Last Updated : 11 Mar, 2025 08:18 AM

2  

Published : 11 Mar 2025 08:18 AM
Last Updated : 11 Mar 2025 08:18 AM

நீர்நிலை அருகே சோப்பு, ஷாம்பு விற்க தடை: நாட்டுக்கு வழிகாட்டும் நல்ல உத்தரவு!

கோப்புப் படம்

ஆறு, குளம் மற்றும் கோயில் குளங்களின் அருகே 500 மீட்டர் தொலைவிற்குள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களால் நீர்நிலைகள் அசுத்தமடைவதுடன், அந்த நீரைக் குடிக்கும் கால்நடைகள் பாதிப்படைவது மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, கோயில் குளங்கள் மற்றும் ஆறுகளில் புனித நீராடுதல் என்ற பெயரில் குளித்துவிட்டு ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லும் பழக்கத்தையும் கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குளிக்கும் இடங்களான குற்றாலம் நீர்வீழ்ச்சி, சுருளி அருவி, திருமூர்த்தி அணை, திற்பரப்பு மற்றும் திருச்சி அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களில் பொதுமக்கள் குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்திவிட்டு மீதமுள்ள பாக்கெட்டுகளை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதும், பயன்படுத்திய துணிகளை ஆற்றில் வீசுவதும் வாடிக்கையான நடைமுறையாகவே உள்ளது.

கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைசார்ந்த இடங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இயற்கையை மாசுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் உள்ளூர் மக்களே முன்வந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கண்டிக்கும் நிலையை பார்க்க முடியும். அந்த அளவுக்கு அவர்கள் இயற்கை மீதான அக்கறை மற்றும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர்.

இதுபோக, அரசு சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருந்துதான் வருகிறது. ஆனால், தமிழகத்தில் அத்தகைய விழிப்புணர்வு அரசுக்கும், மக்களுக்கும் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே. சுற்றுலா தலங்களில் எண்ணை தேய்த்து குளிப்பது, சோப்பு, ஷாம்பு பாக்கெட்டுகளை வீசி எறிவது, குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி எறிவது, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையற்ற பொருட்களை உண்ணக் கொடுப்பது, சாலையில் அடுப்பு பற்றவைத்து சமைப்பது என்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாகும்.

மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றும் வரும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலேயே கற்பிப்பதன் அவசியம் குறித்தும் சிந்திக்க வேண்டிய நேரமிது.

கர்நாடகாவின் உத்தரவைப் பின்பற்றி தமிழகமும் ஆறு, குளம், கோயில் குளம் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதிப்பதுடன் அந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவின் இந்த உத்தரவைநாடு முழுவதும் பின்பற்றினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாடு இன்னும் ஒருபடி முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x