Published : 07 Mar 2025 06:37 AM
Last Updated : 07 Mar 2025 06:37 AM
லண்டனில் தனது சிம்பொனியை மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்ற, வியாழன் (மார்ச் 6) அன்று விமானம் ஏறிவிட்டார் இளையராஜா. “சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல; நாட்டின் பெருமை” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பேசப்பட வேண்டிய வரலாறு உண்டு.
1993இல் இளையராஜா தனது முதல் சிம்பொனியை அமைக்கப்போகிறார் என்கிற செய்தி, இந்தியா முழுவதும் அனைத்து இதழ்களிலும் பரபரப்புச் செய்தியாக மாறியது. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் அது குறித்து விரிவாக எழுதின. நாடாளுமன்றத்தில் இளையராஜாவின் சிம்பொனி குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைகோ முன்வைத்தார்.
சென்னை மாநகர் முழுவதும் பல அமைப்புகள் சுவரொட்டிகளை ஒட்டித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. திரைத் துறையினர் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ‘அடையாறு மாணவர் நகலகம்’ உரிமையாளர் அருணாசலம் பெரியார் திடலில் இசைஞானிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்தார்.
சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இசைஞானி, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது ‘இந்தச் சாதனையைத் தமிழர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாரிடம் பகிர்ந்துகொள்வது’ என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது.
ஆனால், பதிவுசெய்யப்பட்ட இசைக் கோவை வெளியீடு கெடுவாய்ப்பாகத் தள்ளிப்போனது ஏன் என்கிற கேள்வி விவாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல மங்கிப்போனது. அது குறித்துக் கேள்வி கேட்கப்படும்போது, விரைவில் வெளிவரும் என்கிற பதிலோடு கடந்துவிடுவார் இளையராஜா. பெரும் இடைவெளிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அமரன், தனது அண்ணன் இப்போது சிம்பொனி எழுதிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லிச் சற்று ஆர்வத்தைக் கிளறினார்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் இளையராஜாவுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் சரிவர அளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவிவருகிறது. இளையராஜாவின் ரசிகர்களும் அரசியல் தலைவர்களும்கூட இதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.
அவருக்குப் பின் வந்தவர்களும், பிற துறைகளில் இளையவராக இருந்தவர்களும்கூட இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர். இளையராஜா மீதான இந்த அலட்சியத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு நீண்ட அறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 28.1.2008 அன்று வெளியிட்டார்.
அதில் ‘இசைத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரிய பங்காற்றிப் பெரும் பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. அவரைப் போன்ற மாமேதைகளுக்கு பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளை வழங்குவதில் தாமதம் இருக்கக் கூடாது.
விருது வழங்காமல் இருப்பதும்கூட ஒருவகையில் அவமானப்படுத்தும் செயல்தான்’ என்று காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார். வைகோவும் தனது கருத்தை அப்போது பதிவுசெய்திருந்தார். ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் ஏன் இதை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் போயின என்பது புதிர்.
இது ஒருபக்கம் என்றால், அண்மைக் காலமாகச் சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் திடீரென அதிகரித்தன. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. தனது உரிமையிலும் படைப்பிலும் அவர் உறுதியாக நின்று முன்னேறினார். சொல்லப்போனால், தன்னைப் பற்றி வெளியிடப்பட்ட அவதூறுகளுக்கு நடுவே, புதிய சிம்பொனியை எழுதி முடித்துவிட்டார்.
“யார் என்னைத் திட்டினாலும் கவலையில்லை. நான் எனது வேலையில் கவனமாக இருக்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொன்னார். இதேபோன்ற வாக்கியத்தை இசை மேதை மொசார்ட்டும் பயன்படுத்தியிருக்கிறார். “யார் என்னைப் புகழ்ந்தாலும் பழித்தாலும் அதில் நான் கவனம் செலுத்த மாட்டேன். எனது சொந்த உணர்வுகளையே நான் பின்பற்றுகிறேன்” என்று மொசார்ட் கூறியிருப்பது இளையராஜாவுக்கும் பொருந்தும்.
மொசார்ட் பிறந்த நகரமான ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரம் அவருக்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவரைப் போன்ற மற்ற பெரும் இசைக் கலைஞர்களான பாஹ் (எய்சனாஹ்), ஜோசப் ஹைடன் (வியன்னா), பீதோவன் (பான்) உள்ளிட்டவர்களின் பிறந்த இடமோ அல்லது அவர்களின் படைப்புகள் உருவான இடமோ கொண்டாட்டத்துக்கு உரிய பகுதிகளாக இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. இவர்களின் இல்லங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவதை இப்போதும் காண முடியும்.
