Published : 07 Mar 2025 08:46 AM
Last Updated : 07 Mar 2025 08:46 AM
மத்திய தொழில்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பிரிவின் தென் பிராந்தியத்தில் 60 சதவீதம் பணியாளர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்று அந்த படைப் பிரிவின் ஐஜி சரவணன் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
தென் மாநிலங்களில் படைப்பிரிவுக்கான ஆள்தேர்வு தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். விமான நிலையங்களில் ஏற்படும் மொழிப் பிரச்சினையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் அறிவித்திருப்பது தென் மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றபோது, கோவா விமான நிலையத்தில், அவரிடம் இந்தியில் பேசுமாறு மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர் கூறியதும், இந்தி தெரியாது என்று சொன்னதால் சர்ச்சை எழுந்தது. அவரிடம் பாதுகாப்பு படை வீரர் “நீங்கள் இந்தியர் தானே, தேசிய மொழியான இந்தி ஏன் தெரியாது” என்று கேட்டபோது, “இந்தி தேசிய மொழியல்ல; அலுவல் மொழி மட்டுமே” என்று அந்தப் பெண் பதிலளிக்க வாக்குவாதமாக மாறியது. இதன்பின்னர், கோவா விமான நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தமிழகத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர். அதேபோன்று, திமுக எம்பி கனிமொழி சென்னை விமான நிலையம் சென்றபோது மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இந்தியில் ஏதோ தெரிவித்துள்ளார். “எனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்று அவர் சொன்னதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் எப்படி இந்தியர் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
தென் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை மனதில் வைத்து உள்ளூரைச் சேர்ந்தவர்களை படை வீரர்களாக தேர்வு செய்யவும், மற்றவர்களுக்கு அடிப்படை மொழிப் பயிற்சி அளிக்கவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை, பெங்களூரு, கொச்சி, டெல்லி, மும்பை, லடாக், நகர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட முக்கிய விமான நிலையங்களின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கும் தொழில் பாதுகாப்பு படையின் பணி பாராட்டுக்குரியது. அதேநேரம், மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமே அவர்களது பிரதான பணியாக இருக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற மொழி விவாதங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. அதற்குரிய அறிவுறுத்தல்களை உயர் அதிகாரிகள் தங்கள் படை வீரர்களுக்கு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, நாட்டின் பல மாநில மக்களுக்கும் அவர்களது மொழி, கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் ஆள்தேர்வு பணியை மேற்கொள்வதே தேச முக்கியத்துவம் வாய்ந்த பணியை மேற்கொள்ளும் சிஐஎஸ்எஃப் போன்ற அமைப்பிற்கு மேலும் பெருமை சேர்க்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT