த முடியும். இதற்கு வசூலிக்கப்படும் தொகை பொதுப் போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை நகரில் 2022-ம் ஆண்டு கணக்குப்படி, 92 லட்சம் வாகனங்கள் உள்ளன. சுமார் 30 லட்சம் கார்களுக்கு நிறுத்துமிட வசதி தேவைப்படும் நிலையில், 14,000 இடங்கள் மட்டுமே தற்போது உள்ளன. இதிலும் பெரும்பாலானவை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கார் நிறுத்தும் நடைமுறைக்காக தமிழக அரசு முதல் முறையாக கொள்கையை உருவாக்கி அமல்படுத்த முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது.
சென்னை நகரில் அலுவலகம் செல்வோருக்கு தலையாய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில், அதற்கான தீர்வை நோக்கிய இந்த நகர்வு ஆறுதலளிக்கும் விஷயமாகும். இந்த உத்தரவை கண்டிப்புடன் செயல்படுத்துவதிலும் அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்படியாக தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும் இந்த உத்தரவை விரிவுபடுத்துவதும் அவசியம்.
பல இடங்களில் வர்த்தகரீதியான வாகனங்களை நெரிசல் மிகுந்த நேரங்களில் சாலையிலேயே நிறுத்திக் கொண்டு, சரக்குகளை இறக்குவது ஏற்றுவது போன்ற பணிகளையும் செய்கின்றனர். அதற்கும் உரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசியம். பல இடங்களில் நடுரோட்டிலேயே வாகனங்களை பிரித்துப் போட்டு பழுதுபார்க்கும் நடவடிக்கை காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
சில வீடுகளில் கார் நிறுத்தத்தை வெளியில் நடைபாதை வரை நீட்டி கேட் அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்தி மக்களின் இன்னல்களைக் குறைத்தால் சென்னை மிளிரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT