Last Updated : 05 Mar, 2025 06:19 AM

1  

Published : 05 Mar 2025 06:19 AM
Last Updated : 05 Mar 2025 06:19 AM

மக்களவை மறுவரையறை: சிக்கல்களும் தீர்வுகளும்

“மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு தமிழகத்துக்கு ஆபத்தாக முடியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்கிற வேண்டுகோளோடு இன்று (5.3.2025) அனைத்துக் கட்சிகளையும் கூட்டுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது ஒரு கற்பனை பயம், அச்சப்படத் தேவையில்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன.

மக்களவை மறுசீரமைப்பு தமிழகத்துக்குக் கிடைத்துவரும் அதிகாரப் பகிர்வைக் குறைத்துவிடும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதே ‘கருத்துப் பேழை’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன் (’தமிழகம் ஏன் தண்டிக்கப்படுகிறது?’, 23.9.2021). அப்போதைக் காட்டிலும் இப்போது அபாயம் அதிகரித்துவிட்டது. எப்படி?

தொடரும் தாமதம்: பத்தாண்​டுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு 2021இல் நடந்திருக்க வேண்டும். கரோனாவால் அது தள்ளிப்​போனது. அந்தக் கட்டுரையை எழுதி​ய போது கணக்கெடுப்பு 2022இல் நடந்து​விடும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு நாளதுவரை நடக்க​வில்லை. எப்போது நடக்கும் என்கிற தெளிவுமில்லை. 2002ஆம் ஆண்டில் நிறைவேற்​றப்பட்ட அரசியல் சட்டத் திருத்​தத்​தின்படி 2026க்குப் பிறகு நடத்தப்​படும் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பின் அடிப்​படையில் தொகுதிகள் சீரமைக்​கப்பட வேண்டும்.

2021இல் (அல்லது 2022இல்) மக்கள்தொகை கணக்கிடப்​பட்​டிருந்​தால், அடுத்த கணக்கீடு 2031இல் (அல்லது 2032இல்) நடந்திருக்​கும். மறுசீரமைப்பு என்னும் கத்தி அப்போதுதான் கீழிறங்கி இருக்​கும். ஆனால் 2021 மக்கள்​தொகைக் கணக்கீட்டை மத்திய அரசு தாமதித்து​வரு​வ​தால், அதை 2026இல் நடத்தி, அதற்கடுத்த ஆண்டே மறுவரையறை செய்யக்​கூடும் என்கிற அச்சம் இப்போது ஏற்பட்​டிருக்​கிறது.

என்ன ஆபத்து? - நமது அரசமைப்புச் சட்டத்தின் 81ஆவது பிரிவின்படி ஒவ்வொரு மாநிலமும் அதனதன் மக்கள்​தொகையின் வீதத்தில் நாடாளுமன்ற இடங்களைப் பெறும்; இந்த இடங்கள் பத்தாண்​டுக்கு ஒரு முறை வரையறை செய்யப்​படும். அவ்விதமே 1951, 1961, 1971ஆம் ஆண்டு​களில் நடந்த மக்கள்​தொகைக் கணக்கெடுப்பின் அடிப்​படையில் மறுவரையறை நடந்தது. ஒவ்வொரு முறையும் மக்கள்தொகை கூடியது, நாடாளுமன்ற இடங்களும் கூடின; ஆனால், தமிழகத்தின் பிரதி​நி​தித்துவம் கூடவில்லை.

எழுபதுகளுக்குப் பிறகு மக்கள்​தொகைக் கட்டுப்பாடு வேகமெடுத்தது. இதைத் தென் மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தின. மக்களவையில் இந்த மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் குறைந்து​விடக் கூடாது என்பதற்காக இந்திரா காந்தியின் அரசு, 1976இல் நாடாளுமன்ற உறுப்​பினர்​களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டு​களுக்கு (அதாவது 2001 வரை) மாற்றப்​ப​டாமல் இருக்​குமென்று ஓர் அரசியல் சட்டத் திருத்​தத்தைக் கொணர்ந்தது. 2002இல் வாஜ்பாய் அரசும் இன்னொரு திருத்​தத்தின் வாயிலாக இந்தக் கால அவகாசத்தை மேலும் 25 ஆண்டு​களுக்கு (2026 வரை) நீட்டித்தது. இப்போது 2026இல் மறுவரையறை நடந்தால் என்ன ஆகும்?

மறுவரையறை - இரண்டு முறைகள்: கார்னெகி அறக்கட்டளை (CEIP) என்கிற அமைப்பு, 2026 மக்கள்​தொகையை மதிப்​பிட்டு அதன் அடிப்​படையில் நாடாளுமன்ற இடங்களைக் கணக்கிட்​டிருக்​கிறது. இதன்படி தமிழகம் எட்டு இடங்களை இழக்கும். ஐந்து தென் மாநிலங்​களும் சேர்ந்து 26 இடங்களை இழக்கும். உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்​தான், மத்தியப் பிரதேசம் ஆகிய இந்தி பேசும் நான்கு மாநிலங்கள் மட்டும் 31 இடங்களைக் கூடுதலாகப் பெறும். தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் 5% குறையும். நான்கு வட மாநிலங்​களின் விகிதம் 6% கூடும்.

இன்னொரு முறை, எந்த மாநிலத்​துக்கும் இப்போதுள்ள இடங்களைக் குறைக்​காமல் சீரமைப்பது. இதன்படி மாக்மில்லன் என்னும் ஆய்வாளர், குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளத்தின் இடங்களை (20) நிலை நிறுத்​திக்​கொண்டு, அதனடிப்​படையில் மற்ற மாநிலங்​களின் இடங்களை மதிப்​பிட்​டிருக்​கிறார். இதன்படி தமிழகம் 49 இடங்களைப் பெறும் (இப்போது 39).

உத்தரப் பிரதேசத்தின் இடங்களோ 143ஆக உயரும் (இப்போது 80). அவையின் மொத்த இடங்கள் 848ஆக உயரும் (இப்போது 543). புதிய நாடாளு​மன்றம் 888 இடங்களோடு கட்டப்​படிருப்பது எதேச்​சை​யானதல்ல! இதன்படி, தென் மாநில இருக்கைகள் 164 ஆகும் (இப்போது 129). மேற்குறிப்​பிட்ட நான்கு வட மாநில இருக்கைகள் மட்டும் 324 ஆகும் (இப்போது 174). இதிலும் தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் 5% குறையும். இந்த நான்கு வட மாநிலங்​களின் விகிதம் 6% கூடும்.

இரண்டு ஆலோசனைகள்: இவ்விரண்டு முறைகளில் எவ்விதம் மறுவரையறை செய்யப்​பட்​டாலும் அது தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்து​வத்தைக் குறைக்​கும். ஆய்வாளர்கள் சில ஆலோசனைகளை முன்வைக்​கிறார்கள். முதலாவது அமெரிக்க மாடல். அமெரிக்​காவில் இரண்டு அவைகள் உள்ளன. கீழவையில் ஒவ்வொரு மாநிலத்​துக்கும் மக்கள்​தொகையின் விகிதத்தில் இடங்கள் இருக்​கும்.

மேலவையில் எல்லா மாநிலங்​களுக்​கும், அவற்றின் மக்கள்தொகை கூடுதலா​னாலும் குறைவா​னாலும், தலா இரண்டு இடங்கள் இருக்​கும். இதைப் பின்பற்​றலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். இந்த மாதிரியில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. இதிலும் கீழவையில் தென் மாநிலங்கள் இடங்களை இழக்கும். தவிர, அமெரிக்​காவில் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்​கள்தான் நகர்மய​மானவை, வருவாயும் வளர்ச்சியும் அதிகமுள்ளவை. இந்தியாவில் இது நேரெதிர். ஆகவே இந்த மாதிரி நமக்குப் பொருந்தாது.

இன்னொரு ஆலோசனை, கருவள விகிதம் தொடர்​பானது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஈன்று புறந்​தரும் பிள்ளை​களின் சராசரி எண்ணிக்கை கருவள விகிதம் (Total Fertility Rate, TFR) எனப்படு​கிறது. 1971இல் இந்தியாவின் கருவள விகிதம் 5.5ஆக இருந்தது. அதாவது, அப்போது ஓர் இந்தியப் பெண்மணி சராசரியாக 5.5 குழந்தை​களைப் பெற்றார். இது 2011இல் 2.54ஆகக் குறைந்தது. இந்த விகிதம் 2.1ஆக இருந்​தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படும். அந்த விகிதத்தில் பிள்ளைப்பேறு நிகழ்ந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் நிலையாக இருக்​கும்.

இந்தியாவின் கருவள விகிதம் குறைந்து​வருவது நல்ல செய்தி. ஆனால், இது எல்லா மாநிலங்​களிலும் ஒரே மாதிரியாக இல்லை. 2011இல் மேற்குறிப்​பிட்ட நான்கு மாநிலங்கள் உள்ளிட்ட ஏழு வட மாநிலங்​களில் இது பதிலீட்டு விகிதத்தைவிட அதிகம் (2.6 முதல் 3.2). தென் மாநிலங்​களில் இந்த விகிதம் மிகக் குறைவு (1.7 முதல் 1.8).

இதையொட்டிச் சில ஆய்வாளர்கள் சொல்லும் ஆலோசனை இது: இந்தியாவின் மக்கள் தொகை நிலைபெறும் வரை இப்போதுள்ள நாடாளுமன்ற இடங்களைப் பின்பற்​றலாம். அதன் பிறகு, மக்கள்தொகை அடிப்​படையில் இடங்களைப் பிரிக்​கலாம். இது பிரச்சினையை ஒத்திப்​போடுவது மட்டுமல்ல, அப்படிப் பின்னாளில் மறுவரையறை செய்யும்போது தென் மாநிலங்​களின் மக்கள்தொகை மேலும் குறைந்​திருக்​கும், வட மாநிலங்​களின் மக்கள்தொகை மேலும் கூடியிருக்​கும். ஆகவே இந்த ஆலோசனையும் நமக்கு உகந்ததன்று.

என்ன செய்ய​லாம்? - நாம் ஏன் நாடாளு​மன்​றத்தில் நமது பிரதி​நி​தித்துவம் குறையக் கூடாது என்று விரும்​பு​கிறோம்? ஏனெனில், நமது அரசமைப்பில் மத்திய அரசிடம்தான் அதிகாரமும் நிதியும் குவிந்து கிடக்​கின்றன. அதைப் பரவலாக்கி மாநிலங்​களுக்கு வழங்கி​விட்டால் இந்தக் கோரிக்கையின் அழுத்தம் குறையும். பல மேலை நாடுகளில் பாதுகாப்பு, அயலுறவு, ரயில்வே, பேரிடர் நிவாரணம், மானியங்கள் முதலானவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்​பாட்டில் இருக்​கின்றன.

ஹாங்காங் இன்னொரு எடுத்​துக்​காட்டு. அது சீனாவின் மாகாணங்​களில் ஒன்று, ஆனால் தன்னாட்​சி​யுடன் இயங்கு​கிறது. நாணயம், குடியுரிமை, நீதித் துறை, வரி வசூல் முதலானவற்றை ஹாங்காங் தனியாகக் கையாள்​கிறது. இந்த அயல்நாட்டு மாதிரி​களைப் பரிசீலித்து, இந்தியா தனக்கு இசைவானவற்றை எடுத்​துக்​கொள்​ளலாம்.

மாநிலங்கள் தன்னாட்சி பெறுகிறவரை, நாடாளு​மன்றம் இப்போதைய இடப்பகிர்வின் அடிப்​படை​யிலேயே இயங்க வேண்டும். அதுதான் சிறப்​பாகச் செயல்​பட்டு​வரும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்​களுக்கு அளிக்​கப்​படும் நீதியாக இருக்​கும். அதற்காக அரசியல் சட்டம் திருத்​தப்பட வேண்டும். தென் மாநிலங்கள் ஒருங்​கிணைய வேண்டும் என்கிற குரல்கள் எழுந்​திருப்பதன் பின்னணி இதுதான்!

- தொடர்புக்கு; Mu.Ramanathan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x