Last Updated : 10 Mar, 2025 07:23 AM

1  

Published : 10 Mar 2025 07:23 AM
Last Updated : 10 Mar 2025 07:23 AM

வெயிட்டிங் லிஸ்ட்: ரயில்வே நிர்வாகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், டெல்லி, வாராணசி, பெங்களூரு, ஹவுரா சந்திப்பு, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் உள்ளிட்ட 60 ரயில் நிலையங்களில் இருக்கை உறுதியான பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டு வைத்திருப்போர், பயணச்சீட்டு இல்லாதோர் வெளியிலுள்ள காத்திருப்போர் அறையில் மட்டுமே அமரமுடியும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.

டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் கும்பமேளாவுக்கு செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான பயணிகள் முண்டியடித்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து ரயில்வே நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

இதுதவிர நெருக்கடியான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுக்க போர்க்கால அறை அமைத்தல், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தண்டவாளங்களை கடக்க உதவும் நடைமேம்பாலங்களின் அகலத்தை 20 அடி மற்றும் 40 அடி என இரண்டு விதமாக மாற்றி அமைத்தல் போன்ற முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளது.

குறிப்பாக, இந்த 60 ரயில் நிலையங்களிலும் நிலைய இயக்குநர் அந்தஸ்தில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. நெருக்கடி நேரங்களில் டிக்கெட்விற்பனையை குறைக்கவும், நிறுத்தவும் அவர் உத்தரவிடுவார் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. ஏனென்றால், டெல்லி சம்பவத்தில் ஒரு மணி நேரத்துக்கு 1,500 டிக்கெட் வீதம்விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில், அதை கண்காணித்து டிக்கெட் விற்பனையை நிறுத்தாததும் அசம்பாவிதம் நடக்க மற்றொரு காரணமாக அமைந்தது.

இதுபோன்ற நிர்வாக தவறுகளை சரிசெய்யும் வகையில் புதிய இயக்குநர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். ரயில் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கும் முடிவு மற்றுமொரு சிறப்பான முடிவாகும்.

அதேநேரம், முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருப்போர் அல்லது நடைமேடை டிக்கெட் வைத்திருப்போருக்கு ரயில் நிலையங்களுக்குள் அனுமதி உண்டா? அவர்கள் காத்திருப்போர் அறையில் இருக்க வேண்டும் என்றால் ரயிலில் பயணிக்க நடைமேடைகளுக்கு எப்போது அனுமதிக்கப்படுவர்? என்பது போன்ற சந்தேகங்களை ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியா ஜனநெருக்கடி மிகுந்த நாடாக மாறிவிட்ட நிலையில், ஒவ்வொரு துறையிலும் கூட்டநெரிசல் மேலாண்மை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, அதிகமான பயணிகளை கையாளும் ரயில்வே துறைக்கு கூட்ட நெரிசல் மேலாண்மை என்பது, வேறெந்த துறையையும்விட கூடுதலாக தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியை ரயில்வே நிர்வாகம் முதல்முறையாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியதே.

ரயில் நிலையங்களுக்கு வெளியில் உள்ள காத்திருப்போர் அறையும் வழக்கமான இடைஞ்சல் பகுதியாக இல்லாமல் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு பெரிய அளவில் அமைக்கவும், அங்கு காத்திருக்கும் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை போதுமான அளவில் உருவாக்குவது குறித்தும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட வேண்டும். அவை தரமான கட்டுமானப் பணிகளுடன் அமைவது அதைவிட முக்கியம். அப்போதுதான் எதிர்காலத்தில் டெல்லி சம்பவம் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x