ஒருவேளை, மேற்கத்திய நாடொன்றில் இளையராஜா பிறந்திருந்தால் அவரும் கொண்டாடப்பட்டிருப்பார். ஏனென்றால், அவர் சாதித்த சாதனை அவ்வளவு பிரம்மாண்டமானது. இந்த 82 வயதுக்குள் 1,500 திரைப்படங்கள், 8,000க்கும் மேற்பட்ட பாடல்கள், தனி ஆல்பங்கள், ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகள், கவிதைகள், ஒளிப்படங்கள், திரைப்படத் தயாரிப்புகள், திருவாசகம் சிம்பொனி எனக் கடந்திருக்கிறார்.
கர்னாடக இசையில் பஞ்சமுகி, ராஜலஹரி என்கிற புதிய ராகங்களை உருவாக்கிப் பிரவாகமெடுத்த இளையராஜா, இப்போது தனது முதல் அசல் சிம்பொனிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இதன் மூலம், மேற்கத்தியச் செவ்விசையின் மரபில் ஒருவராக இணைந்திருக்கிறார்.
மேற்கத்தியச் செவ்வியல் இசை மரபில் சிம்பொனி மணி மகுடமாக விளங்குகிறது. மத்தியக் காலத்தில் தோன்றிய சிம்பொனி எனும் செவ்வியல் மரபு இசைக் கோவையை இதுவரை 2,822 பேர் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இரண்டு பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஒருவர் இளையராஜா (1993), மற்றொருவர் சிதார் மேதை ரவிசங்கர் (2010). இந்த இரண்டு பேரின் சிம்பொனிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இருவருமே இந்திய இசை மரபை அதில் கலந்து, தமது சிம்பொனிகளைப் படைத்திருந்தனர். அதாவது, தூய சிம்பொனி (pure symphony) இல்லை.
ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய சிம்பொனியில் அவர்களது நாட்டின் செவ்விசைத் தாக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ரவிசங்கர் தமது சிம்பொனியில் சிதாரையும் தபேலாவையும் சேர்த்தார். தூய சிம்பொனியாகக் கருதப்படாததால் தமது முதல் சிம்பொனியை இளையராஜா வெளியிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விமர்சனம் வரக் கூடாது என்கிற கவனத்துடன் தனது ‘வேலியன்ட்’ (Valiant) சிம்பொனியைத் தூய சிம்பொனி என்று அழைக்கிறார் இளையராஜா. அந்த வகையில், தூய சிம்பொனியை அமைத்த முதல் இந்தியர் என்கிற வரலாற்றினை அவர் படைக்கிறார். இதை உரிய முறையில் கொண்டாட வேண்டியது அறிவும் அறமும் நிறைந்த சமூகத்தின் கடமை. ஆனால், இளையராஜா இப்போது சிம்பொனியைப் படைத்திருக்கையில் சக இசைப் படைப்பாளிகளின் கனத்த அமைதியைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
மொசார்ட்டின் சம காலத்தவரும் அவரை விட மூத்தவரும் சிம்பொனியின் தந்தை என அழைக்கப்படுபவருமான ஜோசப் ஹைடன் (1732-1809) மொசார்ட்டைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “ஒரு நேர்மையான மனிதனாகக் கடவுளின் முன் சொல்கிறேன். உனது மகன் மொசார்ட்டை நேரடியாகவும் அவரது புகழின் மூலமாகவும் அறிவேன். இசைக் கோப்பின் உயர்ந்த திறமையையும், அதன் சுவையையும் அறிந்தவர் அவர்.
மொசார்ட் இசையின் அவதாரம்.” இப்படிக் கூறும் மனப்பக்குவமும் திறமையும் யாருக்கு இருக்கிறது என்கிற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்... இவ்வளவு சாதித்தும் இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னாவைப் பெறுவதற்கு வேறு என்ன கூடுதல் தகுதி வேண்டும்? மேதைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடும் தகுதியை வளர்த்துக்கொள்ளாத சமூகமாக இருப்பதிலிருந்து விடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பு. வீரம் மிக்கவர் என்ற பொருள் தரும் Valiant சிம்பொனியை வழங்கும் இளையராஜா, விரைவில் பாரத ரத்னாவாகச் சிறப்பிக்கப்படுவார் என்று நம்புவோம்.
- தொடர்புக்கு: writersannah@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT